தென்னாப்பிரிக்காவில் டெஸ்ட் தொடரை வெல்லும் வாய்ப்பை இழந்த இந்தியா! இந்திய அணியின் தோல்விக்கான காரணங்கள்

By karthikeyan VFirst Published Jan 16, 2022, 3:41 PM IST
Highlights

தென்னாப்பிரிக்க மண்ணில் முதல் முறையாக டெஸ்ட் தொடரை வெல்வதற்கான வாய்ப்பிருந்தும், அதை தவறவிட்டது இந்திய அணி. இந்திய அணியின் தோல்விக்கான காரணங்களை பார்ப்போம்.
 

தென்னாப்பிரிக்க மண்ணில் இதுவரை இந்திய அணி டெஸ்ட் தொடரை வென்றதேயில்லை. விராட் கோலி தலைமையில் நடப்பு சுற்றுப்பயணத்தில் இந்திய அணி முதல் முறையாக டெஸ்ட் தொடரை வெல்லும் என்று எதிர்பார்க்கப்பட்டது. 

விராட் கோலி தலைமையிலான இந்திய அணி ஆஸ்திரேலியாவில் 2 முறை டெஸ்ட் தொடரை வென்றது. இங்கிலாந்தில் சிறப்பாக விளையாடியது. வெஸ்ட் இண்டீஸ், நியூசிலாந்து என உலகம் முழுதிலும் இந்திய அணி சிறப்பாக விளையாடியதால் தென்னாப்பிரிக்காவில் முதல் முறையாக டெஸ்ட் தொடரை வெல்லும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் அனுபவமற்ற தென்னாப்பிரிக்க அணியிடம் இந்திய அணி தோல்வியை தழுவி, முதல் முறையாக டெஸ்ட் தொடரை வெல்லும் வாய்ப்பை இழந்தது. 29 ஆண்டுகளாக , இன்னும் காத்திருக்க வேண்டியிருக்கிறது.

இந்திய அணியின் தோல்விக்கான காரணங்களை பார்ப்போம்.

படுமோசமான பேட்டிங்:

கேஎல் ராகுல், மயன்க் அகர்வால், புஜாரா, கோலி, ரஹானே, ரிஷப் பண்ட் என வலுவான அனுபவம் வாய்ந்த பேட்டிங் ஆர்டரை இந்திய அணி பெற்றிருந்தும், அவர்கள் சரியாக ஆடாததுதான் இந்திய அணியின் தோல்விக்கு காரணம். கேஎல் ராகுலும் மயன்க் அகர்வாலும் முதல் டெஸ்ட்டில் நன்றாக பேட்டிங் ஆடினர். அந்த போட்டியில் இந்திய அணி ஜெயித்தது. 

அதற்கடுத்த 2 டெஸ்ட் போட்டிகளிலும் சீனியர் வீரர்கள் பேட்டிங்கில் சொதப்பினர். கடைசி டெஸ்ட்டில் ரிஷப் பண்ட் சதமடித்தார். ஒட்டுமொத்தமாக இந்திய அணியின் பேட்டிங் சொதப்பலால் தான் இந்திய அணி தோற்றது.

ஃபீல்டிங்கிலும் சொதப்பல்:

மொத்தமாக 9 கேட்ச்களை தவறவிட்டது. டெஸ்ட் கிரிக்கெட்டில் கேட்ச்களை தவறவிடாமல் பிடிப்பதுதான் வெற்றிக்கு வழிவகுக்கும். கேட்ச்களை தவறவிட்டால் வெற்றி கடினம். இந்திய அணி 9 கேட்ச்களை தவறவிட்டது. கடைசி டெஸ்ட்டின் கடைசி இன்னிங்ஸில் முக்கியமான வீரரான கீகன் பீட்டர்சனின் கேட்ச்சை, அணியின் ஸ்கோர் 129ஆக இருந்தபோது தவறவிட்டார் புஜாரா. எளிதான அந்த கேட்ச்சை புஜாரா தவறவிட்டார். ஒருவேளை அந்த கேட்ச்சை புஜாரா பிடித்திருந்தால், ஆட்டத்தின் போக்கு மாறியிருக்கக்கூடும்.

பவுலர்கள் அபாரம்:

இந்திய அணியில் சிறப்பாக செயல்பட்டது பவுலர்கள் மட்டும் தான். பும்ரா, ஷமி ஆகிய இருவரும் அபாரமாக பந்துவீசினர். தொடர் முழுவதுமாகவே அபாரமாக பந்துவீசினார்கள். ஃபாஸ்ட் பவுலிங்கிற்கு சாதகமான தென்னாப்பிரிக்க ஆடுகளங்கள், ஸ்பின்னிற்கு ஒத்துழைக்காது. அதனால் அஷ்வின் சோபிக்காததில் ஆச்சரியமில்லை. இந்திய ஃபாஸ்ட் பவுலர்கள் சிறப்பாக பந்துவீசியபோதிலும், கடைசி 2 டெஸ்ட்டில் கடைசி இன்னிங்ஸில் தென்னாப்பிரிக்காவை கட்டுப்படுத்துவதற்கு போதிய இலக்கை இந்திய அணி பேட்டிங் செட் செய்யவில்லை. அதனால் தான் பவுலர்களால் இந்திய அணியை வெற்றி பெற செய்யமுடியவில்லை.

தென்னாப்பிரிக்க அணி சிறப்பான ஆட்டம்:

தென்னாப்பிரிக்க அணி பேட்டிங், பவுலிங், ஃபீல்டிங் ஆகிய அனைத்து வகையிலும் மிகச்சிறப்பாக ஆடியது. முதல் டெஸ்ட் முடிந்ததும் திடீரென டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து குயிண்டன் டி காக் ஓய்வு அறிவித்தார். ஃபாஸ்ட் பவுலர் அன்ரிக் நோர்க்யா இந்த தொடரில் காயம் காரணமாக ஆடவில்லை. ஏற்கனவே தென்னாப்பிரிக்க அணி மறுகட்டமைப்பு கட்டத்தில் உள்ள நிலையில், டி காக், நோர்க்யா ஆகியோர் ஆடாதது தென்னாப்பிரிக்க அணிக்கு பெரும் சவால்களை அளித்தது.

ஆனாலும் . கீகன் பீட்டர்சன், டீன் எல்கர், டெம்பா பவுமா ஆகியோர் பேட்டிங்கில் சிறப்பாக செயல்பட்டனர். ரபாடா, ஆலிவியர், ஜான்சென் ஆகியோர் நன்றாக பந்துவீசினர். ஒட்டுமொத்தமாக தென்னாப்பிரிக்க அணியின் சிறப்பான செயல்பாட்டால் இந்திய அணியை வீழ்த்தி டெஸ்ட் தொடரை வென்றது அந்த அணி.
 

click me!