சச்சினை அவுட்டாக்கிய பவுலருக்கும் அவுட் கொடுத்த அம்பயருக்கும் உயிர் பயத்தை காட்டிய ரசிகர்கள்

Published : Jun 08, 2020, 03:58 PM ISTUpdated : Jun 08, 2020, 04:07 PM IST
சச்சினை அவுட்டாக்கிய பவுலருக்கும் அவுட் கொடுத்த அம்பயருக்கும் உயிர் பயத்தை காட்டிய ரசிகர்கள்

சுருக்கம்

சச்சின் டெண்டுல்கரை அவுட்டாக்கிய தனக்கும் தவறாக அவுட் கொடுத்த ஆஸ்திரேலிய அம்பயருக்கும் ரசிகர்கள் கொலை மிரட்டல் விடுத்த சம்பவத்தை இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் பகிர்ந்துள்ளார்.  

உலகளவில் கோடிக்கணக்கான ரசிகர்களை கொண்ட கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர். சச்சின் டெண்டுல்கர் ஓய்வு பெற்று 7 ஆண்டுகள் ஆனநிலையில், தற்போது வரை சச்சினுக்கு மட்டுமே ரசிகர்களாக இருக்கும் ஒரு பெருங்கூட்டம் உள்ளது. அவர் ஆடிய காலக்கட்டத்தில் வெறித்தனமான ரசிகர்களை பெற்றிருந்தார். சச்சின் அவுட்டாகிவிட்டால், அதன்பிறகு கிரிக்கெட் போட்டியை பார்க்காமல் டிவியை விட்டு பெரும்பாலானோர் எழுந்துபோய்விடுவார்கள்.

ஆல்டைம் தலைசிறந்த பேட்ஸ்மேனான சச்சின் டெண்டுல்கர் 24 ஆண்டுகள் சர்வதேச கிரிக்கெட்டில் ஆடி 100 சர்வதேச சதங்களை விளாசியிருக்கிறார். சர்வதேச கிரிக்கெட்டில் அதிக சதங்கள், அதிக ரன்கள் ஆடிய சாதனைகளுக்கு சொந்தக்காரர் சச்சின் டெண்டுல்கர் தான். 

சச்சின் இன்னும் அதிகமான சதங்களை அவரது கெரியரில் அடித்திருக்கலாம். ஆனால் 80 -90 ரன்களை கடந்ததற்கு பிறகு, நிறைய முறை அவுட்டாகியிருக்கிறார். அதுமட்டுமல்லாமல், டி.ஆர்.எஸ் இல்லாத அந்த காலக்கட்டத்தில் அம்பயர்களின் தவறான முடிவுகளாலும் பல முறை அவுட்டாகியுள்ளார். 

அப்படி, அம்பயர் தவறான அவுட் கொடுத்ததற்கு, அந்த அம்பயருக்கும் பந்துவீசிய பவுலருக்கும் ரசிகர்கள் கொலை மிரட்டல் விடுத்த சம்பவத்தை அந்த குறிப்பிட்ட பவுலரே தெரிவித்திருக்கிறார். 

2011ல் இந்தியா - இங்கிலாந்து இடையேயான டெஸ்ட் தொடரில், ஓவலில் நடந்த டெஸ்ட்டில், சச்சின் டெண்டுல்கர் 91 ரன்களில் அவுட். ப்ரெஸ்னன் வீசிய பந்தில், லெக் ஸ்டம்புக்கு வெளியே சென்ற பந்திற்கு, தவறுதலாக அம்பயர் டக்கர் அவுட் கொடுத்துவிட்டார். இந்த சம்பவத்திற்கு முன், 99 சர்வதேச சதங்களை அடித்திருந்த சச்சின், அந்த போட்டியில் அம்பயர் தவறுதலாக அவுட் கொடுக்கவில்லையென்றால், 100வது சதத்தை அன்றே அடித்திருப்பார். அதனால் தான் ரசிகர்கள் கடுப்பாகிவிட்டனர். 

அந்த சம்பவம் குறித்து பேசியுள்ள, சச்சினை அவுட்டாக்கிய ப்ரெஸ்னன், 99 சதங்களை அடித்திருந்த சச்சின், 100வது சதத்தை எதிர்நோக்கி ஆடிக்கொண்டிருந்தார். நான் வீசிய பந்து, லெக் ஸ்டம்புக்கு வெளியே சென்றிருக்கும் என நினைக்கிறேன். ஆனால் நான் தீவிரமாக அப்பீல் செய்தேன். அம்பயர் டக்கரும் அவுட் கொடுத்துவிட்டார்.

ஓவலில் நடந்த அந்த போட்டியில்,சச்சின் 91 ரன்கள் அடித்திருந்த நிலையில், அவுட்டானார். தவறுதலாக அம்பயர் அவுட் கொடுக்கவில்லையென்றால், கண்டிப்பாக சச்சின் 100வது சதத்தை அடித்திருப்பார். 

இதையடுத்து எனக்கும் அம்பயருக்கும் கொலை மிரட்டல்கள் வந்தன. அம்பயர் டக்கரின் வீட்டு முகவரிக்கே கொலை மிரட்டல்கள் வந்துள்ளன. என்ன தைரியம் உனக்கு? லெக் ஸ்டம்புக்கு வெளியே போன பந்துக்கு அவுட் கொடுத்துவிட்டாய் என்று அம்பயருக்கு டக்கருக்கு கொலை மிரட்டல் வந்ததாகவும், தனக்கும் அந்தமாதிரியான கொலை மிரட்டல் வந்ததாகவும் ப்ரெஸ்னன் தெரிவித்துள்ளார். 
 

PREV
click me!

Recommended Stories

விஜய் ஹசாரே டிராபியில் கோலி மிரட்டல் சதம்.. 16000 ரன்களை கடந்து புதிய சாதனை
'பும்ரா, ரிஷப் பண்ட் என்னிடம் மன்னிப்பு கேட்டனர்'.. உருவக் கேலி குறித்து மனம் திறந்த பவுமா..!