"ஏசியாநெட் தமிழ்" ஒன்றரை வருஷத்துக்கு முன் வலியுறுத்தியதை இன்றைக்கு வலியுறுத்தும் கோலி..!

By karthikeyan VFirst Published Mar 22, 2021, 9:58 PM IST
Highlights

அம்பயர் கால் விதியை நீக்கி, எல்பிடபிள்யூ விவகாரத்தில் பந்து ஸ்டம்ப்பில் பட்டாலே அவுட் கொடுக்க வேண்டும் என்று இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி வலியுறுத்தியுள்ளார்.
 

கிரிக்கெட்டில் அம்பயர்களின் பணி மிக முக்கியமானது மட்டுமல்லாது கடினமானதும் கூட. ஒவ்வொரு விஷயத்தையும் உன்னிப்பாக கவனிக்க வேண்டும். ஆட்டத்தின் முக்கியமான கட்டத்தில் அம்பயர் கொடுக்கும் ஒரு தவறான தீர்ப்பால், போட்டியின் முடிவே பலமுறை மாறியிருக்கின்றன. 

குறிப்பாக எல்பிடபிள்யூ விஷயத்தில்தான், அம்பயர்களின் கணிப்பும் முடிவும் சில நேரங்களில் தவறாக அமைந்துவிடும். மனித தவறு நடப்பது வழக்கம்தான். அதனால் அம்பயர்களை குறை சொல்ல முடியாது என்றாலும், தவறான முடிவுகள் ஆட்டத்தில் தாக்கத்தை ஏற்படுத்திவிடுகின்றன. 

அதனால் தான் தொழில்நுட்ப உதவியுடன், தவறுகளை கலையும் நோக்கில், கள நடுவரின் முடிவை ரிவியூ செய்யும் விதமாக டி.ஆர்.எஸ் முறை அறிமுகப்படுத்தப்பட்டது. டி.ஆர்.எஸ் முறையே, தவறுகளை கலைந்து சரியான தீர்ப்பை வழங்குவதற்காக கொண்டுவரப்பட்டது தான். ஆனால் அதில் உள்ள ”அம்பயர் கால்” என்ற ஓட்டை, மீண்டும் அநீதியளிக்கும் விதமாகவே அமைந்துள்ளது. 

பந்து பேட்ஸ்மேனின் கால்காப்பில் பட்டு, அதற்கு களநடுவர் அவுட் கொடுக்கவில்லையென்றால், பவுலிங் அணி டி.ஆர்.எஸ் எடுக்கும். அந்த பந்தின் பாதி பகுதிக்கு மேல் ஸ்டம்ப்பில் பட்டால்தான் தேர்டு அம்பயர் அவுட் கொடுப்பார். பந்தின் சிறு பகுதி மட்டுமே ஸ்டம்ப்பில் பட்டால், அம்பயர் கால் என்று கள நடுவரின் முடிவிற்கே விடப்படும். 

 எல்பிடபிள்யூ விவகாரங்களில் பந்து ஸ்டம்பில் பட்டாலே அவுட் என்று கொடுக்க வேண்டும். பவுலர் ஸ்டம்புக்கு நேராக வீசிய பந்து பேட்ஸ்மேனின் கால்காப்பில் பட்டாலே அவுட் கொடுத்துவிட வேண்டும். அதுதான் சரியாக இருக்கும். 

எல்பிடபிள்யூ-வை பொறுத்தமட்டில் கள நடுவர்கள் எப்போதுமே 100% துல்லியமாக செயல்பட முடியாது என்பதால் தான் ரிவியூவே. ஆனால் ரிவியூவில் பந்தின் பாதி பகுதி ஸ்டம்பில் பட்டால், அம்பயர் கால் என்ற வகையில் கள நடுவரின் முடிவுக்கே விடப்படுகிறது. அப்படி செய்வதால், களநடுவர்களின் தனிப்பட்ட செயல்பாடுகளை பொறுத்து வீரர்கள் வெளியேற வேண்டியோ அல்லது பவுலர்கள் வருத்தப்பட வேண்டியோ உள்ளது. 

அம்பயர் கால் முறை தவறானது என்றும், பாதி பந்து, முழு பந்து என்ற பேதமெல்லாம் இல்லாமல் பந்து ஸ்டம்பில் பட்டாலே அவுட் கொடுக்கும் விதமாக விதிமாற்றம் செய்ய வேண்டும் என்றும், 2019 உலக கோப்பையில், ஒரே மாதிரியான முறையில் கோலி(அரையிறுதியில்) அவுட்டாகி வெளியேறியதையும், ஜேசன் ராய்(இறுதி போட்டியில்) தப்பியதையும் சுட்டிக்காட்டி, நமது ஏசியாநெட் தமிழ் இணையதளத்தில் எழுதியிருந்தோம். அந்த கட்டுரையின் லிங்க் - ஐசிசி எந்த விதியை மாத்துதோ இல்லையோ.. ஆனால் அந்த ஒரு விதியை கண்டிப்பா மாத்தியே ஆகணும்

ஒன்றரை ஆண்டுக்கு முன்(ஜூலை 16, 2019) நமது ஏசியாநெட் தமிழ் இணையதளத்தில் வலியுறுத்தியிருந்த விஷயத்தை, விராட் கோலி இப்போது வலியுறுத்தியுள்ளார்.

இங்கிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டி வரும் 23ம் தேதி நடக்கவுள்ள நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்த இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி, அம்பயர் கால் குறித்து பேசினார். அப்போது, டி.ஆர்.எஸ் இல்லாத காலத்திலும் நான் ஆடியிருக்கிறேன். அப்போதெல்லாம் அம்பயர் அவுட் கொடுத்துவிட்டால், அது சரியோ தவறோ, பேட்ஸ்மேன் விரும்புகிறாரோ இல்லையோ வெளியேறித்தான் ஆகவேண்டும். பாதி பந்து பட்டதா, முழு பந்து பட்டதா என்பதெல்லாம் மேட்டரே இல்லை.

ஆனால் இப்போது அம்பயர் கால் முறை குழப்பத்தை ஏற்படுத்துகிறது. ஒரு பேட்ஸ்மேன் போல்டு ஆனார் என்றால், பந்து ஸ்டம்ப்பில் பாதி பட்டதா முழுமையாக பட்டதா என்பதெல்லாம் விஷயமே கிடையாது. எனவே இதில் விவாதமே கிடையாது. பந்து ஸ்டம்ப்பில் பட்டாலே அவுட் என்று விதியை மாற்ற வேண்டும் என்று விராட் கோலி வலியுறுத்தியுள்ளார்.
 

click me!