தம்பி நீங்க கிளம்புங்க.. இந்திய அணியிலிருந்து பாதியில் கழட்டிவிடப்பட்ட ரிஷப் பண்ட்

By karthikeyan VFirst Published Nov 23, 2019, 1:13 PM IST
Highlights

வங்கதேசத்துக்கு எதிரான கிரிக்கெட் தொடர் முடியவுள்ள நிலையில், அணியிலிருந்து ரிஷப் பண்ட் கழட்டிவிடப்பட்டுள்ளார். 
 

ரிஷப் பண்ட் ஒருநாள் மற்றும் டி20 அணிகளில் முதன்மை விக்கெட் கீப்பராக கருதப்பட்டாலும், டெஸ்ட் அணியில் இரண்டாம்தர விக்கெட் கீப்பராகத்தான் உள்ளார். சமகால கிரிக்கெட்டின் தலைசிறந்த விக்கெட் கீப்பராக திகழும் ரிதிமான் சஹா தான் டெஸ்ட் அணியின் முதன்மை சாய்ஸ். 

அதிலும் குறிப்பாக இந்தியாவில் நடக்கும் டெஸ்ட் போட்டிகளில் சஹா தான் ஆடுகிறார். இந்திய ஆடுகளங்களில் பந்து நன்றாக சுழலும் என்பதால், சஹா தான் விக்கெட் கீப்பராக ஆடும் லெவனில் இடம்பெறுகிறார். அந்தவகையில், தென்னாப்பிரிக்கா மற்றும் வங்கதேசம் ஆகிய அணிகளுக்கு எதிராக சஹா தான் ஆடுகிறார். ரிஷப் பண்ட் பென்ச்சில் தான் உள்ளார். 

தென்னாப்பிரிக்கா மற்றும் வங்கதேசம் ஆகிய இரண்டு தொடர்களிலும் அபாரமாக விக்கெட் கீப்பிங் செய்தார் சஹா. காயத்திலிருந்து மீண்டு ஒன்றரை ஆண்டுக்கு பிறகு மீண்டும் கிரிக்கெட் ஆடும் சஹா, அபாரமாக விக்கெட் கீப்பிங் செய்துவருகிறார். 

வங்கதேசத்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டி பகலிரவு டெஸ்ட் போட்டியாக நடந்துவருகிறது. நேற்றுதான் இந்த போட்டி தொடங்கியது. இந்த போட்டியில் முதல் நாள் ஆட்டத்தின் இரண்டாவது செசனிலேயே வங்கதேச அணி வெறும் 106 ரன்களுக்கு முதல் இன்னிங்ஸில் ஆல் அவுட்டானது. இதையடுத்து இந்திய அணி சிறப்பாக பேட்டிங் ஆடிவருகிறது. எனவே இந்த போட்டியிலும் இந்திய அணி இன்னிங்ஸ் வெற்றி பெற அதிகமான வாய்ப்புள்ளது.

இந்நிலையில், ஆடும் லெவனில் இல்லாமல் பென்ச்சில் இருந்த ரிஷப் பண்ட்டை, உள்நாட்டு டி20 தொடரான சையத் முஷ்டாக் அலி தொடரில் ஆடுவதற்காக தேர்வுக்குழு கழட்டிவிட்டுள்ளது. ரிஷப் பண்ட், இந்திய அணியில் பென்ச்சில் உட்கார்ந்திருப்பதை விட, சையத் முஷ்டாக் அலி தொடரில் ஆடுவது, வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான தொடரில் அவருக்கு உதவிகரமாக இருக்கும் என்பதால் தேர்வுக்குழு ரிஷப் பண்ட்டை சையத் முஷ்டாக் அலி தொடரில் ஆட அனுப்பியுள்ளது. 

ரிதிமான் சஹாவிற்கு மாற்று விக்கெட் கீப்பராக கே.எஸ்.பரத் அணியில் இணைந்துள்ளார். ஆந்திராவை சேர்ந்த கே.எஸ்.பரத்தும் நல்ல விக்கெட் கீப்பர் தான். இன்னும் ஒரு இன்னிங்ஸ் மட்டுமே எஞ்சியுள்ளதால், அதிலும் சஹாவே விக்கெட் கீப்பிங் செய்துவிடுவார். எனினும் மாற்று விக்கெட் கீப்பர் ஒருவர் தேவை என்பதற்காக பரத் அழைக்கப்பட்டுள்ளார். ரிஷப் பண்ட் சையத் முஷ்டாக் அலி தொடரில் டெல்லி அணியில் ஆடவுள்ளார். 
 

click me!