சிஎஸ்கே அணியின் அடுத்த கேப்டன் கண்டிப்பா அவருதாங்க; ஜடேஜா, ரெய்னாலாம் இல்ல..! அடித்துக்கூறும் சேவாக்

By karthikeyan VFirst Published Apr 30, 2021, 3:11 PM IST
Highlights

சிஎஸ்கே அணியின் எதிர்கால கேப்டனாக யாரை நியமிக்கலாம் என்பது குறித்து முன்னாள் ஜாம்பவான் வீரேந்திர சேவாக் கருத்து தெரிவித்துள்ளார்.
 

ஐபிஎல்லில் வெற்றிகரமான அணிகளில் சிஎஸ்கேவும் ஒன்று. மும்பை இந்தியன்ஸ் அதிகபட்சமாக 5 முறை கோப்பையை வென்றுள்ள நிலையில், அதற்கடுத்தபடியாக சிஎஸ்கே அணி 3 முறை கோப்பையை வென்றுள்ளது.

ஐபிஎல்லில் கடந்த சீசனுக்கு முன்பாக தோனி தலைமையிலான சிஎஸ்கே அணி, அனைத்து சீசன்களிலும் பிளே ஆஃபிற்கு முன்னேறிய நிலையில், கடந்த சீசன் சிஎஸ்கேவிற்கு சரியாக அமையவில்லை. ஆனால் இந்த சீசனில் சிஎஸ்கே மீண்டும் செம கம்பேக் கொடுத்துள்ளது. இந்த சீசனில் இதுவரை ஆடிய 6 போட்டிகளில் 5 வெற்றிகளுடன் புள்ளி பட்டியலில் முதலிடத்தில் உள்ளது சிஎஸ்கே அணி.

சிஎஸ்கே அணி வெற்றிகரமான அணியாக ஐபிஎல்லில் வெற்றிநடை போடுவதற்கு அந்த அணியின் கேப்டன் தோனி முக்கிய காரணம். முதல் சீசனிலிருந்தே அணியை வலுவான அணியாக கட்டமைத்து, வெற்றிகளையும் கோப்பைகளையும் குவித்து கொடுத்தவர் கேப்டன் தோனி. 

தோனி இல்லாத சிஎஸ்கே அணியை நினைத்து பார்ப்பது அந்த அணியின் நிர்வாகத்திற்கும் ரசிகர்களுக்கும் கொடுங்கனவாக இருக்கும் என்றாலும், அதற்கான காலம் வந்துவிட்டது. தோனிக்கு இதுவே கடைசி சீசனாக இருக்கலாம். எனவே அடுத்த கேப்டன் குறித்த விவாதம் இப்போதே தொடங்கிவிட்டது.

பலரும் சிஎஸ்கே அணியின் எதிர்கால கேப்டன்சி குறித்து கருத்து தெரிவித்துவரும் நிலையில், விரேந்திர சேவாக்கும் தனது கருத்தை தெரிவித்துள்ளார். சிஎஸ்கே அணியின் இளம் தொடக்க வீரர் ருதுராஜ் கெய்க்வாட் கண்டிப்பாக கேப்டனாவார் என்று உறுதிபட தெரிவித்துள்ளார் சேவாக்.

இதுகுறித்து பேசிய சேவாக், ருதுராஜ் கெய்வாட்டை தனிப்பட்ட முறையில் நான் சந்தித்ததோ, பேசியதோ இல்லை. அவரை எனக்கு தெரியவே தெரியாது. ஆனாலும் சொல்கிறேன்.. சிஎஸ்கே அணியில் இன்னும் 2 ஆண்டுகள் ஆடினால், அந்த அணியின் கேப்டனாகிவிடுவார். மிகவும் நிதானமாக, தெளிவாக பேட்டிங் ஆடுகிறார். தேவையில்லாமல் ரிஸ்க் எடுப்பதில்லை; எந்த சூழலில் எப்படி ஆட வேண்டும் என்பதை தெளிவாக தெரிந்துவைத்திருக்கிறார்.

ருதுராஜ் பொறுப்புடன் ஆடுகிறார். அவருக்கான பொறுப்பிலிருந்து விலகிச்செல்வதில்லை. எளிதாக அவரது விக்கெட்டை விட்டுக்கொடுப்பதில்லை. அவர் தொடர்ந்து சிஎஸ்கே அணியில் ஆடினால், கேப்டனாவதற்கான வாய்ப்புகள் கண்டிப்பாக அதிகமாகவுள்ளன என்று சேவாக் திட்டவட்டமாக கூறியுள்ளார்.
 

click me!