டி20 உலக கோப்பை அரையிறுதியில் இங்கிலாந்திடம் படுதோல்வி அடைந்த இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா, பவுலிங் சரியில்லாததுதான் தோல்விக்கு காரணம் என்று கூறிய நிலையில், இந்திய அணியின் டாப் ஆர்டர் பேட்டிங் சரியாக ஆடாதது தான் தோல்விக்கு காரணம் என்று வீரேந்திர சேவாக் விளாசியுள்ளார்.
டி20 உலக கோப்பை தொடரில் அடிலெய்டில் இந்தியா - இங்கிலாந்து இடையேயான அரையிறுதி போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணியில் ராகுல்(5), ரோஹித்(28 பந்தில் 27 ரன்கள்), சூர்யகுமார் யாதவ் (14) ஆகிய மூவரும் ஏமாற்றமளித்தனர். விராட் கோலி (40 பந்தில் 50 ரன்கள்) மற்றும் ஹர்திக் பாண்டியாவின் (33 பந்தில் 63 ரன்கள்) அதிரடி அரைசதங்களால் 20 ஓவரில் 168 ரன்கள் அடித்தது இந்திய அணி. 15வது ஓவரில் தான் இந்திய அணி 100 ரன்களையே எட்டியது. கடைசி 5 ஓவரில் ஹர்திக் பாண்டியாவின் அதிரடியான பேட்டிங்கால் 68 ரன்களை குவித்தது இந்திய அணி. அதனால் தான் 20 ஓவரில் 168 ரன்கள் அடித்தது இந்திய அணி.
169 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர்கள் ஜோஸ் பட்லர் - அலெக்ஸ் ஹேல்ஸ் அபாரமாக பேட்டிங் ஆடினர். இந்திய அணி அவர்களது விக்கெட்டை வீழ்த்தும் வாய்ப்பைக்கூட உருவாக்கவில்லை. அந்தளவிற்கு மிகச்சிறப்பாகவும் நேர்த்தியாகவும், அதேவேளையில் அடித்தும் ஆடிய இருவரும் அரைசதம் அடித்தனர். புவனேஷ்வர் குமார், ஷமி, அஷ்வின் என இந்திய அணியின் சீனியர் பவுலர்களின் பவுலிங்கை பவுண்டரியும் சிக்ஸருமாக அடித்து தெறிக்கவிட்டனர்.
undefined
பட்லர் 49 பந்தில் 80 ரன்களையும், அலெக்ஸ் ஹேல்ஸ் 47 பந்தில் 86 ரன்களையும் குவிக்க, விக்கெட் இழப்பின்றி 169 ரன்கள் என்ற இலக்கை அடித்து இங்கிலாந்து 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று ஃபைனலுக்கு முன்னேறியது. ஜோஸ் பட்லர் - அலெக்ஸ் ஹேல்ஸ் இணைந்து 170 ரன்களை குவித்தனர்.
ப
இந்த போட்டியில் இந்திய அணியின் பவுலிங் படுமோசமாக இருந்தது. தனது பெரிய பலமான இன்ஸ்விங்கை வீசாமல் புதிய பந்தில் பவர்ப்ளேயில் ஸ்லோ டெலிவரியையும், அவுட்ஸ்விங்கையும் வீழ்த்தி தேவையில்லாததை எல்லாம் முயற்சி செய்தார் புவனேஷ்வர் குமார். அர்ஷ்தீப் சிங் நன்றாக வீசினார். ஷமியின் பவுலிங்கை அடித்து நொறுக்கினர். இந்த தொடர் முழுக்க இந்திய அணியின் பலவீனமாக இருந்த ஸ்பின் பவுலிங், இந்த போட்டியிலும் படுமோசமாக இருந்தது. அஷ்வின் பவுலிங்கில் 2 ஓவரில் 27 ரன்களை குவித்தனர். அக்ஸர் படேல் 4 ஓவரில் 30 ரன்களை வழங்கினார். இந்திய பவுலர்களால் இங்கிலாந்தின் ஒரு விக்கெட்டை கூட வீழ்த்த முடியவில்லை என்பதுதான் பெரும் ஏமாற்றமும் வருத்தமும் அளிக்கக்கூடிய விஷயம்.
