Vijay Hazare Trophy: அரையிறுதியில் எந்தெந்த அணிகள் மோதல்..? முழு விவரம்.. தமிழ்நாடு அணிக்கு கோப்பை வாய்ப்பு

By karthikeyan VFirst Published Dec 22, 2021, 6:22 PM IST
Highlights

விஜய் ஹசாரே தொடரில் இன்று நடந்த காலிறுதி போட்டிகளில் சவுராஷ்டிரா மற்றும் சர்வீஸஸ் அணிகள் வெற்றி பெற்ற நிலையில், அரையிறுதி போட்டி விவரங்களை பார்ப்போம்.
 

உள்நாட்டு ஒருநாள் தொடரான விஜய் ஹசாரே தொடர் இறுதிக்கட்டத்தை எட்டிவிட்டது. நேற்று நடந்த 2 காலிறுதி போட்டிகளில் தமிழ்நாடு மற்றும் ஹிமாச்சல பிரதேச அணிகள் வெற்றி பெற்றன. 

கர்நாடகா அணியை 151 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தமிழ்நாடு அணி அபார வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறியது. உத்தர பிரதேச அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி ஹிமாச்சல பிரதேச அணி வெற்றி பெற்றது.

எஞ்சிய 2 காலிறுதி போட்டிகள் இன்று நடந்தன. சவுராஷ்டிராவும் விதர்பாவும் மோதிய போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய விதர்பா அணி 41வது ஓவரில் வெறும் 150 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. 151 ரன்கள் என்ற எளிய இலக்கை எளிதாக அடித்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சவுராஷ்டிரா அணி அரையிறுதிக்கு முன்னேறியது.

கேரளா மற்றும் சர்வீஸஸ் அணிகளுக்கு இடையேயான காலிறுதி போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய கேரளா அணி வெறும் 175 ரன்களுக்கு சுருண்டது. 176 ரன்கள் என்ற இலக்கை எளிதாக அடித்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற சர்வீஸஸ் அணி அரையிறுதிக்கு முன்னேறியது.

தமிழ்நாடு, ஹிமாச்சல பிரதேசம், சவுராஷ்டிரா மற்றும் சர்வீஸஸ் ஆகிய 4 அணிகள் அரையிறுதிக்கு முன்னேறிய நிலையில், வரும் 24ம் தேதி 2 அரையிறுதி போட்டிகளும் நடக்கின்றன. வரும் 24ம் தேதி காலை 9 மணிக்கு 2 அரையிறுதி போட்டிகளும் தொடங்குகின்றன.

ஜெய்ப்பூர் கேஎல் சைனி மைதானத்தில் நடக்கும் அரையிறுதி போட்டியில் தமிழ்நாடு - சவுராஷ்டிரா அணிகள் மோதுகின்றன. ஜெய்ப்பூர் சாவல் மன்சிங் ஸ்டேடியத்தில் நடக்கும் அரையிறுதி போட்டியில் ஹிமாச்சல பிரதேசம் - சர்வீஸஸ் அணிகள் மோதுகின்றன.

இந்த அரையிறுதி போட்டிகளில் வெற்றி பெறும் அணிகள் வரும் 26ம் தேதி நடக்கும் ஃபைனலில் மோதும். செம ஃபார்மில் சிறப்பாக ஆடி, இந்த தொடரில் பலமான அனைத்து அணிகளையும் வீழ்த்தி வெற்றி பெற்ற தமிழ்நாடு அணிக்கு, இந்த சீசனில் விஜய் ஹசாரே டிராபியை வெல்லும் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.
 

click me!