பிங்க் பந்தில் சாதனை சதமடித்த விராட் கோலி.. வலுவான நிலையில் இந்தியா

By karthikeyan VFirst Published Nov 23, 2019, 2:52 PM IST
Highlights

சர்வதேச கிரிக்கெட்டில் சதங்களையும் சாதனைகளையும் குவித்துவரும் விராட் கோலி, இந்திய அணி ஆடிய முதல் பகலிரவு போட்டியில், பிங்க் பந்திலும் சதமடித்து அசத்தியுள்ளார். 
 

இந்திய அணி தனது முதல் பகலிரவு டெஸ்ட் போட்டியை வங்கதேசத்துக்கு எதிராக கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் ஆடிவருகிறது. இந்திய அணியும் வங்கதேச அணியும் முதன்முறையாக பிங்க் பந்தில் ஆடுகின்றன. 

இந்திய அணி முதன்முறையாக பிங்க் பந்தில் ஆடுவதால் இந்த போட்டியின் மீதான எதிர்பார்ப்பு எகிறியது. இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் ஆடிய வங்கதேச அணி, முதல் இன்னிங்ஸில் வெறும் 106 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இந்திய அணியின் சார்பில் அதிகபட்சமாக இஷாந்த் சர்மா 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 12 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியாவில் 5 விக்கெட்டுகளை வீழ்த்திய இஷாந்த் சர்மா, பிங்க் பந்தில் 5 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் இந்திய பவுலர் என்ற பெருமைக்கு சொந்தக்காரராகி வரலாற்றில் இடம்பிடித்தார். 

அதேபோல பிங்க் பந்தில் முதல் சதமடித்த இந்திய வீரர் மற்றும் இந்தியாவில் பிங்க் பந்தில் முதல் சதமடித்த வீரர் ஆகிய பெருமைகளை கோலி பெற்றுள்ளார். வங்கதேச அணி 106 ரன்களுக்கு முதல் இன்னிங்ஸில் ஆல் அவுட்டானதை அடுத்து, இந்திய அணி முதல் இன்னிங்ஸை ஆடிவருகிறது. இந்திய அணியின் தொடக்க வீரர்கள் ரோஹித் சர்மா மற்றும் மயன்க் அகர்வால் ஆகிய இருவரும் ஏமாற்றமளித்த போதும், புஜாரா அரைசதம் அடித்தார். அதன்பின்னர் கோலியும் ரஹானேவும் இணைந்து சிறப்பாக ஆடினர். 

அரைசதம் அடித்த ரஹானே 51 ரன்களில் ஆட்டமிழந்தார். தொடர்ந்து சிறப்பாக ஆடிய விராட் கோலி, டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது 27வது சதத்தை விளாசினார். இது சர்வதேச கிரிக்கெட்டில்(ஒருநாள், டெஸ்ட், டி20 சேர்த்து) விராட் கோலியின் 70வது சதம். இன்னும் 2 சதங்கள் அடித்தால் ரிக்கி பாண்டிங்கை பின்னுக்குத்தள்ளி, சர்வதேச கிரிக்கெட்டில் அதிக சதங்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் சச்சின் டெண்டுல்கருக்கு(100 சதங்கள்) அடுத்து இரண்டாவது இடத்தை பிடித்துவிடுவார் கோலி. பிங்க் பந்தில் ஆசாத் ஷாஃபிக்கிற்கு அடுத்து சதமடித்த இரண்டாவது வீரர் விராட் கோலி தான். 

ரஹானேவின் விக்கெட்டுக்கு பிறகு கோலியுடன் ஜடேஜா ஜோடி சேர்ந்து ஆடிவருகிறார். இந்திய அணி 4 விக்கெட்டுகளை மட்டுமே இழந்துள்ள நிலையில், 300 ரன்களை எட்டப்போகிறது இந்திய அணி. எனவே இந்திய அணி இந்த போட்டியிலும் இன்னிங்ஸ் வெற்றி பெறுவது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது

click me!