தம்பிக்கு ஆப்பு கன்ஃபார்ம்.. ஆடும் லெவன் விவகாரத்தில் தேர்வுக்குழுவுக்கும் நிர்வாகத்துக்கும் இடையே மோதல்..?

By karthikeyan VFirst Published Sep 26, 2019, 3:05 PM IST
Highlights

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அணியில் விக்கெட் கீப்பராக யாரை சேர்ப்பது என்பதில் தேர்வுக்குழுவும் அணி நிர்வாகமும் முரண்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

டெஸ்ட் அணியின் முதன்மை விக்கெட் கீப்பராக இருந்துவந்த ரிதிமான் சஹா, காயத்தால் கடந்த ஆண்டு ஆடமுடியாமல் போனதை அடுத்து, இங்கிலாந்து சுற்றுப்பயணம், ஆஸ்திரேலிய சுற்றுப்பயணம், வெஸ்ட் இண்டீஸுக்கு எதிராக கடந்த ஆண்டு நடந்த டெஸ்ட் தொடர் ஆகியவற்றில் ரிஷப் பண்ட் விக்கெட் கீப்பராக ஆடினார். 

ரிஷப் பண்ட்டின் விக்கெட் கீப்பிங் கடுமையாக விமர்சிக்கப்பட்ட போதிலும், பேட்டிங்கில் நன்றாக ஆடினார். இங்கிலாந்தில் ஒரு சதம், ஆஸ்திரேலியாவில் ஒரு சதம் அடித்து அசத்தினார். ஆனால் அவரது விக்கெட் கீப்பிங் படுமோசமாக இருந்தது. இப்போது ஓரளவிற்கு தேறிவிட்டார் என்றாலும் இன்னும் முழுமையான விக்கெட் கீப்பராகவில்லை. 

டெஸ்ட் கிரிக்கெட்டை பொறுத்தமட்டில், விக்கெட் கீப்பிங்கிற்கு முக்கியத்துவம் கொடுத்துத்தான் விக்கெட் கீப்பர் - பேட்ஸ்மேன் எடுக்கப்பட வேண்டும் என்ற கருத்துகள் அந்த தொடர்களின்போதே ஓங்கி ஒலித்தன. ஆனால் மூன்றுவிதமான போட்டிகளுக்கும் ரிஷப் பண்ட்டை விக்கெட் கீப்பர் - பேட்ஸ்மேனாக உருவாக்கிவருவதால், இளம் வீரரான அவரது சொதப்பல்களை பற்றி கவலைப்படாமல் தொடர் வாய்ப்புகள் வழங்கப்பட்டுவருகின்றன. 

ரிதிமான் சஹா உலகத்தரம் வாய்ந்த சிறந்த விக்கெட் கீப்பர் என்பது அனைவரும் அறிந்ததே. அவர் காயத்தில் இருந்து மீண்டு, வெஸ்ட் இண்டீஸ் தொடரில் மீண்டும் டெஸ்ட் அணியில் இணைந்தார். ஆனாலும் அவருக்கு ஆடும் லெவனில் வாய்ப்பளிக்கப்படவில்லை. இந்நிலையில், தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடர் முழுவதும் ரிதிமான் சஹா ஆடுவார் என்று தெரிகிறது.

வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணத்தில் இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் சேர்த்தே மொத்தமாக வெறும் 58 ரன்கள் மட்டுமே அடித்தார் ரிஷப் பண்ட். அதன்பின்னர் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக நடந்த டி20 தொடரிலும் படுமோசமாக சொதப்பினார். பேட்டிங்கில் தொடர்ச்சியாக சொதப்புவது மட்டுமல்லாமல் டெஸ்ட் போட்டிகளில் விக்கெட் கீப்பிங்கிலும் சொதப்புகிறார்.

 

இந்திய ஆடுகளங்களில் பந்து நன்றாக திரும்பும் என்பதால், இந்தியாவில் ரிஷப் பண்ட்டுக்கு விக்கெட் கீப்பிங் சவாலாகவே இருக்கும். ரிதிமான் சஹா தலைசிறந்த விக்கெட் கீப்பர் என்பதால் விக்கெட் கீப்பிங்கில் சிறப்பாக செயல்படுவார். ஆனால் ரிஷப் பண்ட்டை விக்கெட் கீப்பிங்கில் நம்பமுடியாது. எனவே ரிஷப் பண்ட்டிற்கு பதிலாக சஹா சேர்க்கப்படுவதற்கான வாய்ப்புள்ளதாக தெரிகிறது. 

ரிஷப் பண்ட்டுக்கு கடைசியாக ஒரு வாய்ப்பு கொடுத்து பார்க்கலாம் என்பது தேர்வுக்குழுவின் கருத்தாக உள்ளதாகவும் ஆனால் முதல் போட்டியிலிருந்தே ரிதிமான் சஹா தான் ஆட வேண்டும் என்பது அணி நிர்வாகத்தின்(கேப்டன் மற்றும் பயிற்சியாளர்) கருத்தாக உள்ளதாகவும் டைம்ஸ் ஆஃப் இந்தியாவிற்கு நெருக்கமான சோர்ஸ் தெரிவித்துள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. வீரர்களை தேர்வு செய்வதுடன் தேர்வுக்குழுவின் பணி முடிந்துவிட்டது. 

அதுமட்டுமல்லாமல் இப்போதிருக்கும் தேர்வுக்குழு, வீரர்கள் தேர்வையே தன்னிச்சையாக மேற்கொள்வதில்லை என்றும் அணி நிர்வாகத்தின் பரிந்துரையின் பேரில்தான் வீரர்கள் தேர்வு நடக்கிறது என்றும் பரவலாக பேச்சு உள்ளது. அப்படியிருக்கையில், தேர்வுக்குழுவின் பேச்செல்லாம் இந்த விஷயத்தில் எடுபடாது. கேப்டன் கோலியும் பயிற்சியாளர் ரவி சாஸ்திரியும் என்ன நினைக்கின்றனரோ அதுதான் நடக்கும் என்பதால், தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ரிஷப் பண்ட் கழட்டிவிடப்பட்டு சஹா ஆடும் லெவனில் இடம்பெறுவது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது என்று கூறலாம். 
 

click me!