
TRICHY vs LKK R Rajkumar Hit Half Century : தமிழ்நாடு பிரீமியர் லீக் தொடரானது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 8 அணிகள் இடம் பெற்று விளையாடி வரும் இந்த தொடரில் தற்போது சேப்பாக்கம் சூப்பர் கில்லீஸ் அணியானது புள்ளிப்பட்டியலில் நம்பர் 1 இடத்தில் உள்ளது. இதே போன்று லைகா கோவை கிங்ஸ் அணி விளையாடிய 3 போட்டிகளிலும் தோல்வி அடைந்து புள்ளிப் பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது.
இந்த நிலையில் தான் டிஎன்பிஎல் தொடரின் 15ஆவது லீக் போட்டியில் திருச்சி கிராண்ட் சோழாஸ் மற்றும் லைகா கோவை கிங்ஸ் அணிகளுக்கு இடையிலான 15ஆவது லீக் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் லைகா கோவை கிங்ஸ் டாஸ் வென்று பவுலிங் தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த திருச்சி கிராண்ட் சோழாஸ் அணியானது நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 168 ரன்கள் எடுத்தது. தொடக்க வீரர்களான வசீம் அகமது மற்றும் சுஜய் இருவரும் இணைந்து நல்ல தொடக்கம் கொடுத்தனர். இதில், வசீம் அகமது 32 ரன்களுக்கு ஆட்டமிழக்க, அடுத்து வந்த கௌசீக் 5 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து சுஜய் 25 ரன்களில் ஆட்டமிழக்க, ஜாஃபர் ஜமால் 6 ரன்களில் நடையை கட்டினார்.
இவரைத் தொடர்ந்து சஞ்சய் யாதவ் 27 ரன்கள் எடுத்து வெளியேற கடைசியில் வந்த ஆல்ரவுண்டர் ஆர் ராஜ்குமார் அதிரடியாக விளையாடி லைகா வீரர்களை திணறடிக்கச் செய்தார். அவர் 24 பந்துகளில் 5 பவுண்டரி, 5 சிக்ஸர் உள்பட 58 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இதன் மூலமாக திருச்சி கிராண்ட் சோழாஸ் அணியானது 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 168 ரன்கள் எடுத்தது.
பவுலிங்கைப் பொறுத்த வரையில் லைகா கோவை கிங்ஸ் அணியில் சுப்பிரமணியன் மட்டும் 2 விக்கெட்டுகள் கைப்பற்றினார். ரோகித், கபிலன் மற்றும் புவனேஸ்வரன் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டுகள் கைப்பற்றினர். இதைத் தொடர்ந்து 169 ரன்களை கடின இலக்காக கொண்டு லைகா கோவை கிங்ஸ் அணியானது விளையாடி வருகிறது. தற்போது வரையில் 10 ஓவர்கள் முடிவில் லைகா கோவை அணியானது 3 விக்கெட்டுகளை இழந்து 76 ரன்கள் எடுத்துள்ளது.
கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வரும் டிஎன்பிஎல் தொடரில் லைகா கோவை கிங்ஸ் அணியானது 2 (2022 மற்றும் 2023) முறை டிராபியை கைப்பற்றியுள்ளது. இதில், 2022 ஆம் ஆண்டு சேப்பாக்கம் சூப்பர் கில்லீஸ் மற்றும் லைகா கோவை கிங்ஸ் அணிகள் இணைந்து டிராபியை கைப்பற்றின. கடந்த ஆண்டு நடைபெற்ற டிஎன்பிஎல் தொடரில் ரவிச்சந்திரன் அஸ்வின் தலைமையிலான திண்டுக்கல் டிராகன்ஸ் அணியானது சாம்பியன் பட்டம் வென்றது. கோவை கிங்ஸ் 2ஆவது இடம் பிடித்தது என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், நடப்பு ஆண்டுக்கான டிஎன்பிஎல் தொடரில் லைகா கோவை கிங்ஸ் அணியானது விளையாடிய 3 போட்டியிலும் தோல்வி அடைந்து புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.