அசாருதீன் - சச்சின் - கங்குலி யார் சிறந்த கேப்டன்..? மூவரின் கேப்டன்சியில் ஆடிய வெங்கடேஷ் பிரசாத் அதிரடி

By karthikeyan VFirst Published May 8, 2021, 7:37 PM IST
Highlights

அசாருதீன், சச்சின் டெண்டுல்கர், கங்குலி ஆகிய மூவரின் கேப்டன்சியிலும் ஆடியுள்ள வெங்கடேஷ் பிரசாத், யார் சிறந்த கேப்டன் என்று தெரிவித்துள்ளார்.
 

இந்தியாவின் ஆல்டைம் சிறந்த ஃபாஸ்ட் பவுலர்களில் வெங்கடேஷ் பிரசாத்தும் ஒருவர். வெங்கடேஷ் பிரசாத் - ஸ்ரீநாத் ஃபாஸ்ட் பவுலிங் ஜோடி 1990களின் பிற்பாதியில் கோலோச்சிய ஜோடி. 

1994ம் ஆண்டு முதல் 2001ம் ஆண்டுவரை இந்திய அணியில் ஆடிய வெங்கடேஷ் பிரசாத் 33 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 96 விக்கெட்டுகளையும் 161 ஒருநாள் போட்டிகளில் ஆடி 196 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார். ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய ஃபாஸ்ட் பவுலர்கள் பட்டியலில் 5ம் இடத்தில் உள்ளார் வெங்கடேஷ் பிரசாத்.

முகமது அசாருதீன், சச்சின் டெண்டுல்கர் மற்றும் சவுரவ் கங்குலி ஆகிய மூவரின் கேப்டன்சியிலும் ஆடியுள்ள வெங்கடேஷ் பிரசாத், மூவரில் யார் சிறந்த கேப்டன் என்று தெரிவித்துள்ளார். கிரிக்கெட் பாட்கேஸ்ட்டுக்கு அளித்த பேட்டியில் இதுகுறித்த கேள்விக்கு வெங்கடேஷ் பிரசாத் பதிலளித்தார்.

யார் சிறந்த கேப்டன் என்ற கேள்விக்கு பதிலளித்த வெங்கடேஷ் பிரசாத், இந்த கேள்விக்கு நான் டிப்ளோமேடிக்காகத்தான் பதிலளிப்பேன்.  மூவருமே வித்தியாசமானவர்கள். அவரவர்க்கென்று தனித்தனி கேப்டன்சி ஸ்டைல் இருந்தது. ஆனால் அசாருதீனின் கேப்டன்சியில் நான் சற்று வசதியாக உணர்வேன். அவர் பந்தை பவுலரிடம் கொடுத்து, பவுலரையே அவருக்கு தேவையான ஃபீல்டிங்கை செட் செய்துகொள்ள சொல்வார். எனவே அதற்கான முழு பொறுப்பும் பவுலருடையதாகிவிடுகிறது. 

அதற்காக சச்சின் மற்றும் கங்குலியின் கேப்டன்சியில் நான் வசதியாக உணரவில்லை என்று அர்த்தமில்லை. எனது சிறந்த ஆட்டம் அசாருதீனின் கேப்டன்சியில் இருந்திருக்கிறது என்பதால் தெரிவித்தேன். அசாருதீன் ஹைதராபாத்திலிருந்து வந்தவர். நான் கர்நாடகாவை சேர்ந்தவன். ஹைதராபாத்தும் கர்நாடகாவும் மிகத்தொலைவு இல்லை. எனவே எங்கள் இருவருக்கும் இடையே நல்ல புரிதல் இருந்தது. உள்நாட்டு போட்டிகளில் நாங்கள் எதிரெதிர் அணிகளிலும் ஆடியிருக்கிறோம் என்பதால் புரிதல் நன்றாக இருந்தது என்று வெங்கடேஷ் பிரசாத் தெரிவித்தார்.
 

click me!