இங்கிலாந்திற்கு எதிரான 4ஆவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது.
இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையிலான 4ஆவது டெஸ்ட் போட்டி தற்போது ராஞ்சியில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணிக்கு ஜோ ரூட் 122* ரன்கள் எடுத்து கொடுக்க அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 353 ரன்கள் குவித்தது. இந்திய அணி சார்பில் ரவீந்திர ஜடேஜா 4 விக்கெட்டும், ஆகாஷ் தீப் 3 விக்கெட்டும், முகமது சிராஜ் 2 விக்கெட்டும் கைப்பற்றினர்.
பின்னர் வந்த இந்திய அணிக்கு ரோகித் சர்மா 2 ரன்களில் ஆட்டமிழந்து அதிர்ச்சி கொடுத்தார். இவரைத் தொடர்ந்து வந்த சுப்மன் கில் 38 ரன்கள் எடுத்த நிலையில் எல்பிடபிள்யூ முறையில் ரெவியூ எடுத்து Umpires Call முறையில் ஆட்டமிழந்தார். ரஜத் படிதரும் நடுவரது முடிவில் 17 ரன்கள் எடுத்த நிலையில் சோயிப் பஷீர் பந்தில் ஆட்டமிழந்தார். ரவீந்திர ஜடேஜா 2 சிக்ஸர்கள் அடித்த நிலையில் சோயிப் பஷீர் பந்தில் கேட்ச் கொடுத்து நடையை கட்டினார். ஒருபுறம் நிதானமாக விளையாடி வந்த தொடக்க வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 73 ரன்களில் பஷீர் பந்தில் கிளீன் போல்டானார்.
தனது 2ஆவது போட்டியில் விளையாடி வரும் சர்ஃபராஸ் கான் கிடைத்த வாய்ப்பை பயன்படுத்துவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 14 ரன்களில் டாம் ஹார்ட்லி பந்தில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ரவிச்சந்திரன் அஸ்வின் எல்பிடபிள்யூ முறையில் நடுவரது முடிவால் ஆட்டமிழந்தார். இந்திய அணி சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது. தற்போது வரையில் 7 விக்கெட்டுகளை இழந்து 193 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது.
இங்கிலாந்து அணியைப் பொறுத்த வரையில் சோயிப் பஷீர் 4 விக்கெட்டுகள் கைப்பற்றியுள்ளார். டாம் ஹார்ட்லி 2 விக்கெட்டுகள் எடுத்துள்ளார்.