#ENGvsIND ரோஹித் சர்மா பண்ணது பெரிய தவறு..! விவிஎஸ் லக்‌ஷ்மண் அதிருப்தி

By karthikeyan VFirst Published Aug 16, 2021, 3:36 PM IST
Highlights

ரோஹித் சர்மாவின் ஷாட் செலக்‌ஷன் தனக்கு அதிருப்தியை ஏற்படுத்தியதாக முன்னாள் ஜாம்பவான் விவிஎஸ் லக்‌ஷ்மண் தெரிவித்துள்ளார்.
 

இந்தியா - இங்கிலாந்து இடையேயான முதல் டெஸ்ட் டிரா ஆன நிலையில், 2வது டெஸ்ட் போட்டி விறுவிறுப்பான கட்டத்தில் உள்ளது. 2வது டெஸ்ட்டின் முதல் இன்னிங்ஸில் ரோஹித் சர்மாவும் ராகுலும் அபாரமாக ஆடி நல்ல தொடக்கத்தை அமைத்து கொடுத்தனர். ரோஹித் சர்மா 83 ரன்கள் அடித்து 17 ரன்னில் சதத்தை தவறவிட்டார். ராகுல் 129 ரன்கள் அடித்தார்.

இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 364 ரன்களை குவிக்க, இங்கிலாந்து அணி 391 ரன்களை குவித்தது. 27 ரன்கள் பின் தங்கிய நிலையில், 2வது இன்னிங்ஸை ஆடிய இந்திய அணிக்கு ரோஹித்தும் ராகுலும் இணைந்து முதல் இன்னிங்ஸை போலவே நல்ல தொடக்கத்தை அமைத்து கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்த நிலையில், தங்கள் பணியை சரியாக செய்யாமல் இருவருமே சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். ராகுல் 5 ரன்னில் வெளியேற, அருமையாக பவுண்டரிகளை அடித்து சிறப்பாக ஆடிய ரோஹித் சர்மா, 21 ரன்னில் இங்கிலாந்து அணி விரித்த வலையில் விழுந்தார்.

ஷார்ட் பிட்ச் பந்து வீசினால் ரோஹித் சர்மா கண்டிப்பாக புல் ஷாட் ஆடுவார் என்பதால், டீப் ஃபைன் லெக் திசையில் ஃபீல்டரை நிறுத்திவிட்டு, ஷார்ட் பிட்ச் பந்துகளை வீசினார் மார்க் உட். 12வது ஓவரின் 3வது பந்தை சிக்ஸர் விளாசிய ரோஹித், அந்த ஓவரின் கடைசி பந்தையும் புல் ஷாட் ஆடமுயன்று மொயின் அலியிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். 

ரோஹித் சர்மா புல் ஷாட்டுகளை ஆடுவதில் வல்லவர்; அதுதான் அவருக்கு மிகவும் பிடித்த ஷாட் என்றாலும், பொறுப்பாக ஆட வேண்டிய சூழலில் அவசரப்பட்டு புல் ஷாட் ஆடி ஆட்டமிழந்தார் ரோஹித் சர்மா. ரோஹித் ஆடிய விதத்தை பார்க்கையில், ஒருவேளை அந்த ஷாட்டை ஆடி அவுட்டாகாமல் இருந்திருந்தால், அவர் பெரிய இன்னிங்ஸை ஆடியிருப்பார். ஏனெனில் அந்தளவிற்கு செம டச்சில் இருந்தார்.

ரோஹித்தின் பலமே, அவரது பலவீனமாக அமைவதற்கு அவர் அனுமதித்துவிட்டார் என்பது முன்னாள் வீரர்கள் மற்றும் ரசிகர்களின் வேதனையாக உள்ளது. ஏனெனில் முதல் போட்டியிலும் நன்றாக ஆடிக்கொண்டிருந்த ரோஹித்தை, சிறப்பாக செட் செய்து ஷார்ட் பிட்ச் பந்தை வீசி புல் ஷாட் ஆடவைத்துத்தான் அவுட்டாக்கியது இங்கிலாந்து அணி. அதையே தான் 2வது டெஸ்ட்டின் 2வது இன்னிங்ஸிலும் செய்தது.

இந்நிலையில், ரோஹித் புல் ஷாட் ஆடியது குறித்து பேசியுள்ள விவிஎஸ் லக்‌ஷ்மண், ரோஹித் சர்மா அவருக்கு அவரே பிரச்னையை ஏற்படுத்தி கொள்கிறார். நாட்டிங்காமில் அவுட்டானதை போலவே, அவருக்கு பிடித்தமான புல் ஷாட்டை ஆடி 2வது டெஸ்ட்டிலும் ஆட்டமிழந்தார். அவர் புல் ஷாட் ஆடுவார் என்று அறிந்துதான் ஷார்ட் பிட்ச் பந்துகளை வீசுகின்றனர். மார்க் உட்டின் ஓவரில் ஃபைன் லெக் திசையில் சிக்ஸர் அடித்த அதே ஓவரில் தான் மறுபடியும் புல் ஷாட் ஆடி ஆட்டமிழந்தார். அவர் புல் ஷாட் ஆடவைப்பதுதான் இங்கிலாந்து அணியின் திட்டம். துரதிர்ஷ்டவசமாக அவர்களது திட்டத்தில் விழுந்துவிடுகிறார் ரோஹித்.

ராகுல் அவுட்டான பிறகு, ரோஹித் சர்மா தான் பொறுப்புடன் ஆடி ஆட்டத்தை எடுத்துச்செல்ல வேண்டிய கட்டாயத்தில் இருந்தார். அருமையாக டிரைவ் ஆடிவந்த ரோஹித், நல்ல ஃபார்மிலும் இருந்தார். அவரது ஷாட் செலக்‌ஷன் தான் என்னை அதிருப்தியடைய செய்தது என்று லக்‌ஷ்மண் தெரிவித்தார்.
 

click me!