டெஸ்ட் கேப்டனாக விராட் கோலியின் 3 சர்ச்சை முடிவுகள்

By karthikeyan VFirst Published Jan 16, 2022, 5:54 PM IST
Highlights

விராட் கோலி டெஸ்ட் கிரிக்கெட்டில் எடுத்த 3 சர்ச்சைக்குரிய முடிவுகளை பார்ப்போம்.
 

இந்திய டி20 அணியின் கேப்டன்சியிலிருந்து விலகிய விராட் கோலி, ஒருநாள் அணியின் கேப்டன்சியிலிருந்து நீக்கப்பட்டார். இந்நிலையில், தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கு பின்பு, டெஸ்ட் அணியின் கேப்டன்சியிலிருந்தும் விலகிவிட்டார்.

தோனிக்கு பிறகு 2014ம் ஆண்டு இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன்சியை ஏற்ற விராட் கோலி, 68 டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணியை வழிநடத்தி, 40 வெற்றிகளை பெற்று கொடுத்துள்ளார். விராட் கோலி தலைமையில் இந்திய அணி ஆஸ்திரேலிய மண்ணில் முதல் முறையாக டெஸ்ட் தொடரை வென்று வரலாற்று சாதனை படைத்தது. வெளிநாடுகளில் ஆதிக்கம் செலுத்தி ஆடி வெற்றிகளை குவித்தது. இந்திய அணிக்கு அதிக டெஸ்ட் வெற்றிகளை பெற்றுக்கொடுத்த கேப்டன் என்ற சாதனைக்கு சொந்தக்காரர் விராட் கோலி.

விராட் கோலியின் கேப்டன்சியில் இந்திய அணி சிறப்பாக செயல்பட்டு வெற்றிகளை குவித்திருந்தாலும், ஒரு கேப்டனாக அவர் எடுத்த சில முடிவுகள் பெரும் சர்ச்சைகளை கிளப்பின. அப்படியான முடிவுகளில், பெரும் சர்ச்சைக்குள்ளான 3 முடிவுகள் என்னவென்று பார்ப்போம்.

1. அஜிங்க்யா ரஹானேவின் புறக்கணிப்பு:

டெஸ்ட் கிரிக்கெட்டில் சீனியர் வீரரான அஜிங்க்யா ரஹானேவின் பலமே, வெளிநாடுகளில் அபாரமாக விளையாடி ஸ்கோர் செய்வதுதான். ஆனால் 2017ம் ஆண்டின் இறுதிகளில் ரஹானே ஃபார்மில் இல்லாமல் தவித்துவந்தார். அதன்விளைவாக, 2018ம் ஆண்டு தென்னாப்பிரிக்க சுற்றுப்பயணத்தில் ரஹானேவை முதல் 2 டெஸ்ட் போட்டிகளில் பென்ச்சில் உட்காரவைத்தார் கேப்டன் கோலி. சீனியர் வீரரான ரஹானேவை உட்காரவைத்தது பெரும் சர்ச்சையை கிளப்பியது. ரஹானேவிற்கு பதிலாக  எடுக்கப்பட்ட ரோஹித் சர்மா, 2 டெஸ்ட் போட்டிகளில் ஆடி படுமோசமாக சொதப்பினார். இதையடுத்து கடைசி டெஸ்ட்டில் ரஹானே ஆடவைக்கப்பட்டார். அந்த போட்டியில் ரஹானே சிறப்பாக ஆடி இந்திய அணியின் வெற்றிக்கு உதவினார். ரஹானே அந்த தொடரின் முதல் 2 போட்டிகளில் ஓரங்கட்டப்பட்டது அந்த சமயத்தில் பெரும் சர்ச்சையை கிளப்பியதுடன், விராட் கோலி மீது கடும் விமர்சனங்கள் எழுந்தன.
 
2. ரவிச்சந்திரன் அஷ்வின் புறக்கணிப்பு:

2021ம் ஆண்டு இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் 4 டெஸ்ட் போட்டிகளிலும் இந்திய அணியின் சீனியர் ஸ்பின்னர் ரவிச்சந்திரன் அஷ்வினை கேப்டன் கோலி ஆடவைக்கவில்லை. அஷ்வின் ஆடாதது எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தியபோதிலும், அஷ்வினை சேர்க்காததால் கடும் விமர்சனங்களை எதிர்கொண்டாலும், கடைசி வரை அசைந்துகொடுக்காத கோலி, அஷ்வினை சேர்க்கவேயில்லை. அஷ்வினை இங்கிலாந்தில் ஆடவைக்காத கோலியின் முடிவு பெரும் சர்ச்சைக்குள்ளானது.

3. ரஹானே, புஜாராவிற்கு அதிகமான ஆதரவு:

ரஹானேவை 2018ல் ஃபார்மில் இல்லாததால் உடனடியாக அணியை விட்டு ஓரங்கட்டிய விராட் கோலி, அதே ரஹானேவிற்கும், அவருடன் சேர்த்து புஜாராவுக்கும் ஒரேயடியாக ஆதரவு அளித்தது. ஒரு வீரரை உடனடியாக தூக்கி எறிந்தது எப்படி சர்ச்சையானதோ, அதே வீரருக்கு ஒரேயடியாக ஆதரவளித்ததும் சர்ச்சையானது. ரஹானே மர்றும் புஜாரா ஆகிய இருவரும் கடந்த 2 ஆண்டுகளாக படுமோசமாக சொதப்பிவரும் நிலையில், ஒரு அளவுக்கு மேல் அவர்களுக்கு வாய்ப்பளித்தார் கோலி. அதிலும், தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரின் 3 போட்டிகளிலும் அவர்களை ஆடவைத்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
 

click me!