அந்த பையனோட பேட்டிங், எனது ஆரம்பக்கால பேட்டிங்கை நினைவூட்டுகிறது..! இளம் இந்திய வீரருக்கு சேவாக் புகழாரம்

By karthikeyan VFirst Published Mar 31, 2021, 2:25 PM IST
Highlights

ரிஷப் பண்ட்டின் துணிச்சலான அதிரடி பேட்டிங், தனது ஆரம்பக்கால பேட்டிங்கை நினைவூட்டுவதாக சேவாக் தெரிவித்துள்ளார்.
 

இந்திய அணியின் இளம் வீரர் ரிஷப் பண்ட். தோனிக்கு அடுத்த இந்திய அணியின் விக்கெட் கீப்பரான ரிஷப் பண்ட், கெரியரின் தொடக்கத்தில் சீரான ஆட்டத்தை வெளிப்படுத்தாமல் அவ்வப்போது சொதப்பியதால், அவர் மீதான நம்பகத்தன்மை கேள்விக்குறியானது. அதனால் இந்திய ஒருநாள் மற்றும் டி20 அணிகளிலிருந்து ஓரங்கட்டப்பட்ட ரிஷப் பண்ட், டெஸ்ட் கிரிக்கெட்டில் அபாரமாக ஆடி, மீண்டும் ஒருநாள் மற்றும் டி20 அணிகளில் இடம்பெற்றார்.

ஆஸி.,க்கு எதிரான டெஸ்ட் தொடரில் அபாரமாக ஆடி மேட்ச் வின்னிங் இன்னிங்ஸ் ஆடிய ரிஷப் பண்ட், இங்கிலாந்துக்கு எதிராகவும் மேட்ச் வின்னிங் இன்னிங்ஸ்களை ஆடினார். இங்கிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்ட்டில் சதமடித்து, அதே தன்னம்பிக்கையுடன் டி20 கிரிக்கெட்டில் அசத்தினார்.

ஒருநாள் தொடரின் முதல் போட்டியில் ஆடாத ரிஷப் பண்ட், 2வது போட்டியில் அதிரடியாக ஆடி 40 பந்தில் 77 ரன்களையும், 3வது போட்டியில் 62 பந்தில் 78 ரன்களையும் குவித்தார்.

முன்பெல்லாம், சூழலுக்கும் பந்துக்கும் ஏற்ப ஆடாமல், தவறான ஷாட்டை ஆட முயன்று மொக்கையாக ஆட்டமிழந்துகொண்டிருந்த ரிஷப் பண்ட், இப்போதெல்லாம், அடிக்க வேண்டிய பந்துகளை அடித்தும், மற்ற பந்துகளில் சிங்கிள் ரொடேட் செய்தும் முதிர்ச்சியான ஆட்டத்தை வெளிப்படுத்துகிறார். 

முதிர்ச்சியுடன் ஆடும் அதேவேளையில், கொஞ்சம் கூட பயமே இல்லாமல், எந்தவிதமான இக்கட்டான சூழலிலும் துணிச்சலுடன் ஆடி, எதிரணிகளை அச்சுறுத்தும் அசாத்திய இன்னிங்ஸை ஆடுகிறார் ரிஷப் பண்ட்.

ரிஷப் பண்ட்டை பார்க்கும்போது இடது கை சேவாக் ஆடுவதை பார்ப்பதை போல் உள்ளதாக பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் இன்சமாம் உல் ஹக் ஏற்கனவே புகழாரம் சூட்டியிருந்த நிலையில், அதை வழிமொழியும் விதமாக, ரிஷப் பண்ட்டின் பேட்டிங் தனது ஆரம்பக்கால பேட்டிங்கை நினைவூட்டுவதாக சேவாக்கே தெரிவித்துள்ளார்.


 
இதுகுறித்து பேசிய வீரேந்திர சேவாக், இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் இந்தியாவிற்கு மிக நல்ல விஷயமாக அமைந்தது என்னவென்றால், ரிஷப் பண்ட்டின் பேட்டிங் தான். ஒருநாள் போட்டிகளில் 2வது பவர்ப்ளே வரும்போது மிடில் ஆர்டரில் களத்திற்கு வரும் ரிஷப் பண்ட், அதை பயன்படுத்தி அடித்து நொறுக்குகிறார். பாசிட்டிவான மைண்ட்செட்டில் சிறப்பாக ஆடுகிறார். அவரது துணிச்சலான பேட்டிங், எனது ஆரம்பக்கால பேட்டிங்கை நினைவூட்டுகிறது. வெளியில் இருப்பவர்கள் தன்னை பற்றி என்ன பேசுகிறார்கள் என்பதை பற்றியெல்லாம் கொஞ்சம் கூட கவலைப்படாமல், களத்திற்கு சென்று தனது இயல்பான ஆட்டத்தை ஆடுகிறார். வெள்ளைப்பந்து கிரிக்கெட்டின் அடுத்த சூப்பர் ஸ்டார் ரிஷப் பண்ட் என்று சேவாக் புகழாரம் சூட்டியுள்ளார்.
 

click me!