
இந்திய அணி 3 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடுவதற்காக தென்னாப்பிரிக்காவிற்கு சென்றுள்ளது. முதலில் டெஸ்ட் தொடரும், அதைத்தொடர்ந்து ஒருநாள் தொடரும் நடக்கவுள்ளன.
முதல் டெஸ்ட் போட்டி வரும் 26ம் தேதி செஞ்சூரியனில் தொடங்குகிறது. இது ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கானது என்பதால் இரு அணிகளும் வெற்றி முனைப்பில் களம் காணும்.
இந்த போட்டியில் களமிறங்கும் இந்திய அணியின் உத்தேச ஆடும் லெவனை பார்ப்போம். ரோஹித் சர்மா காயம் காரணமாக இந்த தொடரில் ஆடாததால், கேஎல் ராகுல் மற்றும் மயன்க் அகர்வால் ஆகிய இருவரும் தொடக்க வீரர்களாக களமிறங்குவார்கள். அண்மைக்காலமாக பெரிய ஸ்கோர் அடிக்க முடியாமல் புஜாரா திணறினாலும், அவருக்கு இன்னும் இந்திய அணியில் வாய்ப்பளிக்கப்படும் என்பதால் புஜாரா 3ம் வரிசையில் ஆடுவார்.
வழக்கம்போலவே கேப்டன் கோலி 4ம் வரிசையில் ஆடுவார். 5ம் வரிசையில் இதுவரை ஆடிவந்த சீனியர் வீரர் ரஹானேவின் காலம் கிட்டத்தட்ட முடிந்துவிட்டது. அடுத்தகட்டத்தை நோக்கி நகர்வதற்கான கட்டாயத்தில் உள்ள இந்திய அணி, கண்டிப்பாக ஷ்ரேயாஸ் ஐயரைத்தான் 5ம் வரிசையில் ஆடவைக்கும். 6ம் வரிசையில் ஹனுமா விஹாரி மற்றும் 7ம் வரிசையில் விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட்.
7 பேட்ஸ்மேன் மற்றும் 4 பவுலர்கள் என்ற காம்பினேஷனுடன் இந்திய அணி ஆடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதில் ஒரு ஸ்பின்னர், 3 ஃபாஸ்ட் பவுலர்கள். ஸ்பின்னராக சீனியர் ஸ்பின்னர் ரவிச்சந்திரன் அஷ்வின் ஆடுவார். அவர் பேட்டிங்கும் ஆடுவார் என்பதால் அவரை ஆல்ரவுண்டராக எடுத்துக்கொள்ளலாம். ஃபாஸ்ட் பவுலர்களாக பும்ரா, ஷமி மற்றும் முகமது சிராஜ் ஆகிய மூவரும் ஆடுவார்கள்.
முதல் டெஸ்ட் போட்டிக்கான உத்தேச இந்திய அணி:
கேஎல் ராகுல், மயன்க் அகர்வால், புஜாரா, கோலி (கேப்டன்), ஷ்ரேயாஸ் ஐயர், ஹனுமா விஹாரி, ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்), ரவிச்சந்திரன் அஷ்வின், முகமது ஷமி, முகமது சிராஜ், ஜஸ்ப்ரித் பும்ரா.