டி20 உலக கோப்பையில் முதலிடத்தை பிடித்து வரலாற்று சாதனை படைத்த ஜோஸ் பட்லர் - அலெக்ஸ் ஹேல்ஸ் ஜோடி
அரையிறுதியில் இங்கிலாந்திடம் தோற்ற பின் பேசிய இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா, பெரும் ஏமாற்றம். கடைசி சில ஓவர்களில் எங்கள் பேட்டிங் நன்றாக இருந்தது. ஆனால் பவுலிங்கில் சிறப்பாக செயல்படவில்லை. இதுமாதிரியான அழுத்தம் நிறைந்த நாக் அவுட் போட்டிகளில் அழுத்தத்தை எப்படி கையாள்கிறோம் என்பதுதான் முக்கியம். இந்திய வீரர்கள் அனைவரும் ஐபிஎல்லில் அழுத்தத்தை சமாளித்து ஆடிய அனுபவம் கொண்டவர்கள்தான். பொறுமையாக நிதானமாக தெளீவாக செயல்பட வேண்டும். உண்மையை சொல்ல வேண்டுமென்றால், இங்கிலாந்து தொடக்க வீரர்களுக்குத்தான் கிரெடிட் கொடுத்தாக வேண்டும்.
முதல் ஓவரில் ஸ்விங் இருந்தது. முதல் ஓவரில் பந்து ஸ்விங் ஆனது. ஆனால் சரியான இடத்தில் பந்துவீசவில்லை. ஸ்கொயர் திசைகளில் தான் அதிக ரன்களை ஸ்கோர் செய்தார்கள். அது நன்றாக தெரிந்தும் அதை தடுக்க முடியவில்லை. இதே அடிலெய்ட் ஆடுகளத்தில் வங்கதேசத்துக்கு எதிராக ஆடியபோது காட்டிய கேரக்டரை இந்த போட்டியில் காட்டவில்லை. கடைசி 9 ஓவரில் 85 ரன்களை தடுப்பது என்பது மிகக்கடினம். அழுத்தமான சூழல்களில் நிதானமாக இருந்து திட்டங்களை சரியாக செயல்படுத்தினால் வெற்றி பெறலாம். ஆனால் இன்றைக்கு நாங்கள் அதை செய்யவில்லை என்றார் ரோஹித் சர்மா.
இந்நிலையில், இந்திய அணியின் தோல்வி குறித்து பேசிய வீரேந்திர சேவாக், டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் 12 ஓவரில் 82 ரன்கள்(77) அடித்தால், பின்னால் வரும் பேட்ஸ்மேன்கள் மட்டும் பயமில்லாத கிரிக்கெட் ஆடி எஞ்சிய 8 ஓவரில் 100 ரன்கள் அடிக்க வேண்டுமா..?இது சரியல்ல. அடிலெய்டில் சராசரி ஸ்கோர் 150-160 ரன்கள் தான். அதை அடித்துவிட்டீர்கள். ஆனால் ஒரு பிட்ச்சில் அந்த குறிப்பிட்ட நாளில் நன்றாக ஆடினால் அப்போது இதுமாதிரியான நிர்ணயிக்கப்பட்ட எண்கள் எல்லாம் மேட்டரே இல்லை. நாம் அடிப்பதுதான் ஸ்கோர். வான்கடே, ஃபெரோஷ் ஷா கோட்லா, சென்னை சேப்பாக்கம் ஆகிய ஆடுகளங்களில் அதை பார்த்திருக்கிறோம்.
ஆஸ்திரேலியாவிற்கு எதிரான முதல் போட்டியில் நியூசிலாந்து அணி அபாரமாக ஆடி பெரிய ஸ்கோர் அடித்தது. ஆனால் அந்த அணி அரையிறுதியில் அதை செய்ய தவறிவிட்டது. நாமும் அதை செய்யவில்லை. இந்திய அணி நல்ல ஸ்கோரை அடித்து தோற்றிருந்தால் அது பவுலர்களின் தவறு என்று ஏற்றுக்கொள்ளலாம். ஆனால் இந்த தோல்வியில் பவுலர்களின் தவறு என்பதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது. முதல் 10 ஓவர்களில் இந்திய அணி ஆடிய பேட்டிங் நாம் எதிர்பார்த்த மாதிரி இல்லை. அப்போதே இந்திய அணி தோல்வியடைந்துவிட்டது என்று சேவாக் தெரிவித்துள்ளார்.