பொல்லார்டு அணியை பொளந்து கட்டி இறுதி போட்டியில் நுழைந்தது ஹோல்டர் அணி

By karthikeyan VFirst Published Oct 11, 2019, 10:12 AM IST
Highlights

கரீபியன் ப்ரீமியர் லீக் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டிவிட்டது. முதல் தகுதிச்சுற்று போட்டியில் வெற்றி பெற்ற கயானா அமேசான் வாரியர்ஸ் அணி ஏற்கனவே இறுதி போட்டிக்கு தகுதிபெற்றுவிட்ட நிலையில், நேற்று நடந்த இரண்டாவது தகுதி சுற்றுப்போட்டியில் ட்ரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணியை வீழ்த்தி பார்படோஸ் ட்ரைடண்ட்ஸ் அணி இறுதி போட்டிக்கு முன்னேறியுள்ளது. 
 

முதல் தகுதிச்சுற்று போட்டியில் தோற்ற ட்ரைடண்ட்ஸ் அணிக்கும், எலிமினேட்டர் சுற்றில் வெற்றி பெற்ற நைட் ரைடர்ஸ் அணிக்கும் இடையே இரண்டாவது தகுதிச்சுற்று போட்டி நேற்று நடந்தது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய ட்ரைடண்ட்ஸ் அணியின் டாப் ஆர்டர்கள் சோபிக்கவில்லை. மந்தமான தொடக்கத்தையே அமைத்து கொடுத்தனர்.

ஜான்சன் சார்லஸ் 41 பந்துகளில் 35 ரன்கள் அடித்தார். அலெக்ஸ் ஹேல்ஸ் மற்றும் ஜேபி டுமினி ஆகிய இருவரும் தலா 10 ரன்கள் அடித்தனர். ஷகிப் அல் ஹசன் 18 ரன்கள் அடித்தார். ஷாய் ஹோப் 23 ரன்கள், ஜோனாதன் கார்ட்டர் 4 ரன்கள் மற்றும் கேப்டன் ஹோல்டர் 1 ரன்னும் மட்டுமே அடித்தனர். 19 ஓவரில் ட்ரைடண்ட்ஸ் அணி 141 ரன்கள் மட்டுமே அடித்திருந்தது. 

கடைசி ஓவரில் ஆஷ்லி நர்ஸ் 2 சிக்ஸர்கள் விளாச, அந்த ஓவரில் மட்டும் 19 ரன்கள் சேர்க்கப்பட்டது. எனவே ட்ரைடண்ட்ஸ் அணி 20 ஓவரில் 160 ரன்களை அடித்தது. 161 ரன்கள் என்ற இலக்குடன் ஆடிய நைட் ரைடர்ஸ் அணியில் சுனில் நரைன், கோலின் முன்ரோ, லெண்டல் சிம்மன்ஸ், பொல்லார்டு, தினேஷ் ராம்தின், டேரன் பிராவோ என அதிரடி வீரர்கள் பலர் இருந்தும் கூட, யாருமே சோபிக்கவில்லை. சீக்குகே பிரசன்னா மட்டும் சிறப்பாக ஆடி அரைசதம் அடித்தார். பிரசன்னா ஒருமுனையில் நிற்க, மறுமுனையில் விக்கெட்டுகள் சரிந்தன. எனவே கடும் நெருக்கடிக்கு உள்ளான பிரசன்னா, கடைசி ஓவரில் ஆட்டமிழந்தார். இதையடுத்து நைட் ரைடர்ஸ் அணி 148 ரன்களுக்கு ஆல் அவுட்டாக, 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ட்ரைடண்ட்ஸ் அணி இறுதி போட்டிக்கு முன்னேறியது. 

ஷோயப் மாலிக் தலைமையிலான கயானா அமேசான் வாரியர்ஸ் அணிக்கும் ஹோல்டர் தலைமையிலான பார்படோஸ் ட்ரைடண்ட்ஸ் அணிக்கும் இடையேயான இறுதி போட்டி நாளை நடக்கவுள்ளது. 

click me!