இன்று நாங்க; நாளை வேறொரு டீம்..! ஒழுங்கா தெரியலைனா ஏன் முடிவுக்கு வர்றீங்க..? அம்பயர்களை அசால்ட் செய்த கோலி

By karthikeyan VFirst Published Mar 19, 2021, 3:36 PM IST
Highlights

அம்பயர்கள் மிகக்கவனமாக செயல்பட்டு சரியான முடிவுகளை எடுக்க வேண்டும் என்று இந்திய அணியின் கேப்டன் கோலி தெரிவித்தார்.
 

இந்தியா - இங்கிலாந்து இடையேயான 4வது டி20 போட்டி அகமதாபாத்தில் நேற்று நடந்தது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்ய, முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி 20 ஓவரில் 185 ரன்களை குவித்தது.

ரோஹித்(12), ராகுல்(14), கோலி(1) ஆகிய வீரர்கள் ஏமாற்றமளிக்க, சர்வதேச கிரிக்கெட்டில் முதல் இன்னிங்ஸை ஆடிய சூர்யகுமார் யாதவ் அதிரடியாக ஆடி 28 பந்தில் அரைசதம் அடித்தார். 31 பந்தில் 5 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்களுடன் 57 ரன்களை விளாசி 14வது ஓவரில் சர்ச்சைக்குரிய முறையில் ஆட்டமிழந்தார். 

சூர்யகுமாரின் அதிரடி அரைசதம் மற்றும் ஷ்ரேயாஸ் ஐயரின் அதிரடி பேட்டிங்(18 பந்தில் 37 ரன்) ஆகியவற்றின் விளைவாக 20 ஓவரில் 185 ரன்களை குவித்த இந்திய அணி, இங்கிலாந்தை 177 ரன்களுக்கு சுருட்டி 8 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்த போட்டியில் சூர்யகுமார் யாதவின் விக்கெட் சர்ச்சைக்குரிய வகையில் அமைந்தது. சாம் கரன் வீசிய 14வது ஓவரின் முதல் பந்தில் ஷார்ட் லெக் திசையில் சிக்ஸர் விளாசினார் சூர்யகுமார் யாதவ். இதையடுத்து ஷார்ட் ஃபைன் லெக் திசையில் நின்ற ஃபீல்டரை டீப் ஃபைன் லெக்கிற்கு மாற்றி பந்துவீசினார் சாம் கரன். அந்த பந்தை முழங்கால் போட்டு மீண்டும் மடக்கி ஃபைன் லெக் திசையில் அடித்தார் சூர்யகுமார் யாதவ். இப்போது சிக்ஸருக்கு தேவையான டிஸ்டன்ஸ் கிடைக்காததால், மாலன் ஓடிவந்து கேட்ச் பிடித்தார்.

அதற்கு சாஃப்ட் சிக்னலில் அவுட் கொடுத்த கள நடுவர்கள், டிவி அம்பயரின் முடிவை கேட்டனர். அதை ரீப்ளே செய்து பார்க்கையில், பந்துக்கு அடியில் ஃபீல்டர் மாலனின் கை இல்லாததும், பந்து தரையில் பட்டதும் அப்பட்டமாக தெரிந்தது. ஆனாலும் டிவி அம்பயர் அவுட் கொடுத்தார். அதற்கு அவுட் கொடுத்ததுமே டக் அவுட்டில் இருந்த கேப்டன் கோலி தனது அதிருப்தியை வெளிப்படுத்தினார். இது அவுட்டில்லை என்றே சேவாக், ஸ்ரீகாந்த் உள்ளிட்ட முன்னாள் வீரர்கள் கருத்து தெரிவித்தனர்.

அம்பயர்களின் அண்மைக்கால செயல்பாடுகள் சர்ச்சைக்குள்ளாகி விமர்சனத்துக்கும் ஆளாகிவருவதுடன், அம்பயர்ஸ் கால், சாஃப்ட் சிக்னல் ஆகிய விதிகளும் கிரிக்கெட் அணிகளின் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. அவற்றின் மீதான எதிர்ப்புகளை கிரிக்கெட் அணிகளும் கேப்டன்களும் வலுவாக முன்வைக்க தொடங்கிவிட்டனர்.

இந்நிலையில், சூர்யகுமார் யாதவ் கேட்ச் விவகாரத்தில் களநடுவர்களின் முடிவால் கடும் அதிருப்தியடைந்த கேப்டன் கோலி, போட்டிக்கு பின்னர் இதுகுறித்து பேசினார். அப்போது,  அம்பயரின் தவறான முடிவு ஆட்டத்தின் போக்கையே மாற்றிவிடும். விதிகளை எளிமையாக்க வேண்டும். இதுமாதிரியான சிக்கல்களுக்கு தீர்வு காண வேண்டும். முக்கியமான போட்டிகளில் இதுமாதிரியான தவறான முடிவுகள் ஆட்டத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும். 

இன்று நாங்கள் பாதிக்கப்பட்டதை போல, நாளை வேறொரு அணி பாதிக்கப்படும்.  இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் ரஹானே ஸ்லிப்பில் கேட்ச் பிடித்தபோது, அவருக்கே அது அவுட்டா இல்லையா என்று தெரியவில்லை. களநடுவர்கள் சந்தேகம் இருந்ததால், டிவி அம்பயரை நாடினார். ஆனால் சூர்யகுமார் கேட்ச்சில் அப்படி செய்யாமல், சாஃப்ட் சிக்னலில் அவுட் என்று கொடுத்ததால் தான், அவர் வெளியேற வேண்டியதாயிற்று. இந்தமாதிரியான சிக்கல்களுக்கு தீர்வு காணப்பட வேண்டும் என்று கோலி தெரிவித்தார்.
 

click me!