சிரிப்புடன் அமீரகம் சென்று அழுகையுடன் இந்தியா திரும்பிய ரெய்னா..!

By karthikeyan VFirst Published Aug 29, 2020, 5:13 PM IST
Highlights

ஐபிஎல்லில் அசத்தும் ஆர்வத்தில் பெருமகிழ்ச்சியுடன் ஐக்கிய அரபு அமீரகம் சென்ற சுரேஷ் ரெய்னா, அழுகையுடன் இந்தியா திரும்பியுள்ளார்.
 

ஐபிஎல் 13வது சீசன் வரும் செப்டம்பர் 19ம் தேதி ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்கவுள்ளது. கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளின்படி, தனிமைப்படுத்தி அனைவருக்கும் கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ள கால அவகாசம் தேவை என்பதால், முன்கூட்டியே அனைத்து அணிகளும் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பாக ஐக்கிய அரபு அமீரகம் சென்றன. 

தோனி தலைமையிலான சிஎஸ்கே அணி கடந்த 21ம் தேதி சென்னையிலிருந்து ஐக்கிய அரபு அமீரகத்திற்கு சென்றது. 3 முறை ஐபிஎல் டைட்டிலை வென்ற வெற்றிகரமான அணி சிஎஸ்கே. பொதுவாகவே சிஎஸ்கே அணி மீது பெரும் எதிர்பார்ப்பு இருக்கும். இந்த முறை அந்த எதிர்பார்ப்பு மேலும் அதிகமாக இருந்தது. தோனியும் ரெய்னாவும் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு அறிவித்ததால், அவர்கள் இருவரும் ஐபிஎல்லில் வெளுத்து கட்டுவார்கள் என நம்பிய ரசிகர்கள், அவர்களை களத்தில் காண ஆர்வமாக இருந்தனர். 

தோனி மற்றும் ரெய்னா மீதான எதிர்பார்ப்பும் அதிகமாக இருந்தது. தோனிக்கு மிகவும் நெருக்கமான மற்றும் சிஎஸ்கேவின் செல்லப்பிள்ளையான ரெய்னா, தனக்கு 33 வயது மட்டுமே என்றபோதிலும், தோனியுடன் இணைந்து தனது சர்வதேச கிரிக்கெட் கெரியரை முடித்துக்கொண்டார். 

இதையடுத்து ஃப்ரெஷ்ஷான மனநிலையுடன், ஐபிஎல்லை மகிழ்ந்து ரசித்து ஆடி, ரசிகர்களை எண்டர்டெய்ன் செய்வதுடன், சிஎஸ்கே அணிக்கு வெற்றிகளை குவித்துக்கொடுக்கும் முனைப்புடன் உற்சாகமாக தனது அணியுடன் சென்னையிலிருந்து ஐக்கிய அரபு அமீரகத்திற்கு கிளம்பிய ரெய்னா, ஐபிஎல் தொடங்குவதற்கு முன்பாகவே, மிகுந்த சோகத்துடனும் அழுகையுடனும் இந்தியா திரும்பியுள்ளார். 

பஞ்சாப் மாநிலம் பதான்கோட் அருகேயுள்ள தரியல் என்ற ஊரில் சுரேஷ் ரெய்னாவின் அத்தை ஆஷா தேவி குடும்பம் வசித்துவருகிறது. ரெய்னாவின் அத்தை ஆஷா தேவி, அவரது கணவர் அசோக் குமார் மற்றும் கவுஷல் குமார்(32), அபின் குமார்(24) என்ற 2 மகன்களுடன் நேற்றிரவு மொட்டை மாடியில் படுத்து உறங்கியுள்ளனர். அப்போது, நள்ளிரவில் அங்குவந்த அடையாளம் தெரியாத மர்மநபர்கள் சிலர், அவர்கள் மீது பலத்த ஆயுதங்களை கொண்டு கொடூரமாக தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த தாக்குதலில் ரெய்னாவின் மாமா அசோக் குமார் உயிரிழந்துவிட்டார். ரெய்னாவின் அத்தை ஆஷா தேவி பலத்த காயங்களுடன் உயிருக்கு போராடிவருவதாகவும், மகன்கள் இருவருக்கும் காயம் என்றும் இந்தி ஊடகம் தெரிவித்துள்ளது. அதனால் தான் ரெய்னா இன்று துபாயிலிருந்து இந்தியா திரும்பினார். 

சுரேஷ் ரெய்னா ஐபிஎல் 13வது சீசனிலிருந்து முழுவதுமாக விலகியுள்ளார். இந்த சீசனை பேராவலுடன் எதிர்நோக்கி காத்திருந்த ரெய்னாவுக்கு பெரும் சோகம் நடந்துள்ளது. சிரிப்புடன் அமீரகம் சென்ற ரெய்னா, தனது உறவினர்களுக்கு நடந்த கொடூரத்தால் அழுதுகொண்டே இந்தியா திரும்பியுள்ளார்.

click me!