டி20 உலக கோப்பைக்கான இந்திய அணியில் அதிரடி மாற்றங்கள்..? கோலி, ரோஹித்துடன் தேர்வாளர்கள் ஆலோசனை

By karthikeyan VFirst Published Oct 9, 2021, 2:35 PM IST
Highlights

டி20 உலக கோப்பைக்கான இந்திய அணியை உறுதி செய்வது தொடர்பாக கேப்டன் விராட் கோலி மற்றும் துணை கேப்டன் ரோஹித் சர்மா ஆகியோருடன் அணி தேர்வாளர்கள் ஆலோசனை நடத்துகின்றனர்.
 

டி20 உலக கோப்பைக்கான இந்திய அணி கடந்த செப்டம்பர் மாதம் 8ம் தேதி அறிவிக்கப்பட்டது. டி20 உலக கோப்பைக்கான இந்திய அணியில் அஷ்வின், வருண் சக்கரவர்த்தி, ராகுல் சாஹர், அக்ஸர் படேல், ஜடேஜா ஆகிய ஸ்பின்னர்கள் இடம்பெற்றிருந்த நிலையில், கடந்த சில வருடங்களாக வெள்ளைப்பந்து கிரிக்கெட்டில் கோலோச்சிவரும் யுஸ்வேந்திர சாஹலுக்கு அணியில் இடம் கிடைக்கவில்லை.

சாஹல் ரிசர்வ் வீரராக எடுக்கப்பட்டார். அதேபோல ஷ்ரேயாஸ் ஐயர் மற்றும் தீபக் சாஹர் ஆகியோரும் ரிசர்வ் வீரர்களாகவே எடுக்கப்பட்டனர். டி20 உலக கோப்பைக்கான இந்திய அணியில் ஆல்ரவுண்டராக எடுக்கப்பட்ட ஹர்திக் பாண்டியா ஃபிட்னெஸ் பிரச்னையால் பந்துவீசமுடியாமல் திணறிவருகிறார். 4வது ஃபாஸ்ட் பவுலராக எடுக்கப்பட்ட ஹர்திக் பாண்டியா பந்துவீசுவது அவசியம். அவர் பந்துவீசவில்லை என்றால், அது இந்திய அணிக்கு பிரச்னையாக அமையும்.

மேலும், டி20 உலக கோப்பைக்கான மெயின் அணியில் இடம்பெறாத சாஹல், ஷ்ரேயாஸ் ஐயர் ஆகிய வீரர்கள் ஐபிஎல் 14வது சீசனின் இரண்டாம் பாகத்தில் அருமையாக விளையாடிவருகின்றனர். எனவே டி20 உலக கோப்பைக்கான இந்திய அணியில் மாற்றங்கள் செய்யப்படலாம் என்று பேசப்பட்டது.

டி20 உலக கோப்பைக்கான அணியில் மாற்றங்கள் செய்வதென்றால், செய்துவிட்டு இறுதி அணியை உறுதி செய்ய அக்டோபர் 10(நாளை) கடைசி நாள். அந்தவகையில், ஐபிஎல் பெர்ஃபாமன்ஸ், தற்போதைய ஃபார்ம், ஃபிட்னெஸ் ஆகியவற்றை கருத்தில்கொண்டு சில மாற்றங்கள் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதுகுறித்து தேர்வாளர்கள் ஆலோசிக்கின்றனர். இந்த ஆலோசனை கூட்டத்தில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி மற்றும் துணை கேப்டன் ரோஹித் சர்மா ஆகியோரும் கலந்துகொள்கின்றனர்.

ஹர்திக் பாண்டியா பந்துவீசவில்லை என்றாலும், அவருக்கு நிகரான மற்றொரு ஃபாஸ்ட் பவுலிங் ஆல்ரவுண்டர் இல்லை என கருதுகிறது பிசிசிஐ. அதனால் அவர் நீக்கப்பட வாய்ப்பில்லை. ஷர்துல் தாகூர், தீபக் சாஹர் ஆகியோர் இன்னும் ஹர்திக் பாண்டியாவிற்கு நிகரான ஆல்ரவுண்டர்களாக தயாராகவில்லை என்றே கருதுகிறது பிசிசிஐ. அதனால் ஹர்திக் பாண்டியா நீக்கப்பட வாய்ப்பில்லை. 

டி20 உலக கோப்பைக்கான இந்திய அணி:

விராட் கோலி(கேப்டன்), ரோஹித் சர்மா(துணை கேப்டன்), கேஎல் ராகுல், சூர்யகுமார் யாதவ், ரிஷப் பண்ட்(விக்கெட் கீப்பர்), இஷன் கிஷன்(விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, ராகுல் சாஹர், ரவிச்சந்திரன் அஷ்வின், அக்ஸர் படேல், வருண் சக்கரவர்த்தி, ஜஸ்ப்ரித் பும்ரா, புவனேஷ்வர் குமார், முகமது ஷமி.
 

click me!