#INDvsENG 4வது டி20: பேட்டிங்கில் மிரட்டிய சூர்யகுமார்; பவுலிங்கில் அசத்திய ஷர்துல், பாண்டியா! இந்தியா வெற்றி

By karthikeyan VFirst Published Mar 18, 2021, 11:28 PM IST
Highlights

இங்கிலாந்துக்கு எதிரான 4வது டி20 போட்டியில் இந்திய அணி 8 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
 

இந்தியா - இங்கிலாந்து இடையேயான 4வது டி20 போட்டி அகமதாபாத்தில் இன்று நடந்தது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்ய, முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி 20 ஓவரில் 185 ரன்களை குவித்தது.

ரோஹித்(12), ராகுல்(14), கோலி(1) ஆகிய வீரர்கள் ஏமாற்றமளிக்க, சர்வதேச கிரிக்கெட்டில் முதல் இன்னிங்ஸை ஆடிய சூர்யகுமார் யாதவ் அதிரடியாக ஆடி 28 பந்தில் அரைசதம் அடித்தார். 31 பந்தில் 5 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்களுடன் 57 ரன்களை விளாசிய நிலையில், 14வது ஓவரின் 2வது பந்தில் சர்ச்சைக்குரிய வகையில் ஆட்டமிழந்தார்.

அதன்பின்னர் அதிரடியாக ஆடி 18 பந்தில் 37 ரன்களை விளாசி இந்திய அணி 185 ரன்களை குவிக்க உதவினார் ஷ்ரேயாஸ் ஐயர். ரிஷப் பண்ட் தன் பங்கிற்கு 23 பந்தில் 30 ரன்கள் அடித்தார். இதையடுத்து 20 ஓவரில் 185 ரன்கள் அடித்தது இந்திய அணி.

186 ரன்கள் என்ற கடின இலக்கை விரட்டிய இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர் ஜோஸ் பட்லர் 9 ரன்னில் புவனேஷ்வர் குமாரின் பந்தில் ஆட்டமிழக்க, டேவிட் மாலனை 14 ரன்னில் ராகுல் சாஹர் வீழ்த்தினார். அதிரடியாக ஆடிய ஜேசன் ராய் 27 பந்தில் 40 ரன் அடித்து ஹர்திக் பாண்டியாவின் பந்தில் ஆட்டமிழந்தார்.

அதன்பின்னர் பென் ஸ்டோக்ஸும் பேர்ஸ்டோவும் இணைந்து அதிரடியாக ஆடி வேகமாக ஸ்கோரை உயர்த்தினர். இருவருமே அதிரடியாக ஆடியதால் வெற்றியை நோக்கி நகர்ந்தது இங்கிலாந்து அணி. இருவரும் இணைந்து 6 ஓவரில் 65 ரன்களை குவித்தனர். ஆட்டத்தின் முக்கியமான சூழலில் ஜானி பேர்ஸ்டோவை 25 ரன்னில் வீழ்த்தி பிரேக் கொடுத்தார் ராகுல் சாஹர்.

இதையடுத்து 17வது ஓவரில் 46 ரன்னுடன் களத்தில் இருந்த பென் ஸ்டோக்ஸை ஷர்துல் தாகூர் வீழ்த்தினார். அதன்பின்னர் கேப்டன் மோர்கனும் 4 ரன்னில் ஆட்டமிழக்க, 20 ஓவரில் 177 ரன்கள் அடித்து 8 ரன் வித்தியாசத்தில் இங்கிலாந்து தோற்றது. இதையடுத்து 2-2 என தொடர் சமனடைந்துள்ளது.
 

click me!