
ஐசிசி ஒவ்வொரு வாரமும் ஒருநாள், டெஸ்ட், மற்றும் டி20 தரவரிசைகளை புதுப்பித்து வருகிறது. சில நாட்களுக்கு முன்பு இந்தியா, தென்னாப்பிரிக்கா இடையிலான 5 டி20 போட்டிகள் முடிவடைந்த நிலையில், ஐசிசி 20 தரவரிசை பட்டியல் இன்று வெளியிடப்பட்டுள்ளது. தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான T20I தொடரில் சிறப்பாக செயல்பட்டதன் மூலம், இந்தியாவின் வளர்ந்து வரும் பேட்டிங் நட்சத்திரமான திலக் வர்மா, ஐசிசி ஆடவர் T20I பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் மூன்றாவது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.
இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா இடையே சமீபத்தில் முடிவடைந்த ஐந்து போட்டிகள் கொண்ட T20I தொடரில் சிறப்பாக செயல்பட்ட வீரர்களுக்கும் ஆடவர் T20I வீரர் தரவரிசையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. கடைசி டி20 போட்டியில் திலக் வர்மா 42 பந்துகளில் 73 ரன்கள் விளாசினார். திலக் வர்மா இந்த தொடரில் நான்கு இன்னிங்ஸ்களில் 62.33 சராசரியுடன் 187 ரன்கள் எடுத்து, அதிக ரன்கள் குவித்த வீரராக தொடரை முடித்தார். இதில் இரண்டு அரை சதங்களும், 131.69 ஸ்ட்ரைக் ரேட்டும் அடங்கும். அவரது சிறந்த ஸ்கோர் 73 ஆகும்.
இது அவரை இலங்கையின் பதும் நிசங்காவை பின்னுக்குத் தள்ளி 805 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்தைப் பிடிக்க உதவியது. இதேபோல் தென்னாப்பிரிக்க வீரர் டிவால்ட் பிரெவிஸ் தனது அதிரடி ஆட்டத்தால் 10வது இடத்துக்கு சென்றுள்ளார். வருண் சக்கரவர்த்தியின் நான்கு விக்கெட் சாதனை, தரவரிசையில் அவரது முதலிடத்தை மேலும் உறுதிப்படுத்தியுள்ளது. வருண் சக்கரவர்த்தி 804 புள்ளிகள் பெற்ற நிலையில், இது இரண்டாவது இடத்தில் உள்ள ஜேக்கப் டஃபியை (699) விட மிக அதிகமாகும். வருண் சக்கரவர்த்தி தென்னாப்பிரிக்கா தொடரில் 11.20 சராசரியில் 10 விக்கெட்டுகளை வீழ்த்தி தொடர் நாயகன் விருதை வென்றது குறிப்பிடத்தக்கது.
அபிஷேக் சர்மா முதலிடம்
இந்திய அணியின் அதிரடி நாயகன் அபிஷேக் சர்மா 908 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளார். இங்கிலாந்தின் பில் சால்ட் 2வது இடத்திலும், திலக் வர்மா 3வது இடத்திலும் உள்ளனர். பதும் நிசங்கா 4வது இடத்திலும், ஜோஸ் பட்லர் 5வது இடத்திலும் உள்ளனர். பவுலிங்கில் வருண் சக்கரவர்த்தி முதலிடத்தையும், ஜேக்கப் டஃபி 2வது இடத்தையும் பிடித்துள்ளனர். ரஷித் கான் 3வது இடத்திலும், அப்ரார் அகமது 4வது இடத்திலும், வனிந்து ஹசரங்கா 5வது இடத்திலும் உள்ளனர்.