ரோஹித் எப்படி வேணா ஆடட்டும்.. இந்த ஒரேயொரு விஷயத்தை மட்டும் மனசுல வச்சுகிட்டா போதும்! பேட்டிங் கோச் ஓபன் டாக்

Published : Aug 16, 2021, 04:39 PM IST
ரோஹித் எப்படி வேணா ஆடட்டும்.. இந்த ஒரேயொரு விஷயத்தை மட்டும் மனசுல வச்சுகிட்டா போதும்! பேட்டிங் கோச் ஓபன் டாக்

சுருக்கம்

ரோஹித் சர்மா புல் ஷாட் ஆடி ஆட்டமிழப்பது குறித்த விவாதம் எழுந்துள்ள நிலையில், அதுகுறித்து இந்திய அணியின் பேட்டிங் பயிற்சியாளர் விக்ரம் ரத்தோர் கருத்து கூறியுள்ளார்.  

இந்தியா - இங்கிலாந்து இடையேயான முதல் டெஸ்ட் டிரா ஆன நிலையில், 2வது டெஸ்ட் போட்டி விறுவிறுப்பான கட்டத்தில் உள்ளது. 2வது டெஸ்ட்டின் முதல் இன்னிங்ஸில் ரோஹித் சர்மாவும் ராகுலும் அபாரமாக ஆடி நல்ல தொடக்கத்தை அமைத்து கொடுத்தனர். ரோஹித் சர்மா 83 ரன்கள் அடித்து 17 ரன்னில் சதத்தை தவறவிட்டார். ராகுல் 129 ரன்கள் அடித்தார்.

இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 364 ரன்களை குவிக்க, இங்கிலாந்து அணி 391 ரன்களை குவித்தது. 27 ரன்கள் பின் தங்கிய நிலையில், 2வது இன்னிங்ஸை ஆடிய இந்திய அணிக்கு ரோஹித்தும் ராகுலும் இணைந்து முதல் இன்னிங்ஸை போலவே நல்ல தொடக்கத்தை அமைத்து கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்த நிலையில், தங்கள் பணியை சரியாக செய்யாமல் இருவருமே சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். ராகுல் 5 ரன்னில் வெளியேற, அருமையாக பவுண்டரிகளை அடித்து சிறப்பாக ஆடிய ரோஹித் சர்மா, 21 ரன்னில் இங்கிலாந்து அணி விரித்த வலையில் விழுந்தார்.

ஷார்ட் பிட்ச் பந்து வீசினால் ரோஹித் சர்மா கண்டிப்பாக புல் ஷாட் ஆடுவார் என்பதால், டீப் ஃபைன் லெக் திசையில் ஃபீல்டரை நிறுத்திவிட்டு, ஷார்ட் பிட்ச் பந்துகளை வீசினார் மார்க் உட். 12வது ஓவரின் 3வது பந்தை சிக்ஸர் விளாசிய ரோஹித், அந்த ஓவரின் கடைசி பந்தையும் புல் ஷாட் ஆடமுயன்று மொயின் அலியிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். 

ரோஹித் சர்மா புல் ஷாட்டுகளை ஆடுவதில் வல்லவர்; அதுதான் அவருக்கு மிகவும் பிடித்த ஷாட் என்றாலும், பொறுப்பாக ஆட வேண்டிய சூழலில் அவசரப்பட்டு புல் ஷாட் ஆடி ஆட்டமிழந்தார் ரோஹித் சர்மா. ரோஹித் ஆடிய விதத்தை பார்க்கையில், ஒருவேளை அந்த ஷாட்டை ஆடி அவுட்டாகாமல் இருந்திருந்தால், அவர் பெரிய இன்னிங்ஸை ஆடியிருப்பார். ஏனெனில் அந்தளவிற்கு செம டச்சில் இருந்தார்.

ரோஹித்தின் பலமே, அவரது பலவீனமாக அமைவதற்கு அவர் அனுமதித்துவிட்டார் என்பது முன்னாள் வீரர்கள் மற்றும் ரசிகர்களின் வேதனையாக உள்ளது. ஏனெனில் முதல் போட்டியிலும் நன்றாக ஆடிக்கொண்டிருந்த ரோஹித்தை, சிறப்பாக செட் செய்து ஷார்ட் பிட்ச் பந்தை வீசி புல் ஷாட் ஆடவைத்துத்தான் அவுட்டாக்கியது இங்கிலாந்து அணி. அதையே தான் 2வது டெஸ்ட்டின் 2வது இன்னிங்ஸிலும் செய்தது.

இந்நிலையில், ரோஹித் புல் ஷாட் ஆடுவது குறித்து பேசியுள்ள இந்திய அணியின் பேட்டிங் பயிற்சியாளர் விக்ரம் ரத்தோர், ரோஹித் சர்மாவை பொறுத்தமட்டில், அவர் அதிகமாக ஸ்கோர் செய்வது புல் ஷாட்டில் தான். அந்த ஷாட்டை அருமையாக ஆடுவார். அதனால் அவர் புல் ஷாட்டை ஆடலாம். அவர் எப்படி ஆடினாலும் அதை நாங்கள் ஆதரிக்கிறோம். ஆனால், எந்த ஷாட்டை எப்போது ஆடுகிறோம் என்பதில் மட்டும் ரோஹித் கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டும் என்று விக்ரம் ரத்தோர் தெரிவித்துள்ளார்.
 

PREV
click me!

Recommended Stories

முதல் T20: ஜெமிமா ருத்ரதாண்டவம்.. கைகொடுத்த ஸ்மிருதி மந்தனா.. இலங்கையை பந்தாடிய இந்தியா!
U19 ஆசிய கோப்பையை தட்டித் தூக்கியது பாகிஸ்தான்! 191 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா படுதோல்வி!