
ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி சவுத்தாம்ப்டனில் நடந்துவருகிறது. இந்தியா - நியூசிலாந்து இடையேயான இறுதிப்போட்டியின் முதல் நாள் ஆட்டம்(18ம் தேதி) மழையால் ரத்தானது.
2ம் நாளான நேற்று ஆட்டம் தொடங்கிய நிலையில், போதிய வெளிச்சமின்மையால் ஆட்டம் அவ்வப்போது தடைபட்டது. 3வது செசன் கிட்டத்தட்ட முழுமையாகவே பாதிக்கப்பட்டது. அதனால் 2ம் நாள் ஆட்டத்தில் 64.4 ஓவர்கள் வீசப்பட்டன. அதில் இந்திய அணி 3 விக்கெட் இழப்பிற்கு 146 ரன்கள் அடித்திருந்தது. நல்ல தொடக்கத்தை அமைத்து கொடுத்த ரோஹித் 34 ரன்களிலும் கில் 28 ரன்களிலும் ஆட்டமிழக்க, புஜாரா 8 ரன்களுக்கு ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார்.
கோலியும் ரஹானேவும் 3ம் நாளான இன்றைய ஆட்டத்தை தொடர்ந்த நிலையில், கோலி இன்று ரன் ஏதும் அடிக்காமல் ஜாமிசனின் பந்தில் 44 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். ரிஷப் பண்ட்டும் ஜாமிசனின் பந்தில் 4 ரன்களுக்கு நடையை கட்ட, சிறப்பாக ஆடி அரைசதத்தை நெருங்கிய ரஹானே 49 ரன்னில் ஆட்டமிழக்க, அஷ்வின் 22 ரன்களுக்கு வெளியேற, 3ம் நாள் ஆட்டத்தின் உணவு இடைவேளை வரை இந்திய அணி 7 விக்கெட் இழப்பிற்கு 211 ரன்கள் அடித்திருந்தது.
உணவு இடைவேளை முடிந்து வந்ததுமே ஜாமிசனின் பந்தில் இஷாந்த் சர்மா ஆட்டமிழக்க, அதற்கடுத்த பந்திலேயே பும்ரா ஆட்டமிழக்க, அடுத்த ஓவரின் முதல் பந்திலேயே டிரெண்ட் போல்ட்டின் பந்தில் ஜடேஜா 15 ரன்னில் ஆட்டமிழக்க, முதல் இன்னிங்ஸில் 217 ரன்களுக்கு சுருண்டது இந்திய அணி. நியூசிலாந்து அணி சார்பில் அதிகபட்சமாக ஜாமிசன் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். டெஸ்ட் கிரிக்கெட்டில் 5வது முறையாக, ஒரு இன்னிங்ஸில் 5 விக்கெட் வீழ்த்தினார் ஜாமிசன்.