
இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையேயான 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் டெஸ்ட் செஞ்சூரியனில் இன்று தொடங்கியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் ஆடிவருகிறது.
இந்திய அணியின் தொடக்க வீரர்கள் கேஎல் ராகுல் மற்றும் மயன்க் அகர்வால் ஆகிய இருவரும் அபாரமான தொடக்கத்தை அமைத்து கொடுத்தனர். முதல் விக்கெட்டுக்கு 117 ரன்களை குவித்தனர். தொடக்க வீரர் மயன்க் அகர்வால் 60 ரன்கள் அடித்தார். புஜாரா ரன்னே அடிக்காமல் அவுட்டானார். கோலி 35 ரன்கள் அடித்தார். அபாரமாக ஆடி சதமடித்தார் ராகுல். முதல் நாள் ஆட்ட முடிவில் இந்திய அணி 3 விக்கெட் இழப்பிற்கு 272 ரன்கள் அடித்துள்ளது. ராகுல் 122 ரன்களுடனும், ரஹானே 40 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.
இந்த போட்டியில் விராட் கோலி வென்ற டாஸ், டெஸ்ட் கிரிக்கெட்டில் அவர் வென்ற 30வது டாஸ். இதன்மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக டாஸ் வென்ற இந்திய கேப்டன் என்ற சாதனையை விராட் கோலி படைத்துள்ளார்.
இதற்கு முன் முன்னாள் கேப்டன் முகமது அசாருதீன் 47 டெஸ்ட் போட்டிகளில் 29 முறை டாஸ் வென்று, இந்த பட்டியலில் முதலிடத்தில் இருந்தார். விராட் கோலி அவரது 68வது டெஸ்ட் போட்டியில் 30 முறை டாஸ் வென்று அசாருதீனின் சாதனையை முறியடித்துள்ளார்.
இந்த பட்டியலில் 26 டாஸ் வெற்றிகளுடன் 3ம் இடத்தில் உள்ளார் தோனி.