டாப் பேட்ஸ்மேன்களை பொட்டலம் கட்டி மாஸ் காட்டிய தமிழ்நாடு பவுலர்கள்.. மும்பையை வீழ்த்தி தமிழ்நாடு அபார வெற்றி

By karthikeyan VFirst Published Nov 23, 2019, 12:35 PM IST
Highlights

சையத் முஷ்டாக் அலி தொடரின் சூப்பர் லீக் போட்டியில் மும்பை அணியை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தமிழ்நாடு அணி அபார வெற்றி பெற்றது. 
 

சையத் முஷ்டாக் அலி தொடரில் தமிழ்நாடு அணி லீக் சுற்றில் நன்றாக ஆடி வெற்றிகளை குவித்தது. இதையடுத்து சூப்பர் லீக் சுற்றுக்கு முன்னேறிய தமிழ்நாடு அணி, சூப்பர் லீக் சுற்றின் முதல் போட்டியில் கர்நாடக அணியிடம் தோல்வியை தழுவியது. 

சூப்பர் லீக் தொடரின் அடுத்த போட்டியில் வலுவான மும்பை அணியை நேற்று எதிர்கொண்டு ஆடியது. மும்பை அணியில் பிரித்வி ஷா, சூர்யகுமார் யாதவ், ஷ்ரேயாஸ் ஐயர், ஆதித்ய டரே ஆகிய சிறந்த பேட்ஸ்மேன்கள் இருந்தும் கூட, அந்த அணியை தமிழ்நாடு பவுலர்கள் தங்களது அபாரமான பவுலிங்கின் மூலம் 121 ரன்களுக்கு சுருட்டினர்.

முதலில் பேட்டிங் ஆடிய மும்பை அணி 20 ஓவரில் வெறும் 121 ரன்கள் மட்டுமே அடித்தது. தொடக்க வீரர் பிரித்வி ஷா 19 பந்தில் 30 ரன்கள் அடித்தார். ஷாம்ஸ் முலானி அதிரடியாக ஆடி 52 பந்துகளில் 73 ரன்களை குவித்தார். இவர்கள் இருவரைத்தவிர மற்ற வீரர்கள் யாருமே டபுள் டிஜிட்டையே தொடவில்லை. மற்ற அனைத்து வீரர்களும் ஒற்றை இலக்கத்தில் வெளியேறியதால், அந்த அணி வெறும் 121 ரன்கள் மட்டுமே அடித்தது. 

தமிழ்நாடு அணியின் சார்பில் சித்தார்த் 4 விக்கெட்டுகளையும் சாய் கிஷோர் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். இதையடுத்து 122 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய தமிழ்நாடு அணியின் தொடக்க வீரர்களாக ஷாருக்கானும் ஹரி நிஷாந்த்தும் இறங்கினர். ஷாருக்கான் 17 ரன்களில் ஆட்டமிழந்தார். அதன்பின்னர் களத்திற்கு வந்த பாபா அபரஜித் டக் அவுட்டானார். கேப்டன் தினேஷ் கார்த்திக்கும் 4 ரன்களில் ஆட்டமிழந்தார். ஒருமுனையில் விக்கெட்டுகள் விழுந்தாலும் மறுமுனையில் தொடக்க வீரர் ஹரி நிஷாந்த் நிலைத்து நின்று அடித்து ஆடினார். 

தினேஷ் கார்த்திக் ஆட்டமிழந்த பிறகு, நிஷாந்த்துடன் விஜய் சங்கர் ஜோடி சேர்ந்தார். இவர்கள் இருவரும் இணைந்து தமிழ்நாடு அணியை வெற்றி பெற செய்தனர். அதிரடியாக ஆடிய நிஷாந்த், 44 பந்துகளில் 5 பவுண்டரிகள் மற்றும் 6 சிக்ஸர்களுடன் 73 ரன்களை குவித்தார். விஜய் சங்கர் அவருக்கு ஒத்துழைப்பு கொடுத்து ஆடி அணியை வெற்றி பெற செய்தார். நிஷாந்த்தின் அதிரடியால் 14வது ஓவரிலேயே இலக்கை எட்டி தமிழ்நாடு அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.         

click me!