இந்தியாவை அச்சுறுத்திய தென்னாப்பிரிக்க ஓபனர்கள்! மீண்டும் முக்கியமான பிரேக் கொடுத்த ஷர்துல் தாகூர்

By karthikeyan VFirst Published Jan 5, 2022, 7:23 PM IST
Highlights

2வது டெஸ்ட்டில் இந்திய அணி நிர்ணயித்த 240 ரன்கள் என்ற இலக்கை விரட்டிவரும் தென்னாப்பிரிக்க அணியின் தொடக்க வீரர்கள் அபாரமாக விளையாடிய நிலையில், அந்த ஜோடியை பிரித்து மீண்டுமொருமுறை பிரேக் கொடுத்தார் ஷர்துல் தாகூர்.
 

இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையேயான 2வது டெஸ்ட் போட்டி ஜோஹன்னஸ்பர்க்கில் நடந்துவருகிறது. கடந்த 3ம் தேதி தொடங்கி நடந்துவரும் இந்த டெஸ்ட்டில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் ஆடியது. இந்திய அணியின் தொடக்க வீரர் ராகுல் 50 ரன்கள் அடித்தார்; அஷ்வின் 46 ரன்கள் அடித்தார். இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 202 ரன்கள் அடித்தது.

இதையடுத்து முதல் இன்னிங்ஸை ஆடிய தென்னாப்பிரிக்க அணி 229 ரன்கள் அடித்தது. ஷர்துல் தாகூர் அபாரமாக பந்துவீசி 7 விக்கெட் வீழ்த்தினார். தென்னாப்பிரிக்க அணி பார்ட்னர்ஷிப் அமைத்தபோதெல்லாம், அந்த பார்ட்னர்ஷிப்களை உடைத்து, முக்கியமான வீரர்களை வீழ்த்தி தென்னாப்பிரிக்க அணியை 229 ரன்களுக்கு சுருட்ட உதவினார் ஷர்துல் தாகூர்.

டீன் எல்கர் (28), கீகன் பீட்டர்சன் (62), வாண்டெர் டசன் (1), டெம்பா பவுமா (51), வெரெய்ன் (21), ஜான்சென் (21) மற்றும் லுங்கி இங்கிடி ஆகிய 7 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார் ஷர்துல் தாகூர். 

27 ரன்கள் பின் தங்கிய நிலையில் 2வது இன்னிங்ஸை ஆடிய இந்திய அணியின் தொடக்க வீரர்கள் கேஎல் ராகுல் (8) மற்றும் மயன்க் அகர்வால் (23) ஆகிய இருவரும் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழக்க, அதன்பின்னர் ஜோடி சேர்ந்த புஜாராவும் ரஹானேவும் பொறுப்புடன் பேட்டிங் ஆடினர். கடந்த 2 ஆண்டுகளாக தொடர்ச்சியாக சொதப்பிவரும் புஜாராவும் ரஹானேவும், அவர்களது டெஸ்ட் கெரியரை காப்பாற்றிக்கொள்ள இதுதான் கடைசி வாய்ப்பு என்ற நெருக்கடியில், அந்த இன்னிங்ஸை ஆடிய சீனியர் வீரர்களான புஜாராவும் ரஹானேவும் இணைந்து பார்ட்னர்ஷிப் அமைத்து அதிரடியாக ஆடி இருவருமே அரைசதம் அடித்தனர். 

முக்கியமான நேரத்தில் அபாரமாக விளையாடி 3வது விக்கெட்டுக்கு 111 ரன்களை குவித்தனர். ரஹானே 58 ரன்னிலும், புஜாரா 53 ரன்னிலும் ஆட்டமிழக்க, அதன்பின்னர் ஹனுமா விஹாரி சிறப்பாக விளையாடி 40 ரன்கள் அடித்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். ஆனால் மறுமுனையில் மற்றவீரர்கள் ஆட்டமிழக்க, 266 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ஷர்துல் தாகூர் 24 ரன்கள் அடித்து சிறிய பங்களிப்பு செய்தார்.

இதையடுத்து 239 ரன்கள் இந்திய அணி முன்னிலை பெற, 240 ரன்கள் என்ற இலக்கை விரட்ட தொடங்கிய தென்னாப்பிரிக்க அணியின் தொடக்க வீரர்கள் எய்டன் மார்க்ரம் மற்றும் டீன் எல்கர் ஆகிய இருவரும் இணைந்து நல்ல தொடக்கத்தை அமைத்து கொடுத்தனர். பும்ராவும் ஷமியும் எவ்வளவோ போராடியும், தொடக்க ஜோடியை வீழ்த்த முடியவில்லை. 240 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய தென்னாப்பிரிக்க அணியின் தொடக்க வீரர்கள் முதல் விக்கெட்டுக்கு 47 ரன்களை சேர்த்தனர். இந்த ஜோடியை பிரிக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்த இந்திய அணிக்கு, மீண்டும் ஒருமுறை அந்த பிரேக்கை கொடுத்தார் ஷர்துல் தாகூர்.

எய்டன் மார்க்ரமை 31 ரன்னில் வீழ்த்தி பிரேக் கொடுத்தார் ஷர்துல் தாகூர். அதன்பின்னர் டீன் எல்கருடன் ஜோடி சேர்ந்த கீகன் பீட்டர்சன் சிறப்பாக விளையாடிவருகிறார்.
 

click me!