#SMAT2021 ஃபைனலில் பரோடாவை வீழ்த்தி சையத் முஷ்டாக் அலி டிராபியை வென்றது தமிழ்நாடு..!

By karthikeyan VFirst Published Jan 31, 2021, 10:21 PM IST
Highlights

சையத் முஷ்டாக் அலி தொடரின் ஃபைனலில் பரோடா அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி தமிழ்நாடு அணி கோப்பையை வென்றது.
 

உள்நாட்டு டி20 தொடரான சையத் முஷ்டாக் அலி தொடர் கடந்த 10ம் தேதி முதல் நடந்துவந்தது. தமிழ்நாடு மற்றும் பரோடா அணிகள் ஃபைனலுக்கு தகுதிபெற்ற நிலையில், ஃபைனல் அகமதாபாத் சர்தார் படேல் ஸ்டேடியத்தில் நடந்தது.

ஃபைனலில் டாஸ் வென்ற தமிழ்நாடு அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்ய, முதலில் பேட்டிங் ஆடிய பரோடா அணி 20 ஓவரில் வெறும் 120 ரன்கள் மட்டுமே அடித்தது. பரோடா அணி வீரர்கள் தொடக்கம் முதலே சீரான இடைவெளியில் தொடர்ச்சியாக விக்கெட்டுகளை இழந்தனர். அதனால் ரன் வேகமும் மந்தமாகவே இருந்தது. தொடக்க வீரர் தேவ்தர் 16 ரன்னிலும், ராத்வா, ஸ்மித் படேல் ஆகிய இருவரும் ஒரு ரன்னிலும், பானு பனியா ரன்னே அடிக்காமலும் ஆட்டமிழக்க, அபிமன்யூ ராஜ்பூத் 2 ரன்னிலும், கார்த்திக் ககடே 4 ரன்னிலும் தமிழ்நாடு ஸ்பின்னர் மணிமாறன் சித்தார்த் சுழலில் ஆட்டமிழந்தனர்.

விஷ்ணு சோலங்கி மட்டுமே ஓரளவிற்கு நன்றாக ஆடி அதிகபட்சமாக 49 ரன்கள் அடித்தார். பின்வரிசை வீரரான ஷேத் 29 ரன்கள் அடித்தார். பரோடா அணி வீரர்கள் சீரான இடைவெளியில் தொடர்ச்சியாக ஆட்டமிழந்ததால் அந்த அணி 20 ஓவரில் வெறும் 120 ரன்கள் மட்டுமே அடித்தது. தமிழ்நாடு அணியில் மணிமாறன் சித்தார்த் அதிகபட்சமாக 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

121 ரன்கள் என்ற எளிய இலக்கை விரட்டிய தமிழ்நாடு அணியின் தொடக்க வீரர் ஜெகதீசன் 14 ரன்களில் ஆட்டமிழந்தார். சிறப்பாக ஆடிய மற்றொரு தொடக்க வீரரான ஹரி நிஷாந்த், 35 ரன்கள் அடித்து ஆட்டமிழக்க, கேப்டன் தினேஷ் கார்த்திக் 22 ரன்னில் ஆட்டமிழந்தார்.

இலக்கு எளிதானது என்பதால் பதற்றப்படாமல் பாபா அபரஜித் நிதானமாக ஆட, ஷாருக்கான் 7 பந்தில் 2 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸருடன் 18 ரன்கள் அடித்து 18வது ஓவரிலேயே போட்டியை முடித்தார். 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற தமிழ்நாடு அணி, சையத் முஷ்டாக் அலி டிராபியை வென்றது.
 

click me!