அவுட்டா? நாட் அவுட்டா? சர்ச்சையை கிளப்பிய சூர்யகுமார் யாதவ் விக்கெட்..!

By karthikeyan VFirst Published Mar 18, 2021, 9:38 PM IST
Highlights

இங்கிலாந்துக்கு எதிரான 4வது டி20 போட்டியில் சூர்யகுமார் யாதவின் விக்கெட் பெரும் சர்ச்சைக்குள்ளாகியுள்ளது.
 

இந்தியா - இங்கிலாந்து இடையேயான 4வது டி20 போட்டி அகமதாபாத்தில் நடந்துவருகிறது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்ய, முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி 20 ஓவரில் 185 ரன்களை குவித்தது.

ரோஹித்(12), ராகுல்(14), கோலி(1) ஆகிய வீரர்கள் ஏமாற்றமளிக்க, சர்வதேச கிரிக்கெட்டில் முதல் இன்னிங்ஸை ஆடிய சூர்யகுமார் யாதவ் அதிரடியாக ஆடி 28 பந்தில் அரைசதம் அடித்தார். 31 பந்தில் 5 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்களுடன் 57 ரன்களை விளாசிய நிலையில், 14வது ஓவரின் 2வது பந்தில் சர்ச்சைக்குரிய வகையில் ஆட்டமிழந்தார்.

சாம் கரன் வீசிய 14வது ஓவரின் முதல் பந்தில் ஷார்ட் லெக் திசையில் சிக்ஸர் விளாசினார் சூர்யகுமார் யாதவ். இதையடுத்து ஷார்ட் ஃபைன் லெக் திசையில் நின்ற ஃபீல்டரை டீப் ஃபைன் லெக்கிற்கு மாற்றி பந்துவீசினார் சாம் கரன். அந்த பந்தை முழங்கால் போட்டு மீண்டும் மடக்கி ஃபைன் லெக் திசையில் அடித்தார் சூர்யகுமார் யாதவ். இப்போது சிக்ஸருக்கு தேவையான டிஸ்டன்ஸ் கிடைக்காததால், மாலன் ஓடிவந்து கேட்ச் பிடித்தார்.

அதற்கு சாஃப்ட் சிக்னலில் அவுட் கொடுத்த கள நடுவர்கள், டிவி அம்பயரின் முடிவை கேட்டனர். அதை ரீப்ளே செய்து பார்க்கையில், பந்துக்கு அடியில் ஃபீல்டர் மாலனின் கை இல்லாததும், பந்து தரையில் பட்டதும் அப்பட்டமாக தெரிந்தது. ஆனாலும் டிவி அம்பயர் அவுட் கொடுத்தார். அதற்கு அவுட் கொடுத்ததுமே டக் அவுட்டில் இருந்த கேப்டன் கோலி தனது அதிருப்தியை வெளிப்படுத்தினார்.

இந்நிலையில் சூர்யகுமார் யாதவின் சர்ச்சைக்குரிய விக்கெட், சமூக வலைதளங்களில் கடும் விவாதத்திற்குள்ளாகியுள்ளது. அது அவுட்டில்லை என்பதே சேவாக், ஸ்ரீகாந்த் ஆகிய முன்னாள் வீரர்களின் கருத்தாகவும் உள்ளது. ஏற்கனவே விமர்சனத்துக்குள்ளாகிவரும் சர்வதேச கிரிக்கெட் அம்பயரிங் மீண்டும் சர்ச்சைக்கும் விமர்சனத்திற்கும் உள்ளாகியுள்ளது.
 

click me!