
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை (0–2) இழந்ததை அடுத்து, இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் கவுதம் கம்பீருக்கு (Gautam Gambhir) எதிராக எழுந்துள்ள விமர்சனங்களுக்கு, இந்திய அணியின் முன்னாள் ஜாம்பவான் சுனில் கவாஸ்கர் (Sunil Gavaskar) கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
கவுகாத்தியில் புதன்கிழமை முடிவடைந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியில், இந்திய அணி மிகப்பெரிய வித்தியாசத்தில் (408 ரன்கள்) தோல்வியடைந்தது. கடந்த ஓராண்டில் சொந்த மண்ணில் இந்தியா சந்தித்த இரண்டாவது தொடர் தோல்வி இதுவாகும்.
இந்தப் படுதோல்வியால் கம்பீருக்கு எதிராக ரசிகர்கள் மற்றும் முன்னாள் வீரர்கள் பலரும் விமர்சனங்களை முன்வைத்துள்ளனர். மைதானத்தில் இருந்த சில ரசிகர்கள் கம்பீருக்கு எதிராக கோஷமிட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், தனியார் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் பேசிய கவாஸ்கர், கம்பீரை மட்டும் குறிவைத்து விமர்சிப்பது ஏன் என்று கேள்வி எழுப்பினார்.
"கம்பீர் பயிற்சியாளராக இருந்தபோது, இந்திய அணி முக்கிய கோப்பைகளை வென்றபோது அமைதியாக இருந்த நபர்கள், இப்போது மட்டும் ஏன் அவருக்கு எதிராகக் கூச்சலிடுகிறார்கள்?" என்று கவாஸ்கர் கேள்வி எழுப்பினார்.
ஒரு பயிற்சியாளர் அணிக்கு வழிகாட்டவும், வியூகம் வகுக்கவும், தயார் படுத்தவும் மட்டுமே முடியும் என்றும், களத்தில் அதைச் செயல்படுத்த வேண்டியது வீரர்களின் பொறுப்பு என்றும் அவர் வாதிட்டார்.
"அவர் (கம்பீர்) ஒரு பயிற்சியாளர். ஒரு பயிற்சியாளர் ஒரு அணியைத் தயார் செய்யலாம்... ஆனால் களத்தில் இறங்கி, செயல்படுத்துவது வீரர்கள் தான்," என்று கவாஸ்கர் கூறினார்.
"அவர் (கம்பீர்) தலைமையில் இந்தியா சாம்பியன்ஸ் டிராபி மற்றும் ஆசியக் கோப்பையை வென்றபோது நீங்கள் என்ன செய்தீர்கள்?" என விமர்சகர்களைப் பார்த்து கவாஸ்கர் எதிர்க்கேள்வி எழுப்பியுள்ளார்.
வெற்றி பெற்றபோது கம்பீர் நீண்ட காலம் பயிற்சியாளராகத் தொடர வேண்டும் என்று சொல்லாத விமர்சகர்கள், தோல்விக்காக அவரது பணி நீட்டிப்பை ரத்து செய்யக் கோருவது இரட்டை நிலைப்பாடு என்று கவாஸ்கர் விமர்சித்தார்.
வெற்றியையும் தோல்வியையும் ஒரே மாதிரியாகப் பார்க்க வேண்டும் என்று வலியுறுத்திய கவாஸ்கர், பிரண்டன் மெக்கல்லம் வழிநடத்தும் இங்கிலாந்து அணி உட்பட பல அணிகள் அனைத்து வடிவங்களுக்கும் ஒரே ஒரு பயிற்சியாளரை மட்டுமே கொண்டு இயங்குவதைச் சுட்டிக்காட்டினார்.