T20 World Cup ஐபிஎல்லில் வெறும் மூன்றே போட்டிகளில் ஆடி, இந்திய அணியில் இடம்பிடித்த இளம் வீரர்..!

By karthikeyan VFirst Published Oct 10, 2021, 11:12 AM IST
Highlights

ஐபிஎல் 14வது சீசனில் வெறும் 3 போட்டிகளில் மட்டுமே ஆடிய இளம் ஃபாஸ்ட் பவுலர் உம்ரான் மாலிக், டி20 உலக கோப்பைக்கான இந்திய அணியின் நெட் பவுலராக எடுக்கப்பட்டுள்ளார்.
 

ஐபிஎல் 14வது சீசன் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு மறக்கப்பட வேண்டிய சீசனாக அமைந்துவிட்டது. வெறும் 6 புள்ளிகளுடன் புள்ளி பட்டியலில் கடைசி இடத்தை பிடித்து தொடரை விட்டு வெளியேறியது. 

இந்த தொடர் சன்ரைசர்ஸுக்கு படுமோசமானதாக அமைந்தது. இந்த சீசனில் சன்ரைசர்ஸுக்கு நடந்த ஒரே நல்ல விஷயம், இளம் ஃபாஸ்ட் பவுலர் உம்ரான் மாலிக் தான். 22 வயதான ஜம்மு காஷ்மீரை சேர்ந்த ஃபாஸ்ட் பவுலர் உம்ரான் மாலிக், அசால்ட்டாக 150 கிமீ வேகத்தில் வீசுகிறார். இந்தியாவின் அதிவேக பந்துவீச்சாளர் இவர் தான்.

ஐபிஎல் 14வது சீசனில் கடைசி 3 போட்டிகளில் சன்ரைசர்ஸ் அணிக்காக ஆடிய உம்ரான் மாலிக், 2 விக்கெட்டுகளை மட்டுமே வீழ்த்தினார். ஆனால் இந்த சீசனில் அதிவேக டாப் 10 பந்துகளில் 4 பந்துகளை உம்ரான் மாலிக் தான் வீசியுள்ளார். இந்த சீசனின் அதிவேக பந்தும் அவர் வீசியதுதான். ஆர்சிபிக்கு எதிரான போட்டியில் தேவ்தத் படிக்கல்லுக்கு 153 கிமீ வேகத்தில் உம்ரான் மாலிக் வீசிய பந்துதான், இந்த சீசனின் அதிவேக பந்து.

லாக்கி ஃபெர்குசன் மற்றும் அன்ரிச் நோர்க்யா ஆகிய 2 சர்வதேச ஃபாஸ்ட் பவுலர்களை விட அதிவேகத்தில் வீசி மிரட்டினார். வெறும் மூன்றே போட்டிகளில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்த உம்ரான் மாலிக், டி20 உலக கோப்பைக்கான இந்திய அணியின் நெட் பவுலராக எடுக்கப்பட்டுள்ளார்.

இவரது பவுலிங்கை நெட்டில் எதிர்கொள்வது இந்திய வீரர்களுக்கு, அதிவேக பவுலிங்கை எதிர்கொண்டு திறம்பட ஆட உதவியாக இருக்கும். அதேவேளையில், ரோஹித் சர்மா, விராட் கோலி, கேஎல் ராகுல் ஆகிய சிறந்த பேட்ஸ்மேன்களுக்கு வலையில் பந்துவீசுவது இளம் ஃபாஸ்ட் பவுலரான உம்ரான் மாலிக்கிற்கு சிறந்த அனுபவமாகவும், நிறைய கற்றுக்கொள்ளவும் உதவும் வகையிலும் அமையும்.
 

click me!