தனது கெரியரில் மிகப்பெரிய மைல்கல்லை எட்டப்போகும் கோலி.. சர்வதேச கிரிக்கெட்டில் 2வது இந்திய வீரர்

By karthikeyan VFirst Published Mar 12, 2020, 9:45 AM IST
Highlights

சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில், தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான தொடரில், தனது கெரியரிலேயே மிகச்சிறந்த மைல்கற்களில் ஒன்றை விராட் கோலி எட்டப்போகிறார். 
 

இந்திய அணியின் கேப்டனும் சமகால கிரிக்கெட்டின் தலைசிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவருமாக திகழும் விராட் கோலி, சர்வதேச கிரிக்கெட்டில் சதங்களையும் சாதனைகளையும் குவித்துவருகிறார். 

சர்வதேச கிரிக்கெட்டில் செய்யப்பட்டுள்ள பேட்டிங் சாதனைகள் பலவற்றை ஒவ்வொன்றாக தகர்த்து, புதிய மைல்கற்களை எட்டிவருகிறார் கோலி. பெரும்பாலான பேட்டிங் சாதனைகளுக்கு சொந்தக்காரரான சச்சின் டெண்டுல்கரின் சாதனைகளை முறியடித்துவருகிறார். 

இதுவரை 70 சதங்களை விளாசியுள்ள விராட் கோலி, சச்சின் டெண்டுல்கரின் 100 சர்வதேச சதங்கள் என்ற சாதனையை முறியடித்துவிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல அதிக ரன்கள் என்ற சச்சினின் சாதனையையும் முறியடிக்க வாய்ப்புள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது. 

இவ்வாறு சர்வதேச கிரிக்கெட்டில் பேட்டிங் சாதனைகளை தகர்த்து புதிய மைல்கற்களை எட்டிவரும் கோலி, தென்னாப்பிரிக்க தொடரிலும் ஒரு சாதனையை படைக்க காத்திருக்கிறார். 

நியூசிலாந்து தொடரில் விராட் கோலி சரியாக ஆடவில்லை. கடந்த 22 இன்னிங்ஸ்களில் விராட் கோலி ஒரு சதம் கூட அடிக்கவில்லை. விராட் கோலியின் கெரியரில் மோசமான காலக்கட்டங்களில் கடந்த சில மாதங்களும் சில தொடர்களும் தான் முக்கியமானவை. அந்தளவிற்கு கடந்த சில போட்டிகளில் படுமோசமாக ஆடியிருக்கிறார். எனவே தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக சொந்த மண்ணில் இழந்த ஃபார்மை மீட்டெடுக்கும் முனைப்பில் இருக்கிறார் கோலி.

இதுவரை 239 ஒருநாள் இன்னிங்ஸ்களில் 11867 ரன்களை குவித்துள்ள விராட் கோலி, இன்னும் 133 ரன்கள் அடித்தால் 12000 ரன்கள் என்ற மைல்கல்லை எட்டிவிடுவார். ஒருநாள் கிரிக்கெட்டில் இதுவரை சச்சின் டெண்டுல்கர், சங்கக்கரா, ரிக்கி பாண்டிங், ஜெயசூரியா மற்றும் ஜெயவர்தனே ஆகிய ஐந்து வீரர்கள் மட்டுமே 12000 ரன்களுக்கு மேல் அடித்துள்ளனர். எனவே கோலி இந்த தொடரில் இன்னும் 133 ரன்கள் அடித்தால் 12 ஆயிரம் ரன்களை கடந்த இரண்டாவது இந்திய வீரர் என்ற பெருமையையும் சர்வதேச அளவில் ஆறாவது வீரர் என்றபெருமையையும் பெறுவார். 

Also Read - இந்தியா vs தென்னாப்பிரிக்கா முதல் ஒருநாள் போட்டி.. உத்தேச இந்திய அணி

அதுமட்டுமல்லாமல் ஒருநாள் கிரிக்கெட்டில் மேற்கூறிய ஐந்து வீரர்களுமே 300 இன்னிங்ஸ்களுக்கு மேல் ஆடித்தான் 12 ஆயிரம் என்ற மைல்கல்லை எட்டினர். ஆனால் விராட் கோலி இதுவரை வெறும் 239 இன்னிங்ஸ்களில் மட்டுமே ஆடி 11,867 ரன்களை குவித்துள்ளார். எனவே இந்த தொடரில் 133 ரன்களை குவித்தால் விரைவில் 12 ஆயிரம் ரன்களை எட்டிய வீரர் என்ற சாதனையையும் கோலி படைப்பார். 

click me!