அனுபவம்னா என்னனு காட்டிய தினேஷ் கார்த்திக்; அதிரடி சதம்..! ஹிமாச்சல் அணிக்கு கடின இலக்கை நிர்ணயித்த தமிழ்நாடு

By karthikeyan VFirst Published Dec 26, 2021, 1:58 PM IST
Highlights

விஜய் ஹசாரே டிராபி ஃபைனலில் ஹிமாச்சல் பிரதேச அணிக்கு 315 ரன்கள் என்ற கடின இலக்கை நிர்ணயித்துள்ளது தமிழ்நாடு அணி.
 

உள்நாட்டு ஒருநாள் தொடரான விஜய் ஹசாரே தொடரின் இறுதிப்போட்டி இன்று ஜெய்ப்பூரில் நடந்துவருகிறது. டாஸ் வென்ற ஹிமாச்சல் பிரதேச அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்தது.

முதலில் பேட்டிங் ஆடிய தமிழ்நாடு அணியின் தொடக்க வீரர்கள் பாபா அபரஜித் 2 ரன்னிலும், ஜெகதீசன் 9 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். 3ம் வரிசையில் இறங்கிய சாய் கிஷோர் 18 ரன்னிலும், 4ம் வரிசையில் இறக்கப்பட்ட முருகன் அஷ்வின் வெறும் 7 ரன்னிலும் ஆட்டமிழக்க, 40 ரன்களுக்கே 4 விக்கெட்டுகளை இழந்து இக்கட்டான நிலையில் இருந்த தமிழ்நாடு அணியை தினேஷ் கார்த்திக்கும் பாபா இந்திரஜித்தும் இணைந்து காப்பாற்றினர்.

சீனியர் வீரரான தினேஷ் கார்த்திக்குடன் இணைந்து இந்திரஜித் சிறப்பாக விளையாடினர். இருவரும் இணைந்து 5வது விக்கெட்டுக்கு 202 ரன்களை குவித்தது. முக்கியமான நேரத்தில் பொறுப்பாக பேட்டிங் ஆடி 71 பந்தில் 80 ரன்கள் அடித்தார் பாபா இந்திரஜித்.

சீனியர் வீரர் என்ற பொறுப்புடன் அதிரடியாக ஆடி சதமடித்த தினேஷ் கார்த்திக் 116 ரன்னில் ஆட்டமிழக்க, அதன்பின்னர் பொறுப்பை தனது தோள்களில் சுமந்த ஷாருக்கான் 21 பந்தில் 3 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்களுடன் 42 ரன்கள் அடித்தார். விஜய் சங்கர் 16 பந்தில் 22 ரன்கள் அடிக்க, 49.4 ஓவரில் 314 ரன்களுக்கு ஆல் அவுட்டானது தமிழ்நாடு அணி.

20 ஓவரில் 60 ரன்கள் என்ற மோசமான நிலையிலிருந்து தமிழ்நாடு அணி 314 ரன்களுக்கு இன்னிங்ஸை முடித்தது. சௌராஷ்டிரா அணி 315 ரன்கள் என்ற கடின இலக்கை விரட்டிவருகிறது.
 

click me!