என்னடா ஷாட் இதெல்லாம்..? ரிஷப் பண்ட்டின் அலட்சியமான பேட்டிங்கால் செம கடுப்பான கோலி.. வைரல் வீடியோ

By karthikeyan VFirst Published Jan 24, 2022, 6:20 PM IST
Highlights

ரிஷப் பண்ட்டின் மோசமான ஷாட் செலக்‌ஷன் மற்றும் பொறுப்பற்ற பேட்டிங்கால் கடும் அதிருப்தியடைந்த விராட் கோலியின் ரியாக்‌ஷன் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது.
 

இந்திய கிரிக்கெட்டின் எதிர்காலமாக பார்க்கப்படுபவர் ரிஷப் பண்ட். தோனிக்கு பின் இந்திய அணியின் விக்கெட் கீப்பர் பொறுப்பை ஏற்ற ரிஷப் பண்ட், இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா ஆகிய 3 நாடுகளிலும் டெஸ்ட் கிரிக்கெட்டில் சதமடித்து சாதனை படைத்தார்.

வெளிநாடுகளில் மேட்ச் வின்னிங் பேட்டிங்குகளை ஆடி இந்திய அணியின் வெற்றிகளில் முக்கிய பங்காற்றிய ரிஷப் பண்ட், இந்திய அணியின் மேட்ச் வின்னராக திகழ்கிறார்.

மிகச்சிறப்பாக பேட்டிங் ஆடி இந்தியாவிற்கு வெற்றிகளை பெற்றுக்கொடுக்கும் முக்கியமான பல இன்னிங்ஸ்களை ஆடும் அதேவேளையில், மோசமான ஷாட் செலக்‌ஷன் மற்றும் ஆட்டத்தின் சூழலை கருத்தில்கொள்ளாமல் அவர் ஆடும் விதம் ஆகியவற்றால் இந்திய அணி பின்னடைவையும் சந்திக்க நேர்கிறது. அதை அவர் மாற்றிக்கொண்டு, அவரது இயல்பான ஆட்டத்தை ஆடும் அதேவேளையில், அணியின் சூழலை கருத்தில்கொண்டும் ஆடவேண்டும் என்று முன்னாள் ஜாம்பவான்கள் அவருக்கு அறிவுறுத்துகின்றனர்.

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 2வது டெஸ்ட்டில், அந்த அணி வீரர்கள் செய்த ஸ்லெட்ஜிங்கிற்கு பதிலடி கொடுக்கும் நோக்கில், மோசமான ஷாட்டை ஆடமுயன்று ஆட்டமிழந்த ரிஷப் பண்ட் மீது கடும் விமர்சனங்கள் எழுந்தன. இதையடுத்து அதற்கடுத்த கடைசி டெஸ்ட்டில் அபாரமாக விளையாடி சதமடித்தார்.

டெஸ்ட்டில் ஒரு மோசமான இன்னிங்ஸுக்கு பிறகு ஒரு நல்ல இன்னிங்ஸை ஆடிய ரிஷப் பண்ட், ஒருநாள் கிரிக்கெட்டில் ஒரு நல்ல இன்னிங்ஸுக்கு பிறகு ஒரு மட்டமான பேட்டிங்கை ஆடி வெளியேறினார். 2வது ஒருநாள் போட்டியில் அபாரமாக பேட்டிங் ஆடிய ரிஷப் பண்ட், 71 பந்தில் 85 ரன்களை குவித்து இக்கட்டான நேரத்தில் நல்ல இன்னிங்ஸை ஆடிக்கொடுத்தார். ஆனால் அதற்கடுத்த ஒருநாள் போட்டியில்(கடைசி போட்டி) முதல் பந்திலேயே மோசமான ஷாட் செலக்‌ஷனால் டக் அவுட்டாகி சென்றார்.

இந்த தொடரில் ஷ்ரேயாஸ் ஐயர் ஆடியபோதும், 4ம் வரிசையில் ரிஷப் பண்ட் தான் இறக்கிவிடப்பட்டார். அந்தவகையில், 3வது போட்டியில் தவான் - கோலி 2வது விக்கெட்டுக்கு 98 ரன்களை சேர்த்த பின்னர் தவான் ஆட்டமிழந்தார். தவான் ஆட்டமிழந்த பின், ரிஷப் பண்ட் களத்திற்கு வரும்போது இந்திய அணி நல்ல நிலையில் இருந்தது. மறுமுனையில் சீனியர் வீரர் கோலி நன்றாக செட்டில் ஆகி களத்தில் இருந்தார். எனவே அவருடன் இணைந்து பார்ட்னர்ஷிப் அமைத்து ஆடினாலே இந்திய அணியின் வெற்றி உறுதியாகிவிடும். அப்படியான நிலையில், சம்மந்தமே இல்லாமல் முதல் பந்தையே கவர் திசையில் தூக்கியடித்து கோல்டன் டக் அவுட்டாகி வெளியேறினார் ரிஷப் பண்ட்.

இன்னிங்ஸின் 23வது ஓவரை கேஷவ் மஹராஜ் வீசினார். அந்த ஒவரில் களத்திற்கு வந்த ரிஷப் பண்ட், முதல் பந்தையே தூக்கியடித்து மகாலாவிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். ஆட்டத்தின் சூழலையும் கருத்தில்கொள்ளாமல், சரியான ஷாட்டையும் தேர்வு செய்யாமல், அலட்சியமாக ஆடி ஆட்டமிழந்த ரிஷப் பண்ட்டை கோலி ஒரு முறை முறைத்தார்.

ரிஷப் பண்ட் ஆட்டமிழந்து நடையை கட்டியபோது, எதிர்முனையில் இருந்த கோலி, இதென்னடா ஷாட்..? என்கிற ரீதியில் ரிஷப் பண்ட்டை செம கடுப்புடன் முறைத்தார். அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது.

 

pic.twitter.com/yAEP18ceqn

— Diving Slip (@SlipDiving)
click me!