Australia vs England:கம்பேக் மேட்ச்சில் அபார சதமடித்த உஸ்மான் கவாஜா! அனுபவம்னா என்னனு காட்டிய ஸ்டூவர்ட் பிராட்

By karthikeyan VFirst Published Jan 6, 2022, 2:23 PM IST
Highlights

இங்கிலாந்துக்கு எதிரான 4வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் 416 ரன்களை குவித்து டிக்ளேர் செய்தது ஆஸ்திரேலிய அணி.
 

ஆஸ்திரேலியா - இங்கிலாந்து இடையேயான ஆஷஸ் டெஸ்ட் தொடரின் முதல் 3 போட்டிகளிலும் வெற்றி பெற்று 3-0 என ஆஸ்திரேலிய அணி தொடரை வென்றுவிட்ட நிலையில், 4வது டெஸ்ட் போட்டி ஜனவரி 5ம் தேதி சிட்னியில் தொடங்கி நடந்துவருகிறது. 

இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் ஆடிய ஆஸ்திரேலிய அணியில் 2 ஆண்டுகளுக்கு பிறகு கம்பேக் கொடுத்த உஸ்மான் கவாஜா அருமையாக பேட்டிங் ஆடி சதமடித்தார். ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர்கள் முதல் விக்கெட்டுக்கு 51 ரன்கள் சேர்த்தனர். தொடக்க வீரர் டேவிட் வார்னர் 38 ரன்களுக்கு ஆட்டமிழக்க, மற்றொரு தொடக்க வீரரான மார்கஸ் ஹாரிஸ் 38 ரன்களுக்கும் லபுஷேன் 28 ரன்களுக்கும் ஆட்டமிழந்தனர்.

4வது விக்கெட்டுக்கு ஸ்மித்தும், உஸ்மான் கவாஜாவும் இணைந்து அருமையாக விளையாடினர். டிராவிஸ் ஹெட் கொரோனா காரணமாக ஆடாததால் அவருக்கு பதிலாக, 2 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் ஆஸ்திரேலிய டெஸ்ட் அணியில் இடம்பிடித்த உஸ்மான் கவாஜா, இந்த கம்பேக் வாய்ப்பை சிறப்பாக பயன்படுத்தி சதமடித்தார். 4வது விக்கெட்டுக்கு ஸ்மித்தும் கவாஜாவும் இணைந்து 115 ரன்களை குவித்தனர். அரைசதம் அடித்த ஸ்மித் 67 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். 

அதன்பின்னர் க்ரீன் (5), அலெக்ஸ் கேரி (13), கேப்டன் பாட் கம்மின்ஸ் (24) ஆகியோர் ஒருமுனையில் ஆட்டமிழந்தாலும் மறுமுனையில் நிலைத்து ஆடி சதமடித்த உஸ்மான் கவாஜா 137 ரன்களை குவித்து 8வது விக்கெட்டாக ஆட்டமிழந்தார். கவாஜாவுடன் இணைந்து அருமையாக பேட்டிங் ஆடிய ஸ்டார்க் 34 ரன்கள் அடித்தார். நேதன் லயன் 16 ரன்கள் அடித்தார். அவர்கள் இருவரும் அவுட்டாகவில்லை. 8 விக்கெட் இழப்பிற்கு 416 ரன்கள் அடித்திருந்த நிலையில், முதல் இன்னிங்ஸை ஆஸ்திரேலிய அணி டிக்ளேர் செய்தது. 

இங்கிலாந்து அணியில் சீனியர் ஃபாஸ்ட் பவுலர் ஸ்டூவர்ட் பிராட் அபாரமாக பந்துவீசி 5 விக்கெட் வீழ்த்தினார். இந்த ஆஷஸ் தொடரின் முதல் 3 போட்டிகளில் ஒரேயொரு போட்டியில் மட்டுமே ஆடிய ஸ்டூவர்ட் பிராடுக்கு 2 போட்டிகளில் ஆட வாய்ப்பு கிடைக்கவில்லை. இந்த போட்டியில் அவருக்கு கிடைத்த வாய்ப்பில் தனது அனுபவம் என்ன என்பதை காட்டினார் ஸ்டூவர்ட் பிராட்.

இதையடுத்து முதல் இன்னிங்ஸை தொடங்கிய இங்கிலாந்து அணி விக்கெட் இழப்பின்றி 13 ரன்கள் அடித்திருந்த நிலையில், 2ம் நாள் ஆட்டம் முடிந்தது.
 

click me!