லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸுக்கு எதிரான போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி, 20 ஓவரில் 182 ரன்கள் அடித்து 183 ரன்கள் என்ற சவாலான இலக்கை லக்னோவிற்கு நிர்ணயித்தது.
ஐபிஎல் 16வது சீசன் சுவாரஸ்யமான கட்டத்தில் இருக்கும் நிலையில், ஒவ்வொரு போட்டியுமே மிக முக்கியம். இன்று பிற்பகல் 3.30 மணிக்கு தொடங்கி நடந்துவரும் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் ஆடிவருகின்றன.
சன்ரைசர்ஸ் அணி இனிமேல் பிளே ஆஃபிற்கு முன்னேற வாய்ப்பில்லை என்பதால் இனிமேல் அந்த அணிக்கு இழப்பதற்கு எதுவுமில்லை. ஆனால் பிளே ஆஃபிற்கு முன்னேறும் வாய்ப்பை தக்கவைக்க லக்னோ அணி கண்டிப்பாக வெற்றி பெற்றே தீர வேண்டிய கட்டாயத்தில் ஆடிவருகிறது.
ஹைதராபாத்தில் நடந்துவரும் போட்டியில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் அணி கேப்டன் ஐடன் மார்க்ரம் பேட்டிங்கை தேர்வு செய்தார்.
IPL 2023: நீ நல்ல ஃபினிஷர் ஆகணும்னா இதை மட்டும் செய்..! ரிங்கு சிங்கிற்கு தல தோனியின் தரமான அட்வைஸ்
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி:
அபிஷேக் ஷர்மா, அன்மோல்ப்ரீத் சிங், ராகுல் திரிபாதி, ஐடன் மார்க்ரம் (கேப்டன்), ஹென்ரிச் கிளாசன், க்ளென் ஃபிலிப்ஸ், அப்துல் சமாத், டி.நடராஜன், மயன்க் மார்கண்டே, புவனேஷ்வர் குமார், ஃபஸல்ஹக் ஃபரூக்கி.
லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணி:
குயிண்டன் டி காக், கைல் மேயர்ஸ், க்ருணல் பாண்டியா (கேப்டன்), பிரெரக் மன்கத், மார்கஸ் ஸ்டோய்னிஸ், நிகோலஸ் பூரன், அமித் மிஷ்ரா, யஷ் தாகூர், ரவி பிஷ்னோய், யுத்விர் சிங், ஆவேஷ் கான்.
முதலில் பேட்டிங் ஆடிய சன்ரைசர்ஸ் அணியின் தொடக்க வீரர் அபிஷேக் ஷர்மா 7 ரன்களுக்கு ஆட்டமிழக்க, அதிரடியாக ஆடிய மற்றொரு தொடக்க வீரரான அன்மோல்ப்ரீத் சிங் 27 பந்தில் 36 ரன்களும், 3ம் வரிசையில் இறங்கிய ராகுல் திரிபாதி 13 பந்தில் 20 ரன்களும் அடித்தனர். கேப்டன் ஐடன் மார்க்ரம் 20 பந்தில் 28 ரன்கள் மட்டுமே அடித்து ஆட்டமிழந்தார்.
அதன்பின்னர் அதிரடியாக ஆடி அணியின் ஸ்கோரை உயர்த்திய ஹென்ரிச் கிளாசன் 29 பந்தில் 3 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்களுடன் 47 ரன்கள் அடித்து அரைசதத்தை தவறவிட்டு ஆட்டமிழந்தார். அப்துல் சமாத் தன் பங்கிற்கு 25 பந்தில் 4 சிக்ஸர்களுடன் 39 ரன்கள் அடிக்க, 20 ஓவரில் 182 ரன்களை குவித்த சன்ரைசர்ஸ் அணி, 183 ரன்கள் என்ற சவாலான இலக்கை லக்னோவிற்கு நிர்ணயித்துள்ளது.