டி20 உலகக் கோப்பை டிராபியோடு மும்பை வந்த இந்திய அணி வீரர்களுக்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். வான்கடே மைதானத்தில் பேசிய ரோகித் சர்மா இந்த டிராபி தேசத்திற்கானது என்றார்.
டி20 உலகக் கோப்பை டிராபியை வென்று 4 நாட்களுக்கு பிறகு பார்படாஸிலிருந்து நாடு திரும்பிய இந்திய அணி வீரர்களுக்கு டெல்லியில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. டெல்லி வந்த இந்திய அணி வீரர்கள் முதலில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து வாழ்த்து பெற்று அவருடன் கலந்துரையாடினர். கடைசியாக டிராபியோடு போட்டோஷூட் நடத்தினர்.
இதையடுத்து காலை விருந்து முடித்த கையோடு டெல்லியிலிருந்து மும்பை வந்தனர். மும்பை வந்த அவர்களுக்கு விமான நிலையத்தில் தண்ணீர் பீய்ச்சி அடித்து மரியாதை கொடுத்தனர். அதன் பிறகு அங்கிருந்து மரைன் டிரைவ் வந்த இந்திய அணி வீரர்கள் நரிமன் பாய்ண்டிலிருந்து திறந்தவெளி பேருந்தில் வெற்றி அணிவகுப்பு நடத்தி வான்கடே மைதானம் வந்தனர்.
அப்போது பேசிய ரோகித் சர்மா கூறியிருப்பதாவது: இந்த டிராபி தேசத்திற்கானது. ரசிகர்கள் எங்களுக்கு சிறப்பு மிக்க வரவேற்பு அளித்திருக்கிறார்கள். கடந்த 2007 ஆம் ஆண்டு தான் முதல் முறையாக டி20 உலகக் கோப்பை டிராபியை வென்றோம். அது தான் எனது முதல் டி20 உலகக் கோப்பை டிராபி.
இதே போன்று தான் ஒவ்வொரு உலகக் கோப்பை வெற்றியும். எங்களுக்கு ஸ்பெஷல் தான். 2011 உலகக் கோப்பை, 2013 சாம்பியன்ஸ் டிராபி என்று எல்லாமே எனது மனதில் நீங்காமல் இருக்கிறது. கடைசி ஓவரை சிறப்பாக வீசிய ஹர்திக் பாண்டியாவிற்கு வாழ்த்துக்கள். அவர் எங்களுக்கு வெற்றி தேடிக் கொடுத்தார். இதே போன்று தான் சூர்யகுமார் யாதவ் பிடித்த கேட்ச்சும். போட்டியில் திருப்பு முனையை ஏற்படுத்திவிட்டது.
இந்த தொடரில் ஒரு போட்டியில் கூட தோற்கவில்லை. எல்லா போட்டியிலும் வெற்றி தான். இப்படியொரு டீம் கிடைத்ததற்கு நான் அதிர்ஷ்டசாலி. இந்த டிராபி வெல்ல அணியின் கடும் பயிற்சி தான் காரணமாக இருந்தது என்று கூறியுள்ளார்.