அவங்க 2 பேர் இல்லாததுதான் இந்திய அணியின் தோல்விக்கு காரணம்.! ஹெட் கோச் ராகுல் டிராவிட் அதிரடி

By karthikeyan VFirst Published Jan 24, 2022, 4:48 PM IST
Highlights

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் இந்திய அணி ஒயிட்வாஷ் ஆன நிலையில், தோல்விக்கான காரணம் குறித்து தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் பேசியுள்ளார்.
 

இந்திய அணி தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து 3 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடியது. டெஸ்ட் தொடரை 2-1 என தென்னாப்பிரிக்காவிடம் இழந்த இந்திய அணி, ஒருநாள் தொடரில் 3-0 என ஒயிட்வாஷ் ஆனது.

டெஸ்ட் தொடரில் தோற்றிருந்தாலும், ஒருநாள் தொடரில் இந்திய அணி மீது பெரும் எதிர்பார்ப்பு நிலவியது. ஆனால் பேட்டிங், பவுலிங் என அனைத்துவகையிலும் ஏமாற்றமளித்து ஒயிட்வாஷ் ஆனது இந்திய அணி.

இந்திய அணியின் டாப் ஆர்டர் பேட்டிங் வலுவாக உள்ளது. ஆனால் மிடில் ஆர்டர் பிரச்னை இன்னும் தொடர்ந்து கொண்டிருக்கிறது. கடந்த 4 ஆண்டுகளாகவே மிடில் ஆர்டர் பிரச்னை நிலவிவருகிறது. இந்த தொடரிலும் அது எதிரொலித்தது. முதல் 2 ஒருநாள் போட்டிகளில் ஆறாவது பவுலிங் ஆப்சனாக ஆல்ரவுண்டர் வெங்கடேஷ் ஐயர் எடுக்கப்பட்டார். அவருக்கு முதல் போட்டியில் பவுலிங்கே கொடுக்கப்படவில்லை. 2வது போட்டியில் 5 ஓவர்கள் மட்டுமே வீசினார்; விக்கெட் எதுவும் வீழ்த்தவில்லை. 3வது போட்டியில் அவருக்கு வாய்ப்பே வழங்கப்படாமல் வெறும் 5 பவுலர்களுடன் ஆடியது இந்திய அணி.

இந்திய அணியில் தீபக் சாஹர், ஷர்துல் தாகூர் ஆகிய ஆல்ரவுண்ட் வீரர்கள் கிடைத்த வாய்ப்பை அருமையாக பயன்படுத்தி, பேட்டிங், பவுலிங் என இரண்டிலுமே சிறப்பாக செயல்பட்டனர். இந்திய அணியின் தோல்விக்கு ஆல்ரவுண்டர்கள் பற்றாக்குறையே காரணம். கடைசி போட்டியில் கூடுதல் பவுலர் இல்லாமல் ஷ்ரேயாஸ் ஐயர் பந்துவீசவைக்கப்பட்டார். எனவே ஆல்ரவுண்டர்கள் இல்லாததுதான் இந்திய அணியின் பெரிய பிரச்னையாக உள்ளது.

இந்நிலையில், இந்திய அணியின் தோல்வி குறித்து பேசிய தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட், சில ஆல்ரவுண்ட் வீரர்கள் எங்கள் அணியில் இல்லாதது அணியின் பேலன்ஸை பாதித்தது. 6, 7 மற்றும் 8ம் வரிசைகளில் ஆடக்கூடிய ஆல்ரவுண்டர்கள் ஃபிட்னெஸ் பிரச்னை காரணமாக அணியில் இடம்பெறவில்லை. அவர்கள் இல்லாததுதான் பிரச்னையாக அமைந்தது. 

ஹர்திக் பாண்டியாவும் ஜடேஜாவும் அணிக்கு திரும்பிவிட்டால், இந்திய அணியின் பேட்டிங் டெப்த் அதிகரிக்கும். அதன்பின்னர் இந்திய அணி ஆடும் விதம் வேறு மாதிரி இருக்கும் என்று தெரிவித்தார் ராகுல் டிராவிட்.
 

click me!