சுரேஷ் ரெய்னாவுக்கு இப்படியொரு சோகம் வந்திருக்கக்கூடாது..! ஐபிஎல்லில் இருந்து விலக இதுதான் காரணம்

By karthikeyan VFirst Published Aug 29, 2020, 4:27 PM IST
Highlights

சுரேஷ் ரெய்னாவின் அத்தை குடும்பத்தினர் மீது மர்மநபர்கள் நடத்திய கொடூர தாக்குதலில் ரெய்னாவின் மாமா பரிதாபமாக உயிரிழந்துள்ளார். அதனால்தான் அவர் ஐபிஎல்லில்லிருந்து விலகி இந்தியா திரும்பியுள்ளார்.
 

ஐபிஎல் 13வது சீசன் வரும் செப்டம்பர் 19ம் தேதி ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்குகிறது. அதற்காக அனைத்து அணிகளும் அங்கு சென்றுள்ளன. கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளின்படி, ஐக்கிய அரபு அமீரகத்தில் அனைத்து அணிகளை சேர்ந்தவர்களும் தனிமைப்படுத்தப்பட்டு, கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு, பயிற்சியை தொடங்கிவருகின்றன. 

இந்நிலையில், சிஎஸ்கே அணியின் நட்சத்திர வீரர் சுரேஷ் ரெய்னா, திடீரென இன்று ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து கிளம்பி இந்தியா வந்தார். அவர் சொந்த காரணங்களுக்காக இந்தியா திரும்பியதாக சிஎஸ்கே அணி தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும் ஐபிஎல் 13வது சீசனிலிருந்து ரெய்னா முழுவதுமாக விலகியதாகவும், இந்த சீசனில் அவர் ஆடமாட்டார் என்று தகவல் வெளிவந்தது. ஆனால் ரெய்னா இந்தியா திரும்பியதற்கான காரணம் ஆரம்பத்தில் தெரிவிக்கப்படவில்லை. 

இந்நிலையில், அவர் இந்தியா திரும்பியதற்கான காரணம் வெளிவந்து பேரதிர்ச்சியையும் படுசோகத்தையும் அளித்துள்ளது. பஞ்சாப் மாநிலம் பதான்கோட் அருகேயுள்ள தரியல் என்ற கிராமத்தில் வசிக்கும், ரெய்னாவின் அத்தை குடும்பத்தினர் மீது நேற்று நள்ளிரவில் மர்ம நபர்கள் சிலர் ஆயுதங்களால் கொடூர தாக்குதல் நடத்தியதில், அவரது மாமா பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இந்த தகவலை இந்தி ஊடகம் வெளியிட்டுள்ளது. 

ரெய்னாவின் தந்தையின் சகோதரி(அத்தை) ஆஷா தேவி. அவரது கணவர் அஷோக் குமார். இந்த தம்பதிக்கு 32 வயதில் கவுஷல் குமார் மற்றும் 24 வயதில் அபின் குமார் என்ற 2 மகன்கள் உள்ளனர். பஞ்சாப் மாநிலம் பதான்கோட் அருகேயுள்ள தரியல் என்ற ஊரில் இவர்கள் வசித்துவருகின்றனர். நேற்றிரவு மொட்டை மாடியில் அனைவரும் படுத்து உறங்கியுள்ளனர். இந்நிலையில், நள்ளிரவில், அடையாளம் தெரியாத மர்மநபர்கள் சிலர், பலத்த ஆயுதங்களுடன், இந்த குடும்பத்தின் மீது கொடூர தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த தாக்குதலில் ரெய்னாவின் மாமா அசோக் குமார் உயிரிழந்துவிட்டார். ரெய்னாவின் அத்தை ஆஷா தேவி பலத்த காயங்களுடன் உயிருக்கு போராடிவருகிறார். மகன்கள் இருவருக்கும் பலத்த காயம் என்று இந்தி ஊடகம் தெரிவித்துள்ளது. 

இந்த கொடூர சம்பவத்தின் விளைவாகத்தான், ரெய்னா ஐபிஎல்லில்லிருந்து விலகி இந்தியா திரும்பியுள்ளார்.
 

click me!