Latest Videos

IND vs AUS T20 WC 2024: 2024 ஆம் ஆண்டு டி20 கிரிக்கெட்டில் 3ஆவது முறையாக டக் அவுட்டில் ஆட்டமிழந்த விராட் கோலி!

By Rsiva kumarFirst Published Jun 24, 2024, 10:47 PM IST
Highlights

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டி20 உலகக் கோப்பை கிரிக்கெட்டில் சூப்பர் 8 சுற்றில் இந்திய வீரர் விராட் கோலி டக் அவுட்டில் வெளியேறியதன் மூலமாக டி20 கிரிக்கெட்டில் 3ஆவது முறையாக ரன் ஏதும் இல்லாமல் வெளியேறியுள்ளார்.

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான டி20 உலகக் கோப்பை தொடரின் சூப்பர் 8 சுற்று போட்டி தற்போது செயிண்ட் லூசியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில், டாஸ் வென்ற ஆஸ்திரேலியா கேப்டன் மிட்செல் மார்ஷ் பவுலிங் தேர்வு செய்தார். அதன்படி, ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரும் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். இதில், விராட் கோலி ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்து தனது மோசமான ஃபார்மை வெளிப்படுத்தியுள்ளார்.

இதன் மூலமாக நடப்பு ஆண்டில் விராட் கோலி விளையாடிய 8 இன்னிங்ஸ்களில் ஆவது முறையாக டக் அவுட்டில் ஆட்டமிழந்துள்ளார். ஆனால், 2024 ஆம் ஆண்டிற்கு முன்னதாக 4 முறை ரன் எடுக்காமல் ஆட்டமிழந்துள்ளார்.

இந்த டி20 உலகக் கோப்பை தொடரில் விராட் கோலி முறையே 1, 4, 0, 24, 37, 0 என்று வரிசையாக சொற்ப ரன்களில் ஆட்டமிழந்துள்ளார். இதே ஃபார்மில் விராட் கோலி அரையிறுதிப் போட்டியில் விளையாடினால் அது இந்திய அணிக்கு பாதிப்பை ஏற்படுத்தக் கூடும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையடுத்து ரோகித் சர்மா மற்றும் ரிஷப் பண்ட் இருவரும் இணைந்தனர். முதல் 2 ஓவருக்கு இந்திய அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 6 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது. பின்னர் 3ஆவது ஓவரை மிட்செல் ஸ்டார்க் வீசினார். அந்த ஓவரின் முதல் பந்து முதல் கடைசி பந்து வரை ரோகித் சர்மா அதிரடியாக விளையாடினார். அந்த ஓவரில் மட்டும் ரோகித் சர்மா 6, 6, 4, 6, 0, வைடு, 6 என்று மொத்தமாக 29 ரன்கள் எடுத்துள்ளார்.

இதன் மூலமாக டி20 கிரிக்கெட்டில் அதிக ரன்கள் கொடுத்த பவுலர் என்ற மோசமான சாதனையை மிட்செல் ஸ்டார்க் படைத்துள்ளார். இதற்கு முன்னதாக 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற டி20 உலகக் கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் நியூசிலாந்து அணிக்கு எதிராக 22 ரன்கள் கொடுத்ததே அதிகபட்சமாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இதைத் தொடர்ந்து 5ஆவது ஓவரை பேட் கம்மின்ஸ் வீசினார். அந்த ஓவரின் முதல் பந்திலேயே ரோகித் சர்மா முட்டி போட்டு சிக்ஸர் அடித்தார். அவர் அடித்த இந்த சிக்ஸர் மைதானத்தின் மேற்கூரை மீது விழுந்தது. அதோடு 100 மீட்டர் சிக்ஸரும் விளாசியுள்ளார். இந்த நிலையில் தான் இந்தப் போட்டியில் 5 சிக்ஸர் அடித்ததன் மூலமாக டி20 கிரிக்கெட்டில் 200 சிக்ஸர்கள் விளாசிய முதல் வீரர் என்ற வரலாற்று சாதனையை படைத்துள்ளார்.

மேலும், இந்தப் போட்டியில் 19 பந்துகளில் அரைசதம் அடித்து இந்த டி20 உலகக் கோப்பை தொடரில் குறைவான பந்துகளில் அரைசதம் அடித்த வீரர் என்ற சாதனையையும் படைத்துள்ளார். ரிஷப் பண்ட் 15 ரன்களில் வெளியேற, ரோகித் சர்மா 41 பந்துகளில் 7 பவுண்டரி, 8 சிக்ஸர் உள்பட 92 ரன்கள் எடுத்து மிட்செல் ஸ்டார்க் பந்தில் கிளீன் போல்டானார்.

இதன் மூலமாக கிறிஸ் கெயிலின் சாதனையை முறியடிக்க தவறிவிட்டார். டி20 உலகக் கோப்பையில் அதிவேகமாக (47 பந்துகள்) சதம் விளாசி சாதனை படைத்திருந்த கிறிஸ் கெயிலின் சாதனையை இதுவரையில் எந்த வீரரும் முறியடிக்கவில்லை. ரோகித் சர்மாவும் முறியடிக்க தவறிவிட்டார்.

அடுத்து வந்த சூர்யகுமார் யாதவ் 16 பந்துகளில் 3 பவுண்டரி, 2 சிக்ஸர் உள்பட 31 ரன்களில் ஆட்டமிழக்க, ஷிவம் துபே 28 ரன்களில் நடையை கட்டினார். இந்திய அணியின் துணை கேப்டன் ஹர்திக் பாண்டியா 27 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருக்க, ஜடேஜா 9 ரன்கள் எடுத்தார். இறுதியாக இந்திய அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 205 ரன்கள் எடுத்தது.

இதன் மூலமாக இந்த உலகக் கோப்பை தொடரில் 2ஆவது அதிகபட்ச ஸ்கோரை இந்திய அணி எடுத்துள்ளது. பவுலிங்கைப் பொறுத்த வரையில் மிட்செல் ஸ்டார்க் மற்றும் மார்கஸ் ஸ்டோய்னிஸ் தலா 2 விக்கெட்டுகள் எடுத்தனர். ஜோஸ் ஹசல்வுட் ஒரு விக்கெட் எடுத்தார்.

click me!