டி20 உலக கோப்பைக்கான பாகிஸ்தான் அணியில் 4வது மாற்றம்..! சீனியர் வீரருக்கு அணியில் இடம்

By karthikeyan VFirst Published Oct 9, 2021, 9:46 PM IST
Highlights

டி20 உலக கோப்பைக்கான பாகிஸ்தான் அணியில் இடம்பெற்றிருந்த சொஹைப் மக்சூத் காயத்தால் வெளியேறியதையடுத்து, அவருக்கு பதிலாக அனுபவ வீரரான ஷோயப் மாலிக் சேர்க்கப்பட்டுள்ளார்.
 

டி20 உலக கோப்பை வரும் 17ம் தேதி தொடங்குகிறது. அதற்காக அனைத்து அணிகளும் தீவிரமாக தயாராகிவரும் நிலையில், அறிவிக்கப்பட்ட அணிகளில் ஏதேனும் மாற்றங்கள் செய்ய விரும்பினால் அக்டோபர் 10 வரை செய்யலாம். 

பாகிஸ்தான் அணி தேர்வு கடும் விமர்சனங்களை எதிர்கொண்ட நிலையில், நேற்று 3 மாற்றங்கள் செய்யப்பட்டது. அசாம் கான் மற்றும் முகமது  ஹஸ்னைன் ஆகிய இருவரும் நீக்கப்பட்டு அவர்களுக்கு பதிலாக முறையே அனுபவ விக்கெட் கீப்பரும் முன்னாள் கேப்டனுமான சர்ஃபராஸ் அகமது மற்றும் ஹைதர் அலி ஆகிய இருவரும் சேர்க்கப்பட்டனர். ரிசர்வ் வீரராக எடுக்கப்பட்ட ஃபகர் ஜமான் அணியில் சேர்க்கப்பட்டு, மெயின் அணியில் இடம்பெற்றிருந்த குஷ்தில் ஷா ரிசர்வ் வீரராக மாற்றப்பட்டார்.

இந்நிலையில், அடுத்ததாக ஒரு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. பேட்டிங் ஆல்ரவுண்டர் சொஹைப் மக்சூத் காயத்தால் டி20 உலக கோப்பைக்கான பாகிஸ்தான் அணியிலிருந்து வெளியேறியதையடுத்து, அவருக்கு பதிலாக சீனியர் ஆல்ரவுண்டர் ஷோயப் மாலிக் சேர்க்கப்பட்டுள்ளார்.

ஆரம்பத்திலேயே பாகிஸ்தான் அணியில் ஷோயப் மாலிக் சேர்க்கப்படாதது கடும் விமர்சனத்துக்குள்ளான நிலையில், அதன்பின்னர் அணியில் செய்யப்பட்ட 3 மாற்றங்களிலும் மாலிக் பெயர் இடம்பெறவில்லை. இந்நிலையில், அவரை அணியில் சேர்ப்பதற்கான வாய்ப்பு அதுவாகவே உருவாகி, அவரை அணியில் சேரவைத்துள்ளது.

1999ம் ஆண்டிலிருந்து பாகிஸ்தான் அணிக்காக ஆடிவரும் ஷோயப் மாலிக் அணியின் சீனியர் வீரர் ஆவார். 39 வயதான ஷோயப் மாலிக், 21 ஆண்டுகளாக சர்வதேச கிரிக்கெட்டில் ஆடிவருகிறார். குறிப்பாக டி20 கிரிக்கெட்டில் மாலிக் மிகச்சிறந்த வீரர் ஆவார்.

பேட்டிங்கில் மட்டுமல்லாது பவுலிங்கிலும் சிறப்பாக செயல்படக்கூடிய சிறந்த ஆல்ரவுண்டர் ஆவார். டி20 கிரிக்கெட் அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து இன்றுவரை ஆடிவரும் வெகுசில வீரர்களில் மாலிக்கும் ஒருவர். 116 சர்வதேச டி20 போட்டிகளில் ஆடிய சிறந்த அனுபவமிக்கவர் மாலிக். மாலிக்கின் அனுபவம் அணிக்கு தேவை என கருதினார் கேப்டன் பாபர் அசாம். ஆனால் தலைமை தேர்வாளர் முகமது வாசிமோ, மாலிக்கின் ஃபிட்னெஸையும் வயதையும் கருத்தில்கொண்டு அவரை அணியில் எடுக்கவில்லை. இந்நிலையில், இப்போது சொஹைப் மக்சூதுக்கு பதிலாக மாலிக் சேர்க்கப்பட்டுள்ளார்.
 

click me!