
ஐபிஎல் 15வது சீசனுக்கான மெகா ஏலம் இன்று பிற்பகல் 12 மணிக்கு தொடங்கி பெங்களூருவில் நடந்துவருகிறது. இந்த ஏலத்தில் இஷான் கிஷன், ஷ்ரேயாஸ் ஐயர், தீபக் சாஹர், லாக்கி ஃபெர்குசன், பிரசித் கிருஷ்ணா, ஹர்ஷல் படேல், வனிந்து ஹசரங்கா ஆகிய வீரர்கள் ரூ.10 கோடிக்கு மேல் விலைபோன அதேவேளையில், ரெய்னா, ஸ்மித், மில்லர், மேத்யூ வேட், ஷகிப் அல் ஹசன் ஆகிய வீரர்கள் விலைபோகவே இல்லை.
ஏலம் ஆரம்பித்ததிலிருந்து மற்ற அணிகள் பரபரப்பாக வீரர்களை ஏலத்தில் எடுக்க, நீண்டநேரமாக எந்த வீரரையும் எடுக்காமல் இருந்த சன்ரைசர்ஸ் அணி, ரூ.10.75 கோடிக்கு எடுத்தது. விக்கெட் கீப்பர் - பேட்ஸ்மேனான அவருக்கு பெரிய தொகை கொடுத்து எடுத்தது. கேப்டன் வில்லியம்சன் (ரூ.14 கோடி), அப்துல் சமாத் (ரூ.4 கோடி) மற்றும் உம்ரான் மாலிக் (ரூ.4 கோடி) ஆகிய மூவரை மட்டுமே ஏலத்திற்கு முன்பாக தக்கவைத்த சன்ரைசர்ஸிடம் ரூ.68 கோடி கையிருப்பில் இருந்தது.
ஆனாலும் கோடிகளை அள்ளி எறியாமல் தங்களுக்கு தேவையான வீரர்கள் மீது மட்டுமே கவனம் செலுத்திய சன்ரைசர்ஸ் அணி, தமிழக வீரர்கள் மீது ஆர்வம் காட்டியது. தமிழகத்தை சேர்ந்த ஸ்பின் ஆல்ரவுண்டரான வாஷிங்டன் சுந்தரை ரூ. 8.75 கோடிக்கும், ஏற்கனவே தங்கள் அணியில் அங்கம் வகித்த தமிழகத்தை சேர்ந்த ஃபாஸ்ட் பவுலரான டி.நடராஜனை ரூ.4 கோடிக்கும் ஏலத்தில் எடுத்தது சன்ரைசர்ஸ்.
நடராஜன் ஏற்கனவே சன்ரைசர்ஸ் அணிக்காக சிறப்பாக விளையாடி பல வெற்றிகளில் பங்காற்றியிருக்கிறார். அந்த அணியின் செட்டப் புரிந்த வீரர் என்ற வகையில் அவரை எடுத்துள்ளது சன்ரைசர்ஸ் அணி. சன்ரைசர்ஸ் அணியின் பவுலிங் பயிற்சியாளர் முத்தையா முரளிதரன், லக்ஷ்மண் ஆகியோர் தமிழ் பேசுவார்கள் என்பதால் அவர்களுக்கு தமிழ் வீரர்களுடன் இணைந்து பணியாற்றுவது எளிது என்ற வகையிலும் தமிழ்நாட்டு வீரர்கள் மீது ஆர்வம் காட்டுகிறது சன்ரைசர்ஸ்.
அதுமட்டுமல்லாது சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் உரிமையாளர் தமிழர் என்பதால், தமிழ்நாட்டு வீரர்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது.