மயன்க் அகர்வால் அபார சதம்.. கோலி, புஜாரா அரைசதம்.. முதல் நாள் ஆட்டத்தில் இந்தியா ஆதிக்கம்

By karthikeyan VFirst Published Oct 10, 2019, 4:59 PM IST
Highlights

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில், முதல் நாள் ஆட்டமுடிவில் இந்திய அணி 3 விக்கெட் இழப்பிற்கு 273 ரன்கள் அடித்துள்ளது. 
 

முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்ற நிலையில், இரண்டாவது டெஸ்ட் போட்டி புனேவில் நடந்துவருகிறது. இன்று தொடங்கிய இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் ஆடிவருகிறது. முதல் போட்டியில் இரண்டு இன்னிங்ஸ்களிலும் சதமடித்த ரோஹித் சர்மா, இந்த போட்டியில் வெறும் 14 ரன்களில் ஆட்டமிழந்தார். 

அதன்பின்னர் மயன்க் அகர்வாலுடன் ஜோடி சேர்ந்த புஜாரா சிறப்பாக ஆடினார். தொடக்கம் முதலே கவனமாக ஆடிய மயன்க் அகர்வால், ஃபாஸ்ட் பவுலிங்கிற்கு சாதகமான புனே ஆடுகளத்தில் ரபாடா, ஃபிளாண்டர் ஆகிய டாப் பவுலர்களின் பவுலிங்கை சிறப்பாக எதிர்கொண்டு ஆடினார். ஸ்பின் பவுலிங்கையும் சிறப்பாக ஆடினார். புஜாரா அண்மைக்காலமாக, ரொம்ப மந்தமாக ஆடுவதை விட்டுவிட்டார். பவுண்டரிகளாக விளாசிய புஜாரா, ஒரு சிக்ஸரையும் அடித்தார். அரைசதம் அடித்த புஜாரா 58 ரன்களில் ரபாடாவின் பந்தில் ஆட்டமிழந்தார். 

இதையடுத்து மயன்க் அகர்வாலுடன் கேப்டன் கோலி ஜோடி சேர்ந்தார். தொடர்ந்து சிறப்பாக ஆடிய மயன்க் அகர்வால், சதமடித்தார். டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது இரண்டாவது சதத்தை அடித்த மயன்க் அகர்வால், 108 ரன்களில் ரபாடாவின் பந்தில் ஆட்டமிழந்தார். இந்திய அணியின் ஸ்கோர் 198 ரன்களாக இருந்தபோது மயன்க் அகர்வால் ஆட்டமிழந்தார். இதையடுத்து கேப்டன் கோலியுடன் துணை கேப்டன் ரஹானே ஜோடி சேர்ந்தார். 

காலையில் ஆட்டம் தொடங்கியது முதலே சில பந்துகள் எக்ஸ்ட்ரா பவுன்ஸ் ஆனது. ரஹானே களத்திற்கு வந்த தொடக்கத்தில், ரபாடா வீசிய பவுன்ஸர் ரஹானே கணித்ததை விட சற்று அதிகமாக எழும்பியதால், ரஹானேவின் ஹெல்மெட் க்ரில்லில் அடித்தது. ஆனால் காயம் ஏதும் இல்லாததால் சில நிமிட இடைவெளிக்கு பிறகு ரஹானே பேட்டிங் ஆடினார். இந்த ஆண்டில் டெஸ்ட் கிரிக்கெட்டில் இதுவரை ஒரு சதம் கூட அடிக்காத கோலி, இந்த போட்டியில் நிதானமாக ஆடி அரைசதம் கடந்துவிட்டார். கோலிக்கு ஒத்துழைப்பு கொடுத்து ரஹானேவும் சிறப்பாக ஆடிவருகிறார். 

முதல் நாள் ஆட்ட முடிவில் இந்திய அணி 3 விக்கெட் இழப்பிற்கு 273 ரன்களை குவித்துள்ளது. கோலி 63 ரன்களுடனும் ரஹானே 18 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். கோலி நன்றாக செட்டில் ஆகிவிட்டதால் இந்த இன்னிங்ஸில் சதமடிக்க வாய்ப்புள்ளது. 
 

click me!