விராட் கோலியால் ஒருத்தரோட கேப்டன்சி ரெக்கார்ட மட்டும் அசைக்கவே முடியாது.. யார் அந்த கேப்டன்..? என்ன ரெக்கார்டு..?

By karthikeyan VFirst Published Sep 3, 2019, 3:02 PM IST
Highlights

கோலி தலைமையில் இந்திய அணி ஆடிய 48 டெஸ்ட் போட்டிகளில் 28ல் வெற்றி பெற்றுள்ளது. இதன்மூலம் இந்திய டெஸ்ட் கிரிக்கெட்டின் வெற்றிகரமான கேப்டனாக கோலி திகழ்கிறார். 
 

விராட் கோலியின் கேப்டன்சி மீது விமர்சனங்கள் இருந்தாலும் நம்பரின் அடிப்படையில் அவர் சிறந்த கேப்டனாகவே திகழ்கிறார். 

வெஸ்ட் இண்டீஸுக்கு எதிராக இந்திய அணி ஆடிய இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் வென்று அந்த அணியை ஒயிட்வாஷ் செய்து இந்திய அணி 2-0 என தொடரை வென்றது. இந்த வெற்றிகளின் மூலம் 120 புள்ளிகளை பெற்றுள்ள இந்திய அணி, ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. 

வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி பெற்ற வெற்றி, கோலியின் கேப்டன்சியில் இந்திய அணி பெற்ற 28வது டெஸ்ட் வெற்றி. இதன்மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணிக்கு அதிக வெற்றிகளை பெற்றுக்கொடுத்த கேப்டன் என்ற பெருமையை கோலி பெற்றுள்ளார். இதற்கு முன் இந்திய அணிக்கு 27 டெஸ்ட் வெற்றிகளை பெற்றுக்கொடுத்த தோனி தான் வெற்றிகரமான கேப்டனாக திகழ்ந்தார். 

கோலி தலைமையில் இந்திய அணி ஆடிய 48 டெஸ்ட் போட்டிகளில் 28ல் வெற்றி பெற்றுள்ளது. இதன்மூலம் இந்திய டெஸ்ட் கிரிக்கெட்டின் வெற்றிகரமான கேப்டனாக கோலி திகழ்கிறார். 

சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில், வெற்றி விகிதத்தில் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ஸ்டீவ் வாக் தான் டாப்பில் இருக்கிறார். அவரை கோலி அல்ல, இனிமேல் எதிர்காலத்தில் வரும் எந்த கேப்டனாலும் முந்தமுடியுமா என்பதே சந்தேகம். அந்தளவிற்கு வெற்றி விகிதத்தை பெற்றுள்ளார் ஸ்டீவ் வாக். 

ஸ்டீவ் வாக் 57 போட்டிகளுக்கு கேப்டனாக செயல்பட்டு அதில் 41 போட்டிகளில் ஆஸ்திரேலிய அணிக்கு வெற்றியை தேடிக்கொடுத்துள்ளார். ஸ்டீவ் வாக்கின் கேப்டன்சியின் ஆஸ்திரேலிய அணி வெறும் 9 போட்டிகளில் மட்டுமே தோற்றது. இதன்மூலம் சர்வதேச டெஸ்ட் அரங்கில் 71.92% வெற்றியை பெற்றுள்ளார் ஸ்டீவ் வாக். இவர் தான் முதலிடத்தில் உள்ளார். இவருக்கு அடுத்த இடத்தில் 77 போட்டிகளுக்கு கேப்டனாக செயல்பட்டு 48 வெற்றிகளை ஆஸ்திரேலிய அணிக்கு பெற்றுக்கொடுத்த ரிக்கி பாண்டிங், 62.33% வெற்றி விகிதத்துடன் இரண்டாமிடத்தில் உள்ளார். 

இந்த வரிசையில் 58.33 சதவிகிதத்துடன் கோலி மூன்றாமிடத்தில் உள்ளார். கோலி கேப்டனாக செயல்பட்ட 48 போட்டிகளில் 28ல் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது. ஆனால் ஸ்டீவ் வாக் 57 போட்டிகளில் 41 வெற்றிகளை பெற்றுள்ளார். எனவே டெஸ்ட் வெற்றி விகிதத்தில் ஸ்டீவ் வாக்கின் சாதனையை தற்போதைய கேப்டன்களில் யாராலும் முறியடிக்க முடியாது. எதிர்காலத்தில் யாராலாவது முறியடிக்க முடிகிறதா என்பதை பார்ப்போம். 
 

click me!