யாருப்பா உனக்கு மெசேஜ் பண்ணலைனு சொல்ற.. அவங்ககிட்ட நேரடியா கேட்க வேண்டியதுதானே? கோலியை விளாசிய கவாஸ்கர்

By karthikeyan VFirst Published Sep 6, 2022, 5:31 PM IST
Highlights

விராட் கோலி தனக்கு மெசேஜ் செய்யாமல் டிவியில் பேசியது யார் என்பதை தெரிவிக்க வேண்டும் என்று கவாஸ்கர் விளாசியுள்ளார்.
 

சமகால கிரிக்கெட்டின் தலைசிறந்த வீரர்களில் ஒருவர் விராட் கோலி. சர்வதேச கிரிக்கெட்டில் சதங்களையும் சாதனைகளையும் குவித்துவந்த விராட் கோலி, கடந்த 3 ஆண்டுகளாக பல இன்னல்களை சந்தித்துவருகிறார்.

சர்வதேச கிரிக்கெட்டில் 70 சதங்களை விளாசியுள்ள விராட் கோலி, கடந்த 3 ஆண்டுகளாக ஒரு சதம் கூட அடிக்கவில்லை. கடைசியாக 2019 நவம்பரில் சதமடித்தார். அதன்பின்னர் ஒரு சதம் கூட அடிக்கவில்லை. 

பேட்டிங்கில் சிறு வீழ்ச்சியை சந்தித்த விராட் கோலி, கேப்டன்சியிலும் வீழ்ச்சியை சந்தித்தார். கடந்த ஆண்டு நடந்த டி20 உலக கோப்பையுடன் டி20 கேப்டன்சியிலிருந்து விடைபெற்ற கோலி, அதைத்தொடர்ந்து ஒருநாள் மற்றும் டெஸ்ட் அணிகளின் கேப்டன்சியிலிருந்தும் திடீரென விலகினார்.

இதையும் படிங்க - இலங்கைக்கு எதிரான போட்டிக்கான இந்திய அணியில் அதிரடி மாற்றங்கள்! சீனியர் வீரருக்கு அழைப்பு.. உத்தேச ஆடும் லெவன்

கேப்டன்சியிலிருந்து விலகி, கேப்டன்சி அழுத்தத்திலிருந்து விடுபட்ட பின்னரும் அவரது பேட்டிங்கில் பெரிய முன்னேற்றம் இல்லை. இதையடுத்து, கோலியின் ஃபார்ம், வெஸ்ட் இண்டீஸ் மற்றும் ஜிம்பாப்வே தொடர்களில் ஆடாதது என அவர் மீதான விமர்சனங்கள் வலுத்துக்கொண்டே வந்தன.

விராட் கோலிக்கு பேட்டிங் ஆலோசனைகள், அவர்  செய்யும் தவறு என்ன, அதிலிருந்து விடுபடுவது எப்படி என்றெல்லாம் முன்னாள் வீரர்கள் பலரும் அறிவுரைகளும் ஆலோசனைகளும் கூறிவந்தனர்.

இந்நிலையில், ஆசிய கோப்பையில் சிறப்பாக ஆடிவரும் விராட் கோலி, பாகிஸ்தானுக்கு எதிரான சூப்பர் 4 சுற்று போட்டியில்  மற்ற வீரர்கள் ஆட்டமிழந்தபோதிலும், நிலைத்து நின்று ஆடி அரைசதம் அடித்து 60 ரன்கள் அடித்து இந்திய அணி 181 ரன்கள் அடிக்க உதவினார். ஆனாலும் இந்திய அணி அந்த போட்டியில் தோற்றது. ஆனால் கோலியின் சிறப்பான பேட்டிங் இந்திய அணிக்கும் ரசிகர்களுக்கும் நிம்மதியளித்தது.

அந்த போட்டிக்கு பின் செய்தியாளர்களை சந்தித்த விராட் கோலி, தன்னை பற்றி பேசுபவர்கள் குறித்து பேசினார். இதுகுறித்து பேசிய விராட் கோலி, நான் டெஸ்ட் கேப்டன்சியிலிருந்து விலகிய பின், என்னுடன் ஆடிய வீரர்களில் எனக்கு மெசேஜ் செய்த ஒரே நபர் தோனி மட்டும் தான். நிறைய பேருக்கு எனது மொபைல் எண் தெரியும். ஆனால் டிவியில் எனக்கு பல ஆலோசனைகளை வழங்குபவர்கள், நேரடியாக என்னிடம் கூறலாம். எனது ஆட்டத்தில் நான் மேம்பட வேண்டும் என்று விரும்பினால், அவர்களிடம் எனது மொபைல் எண் இருக்கிறது; நேரடியாக என்னிடம் கூறியிருக்கலாம். ஆனால் அதைவிடுத்து டிவியில் கூறுவதால் என்ன பலன்..? என்று விராட் கோலி தெரிவித்திருந்தார்.

இதையும் படிங்க - பக்கா பிளானுடன் ஐபிஎல்லில் இருந்து ஓய்வு பெற்ற சுரேஷ் ரெய்னா..! அந்நிய மண்ணில் அதகளம் செய்யப்போகும் சின்ன தல

விராட் கோலியின் பேச்சு குறித்து கருத்து தெரிவித்துள்ள சுனில் கவாஸ்கர்,  விராட் கோலி யாரை குறிப்பிட்டார் என்பதை கண்டுபிடிப்பது கடினம். அவர் யார் பெயரையாவது குறிப்பிட்டு கூறியிருந்தால், அவரிடம் நேரடியாக சென்று கேட்கலாம். டெஸ்ட் கேப்டன்சியிலிருந்து விலகியபின், தோனி மட்டுமே தனக்கு மெசேஜ் செய்ததாக கோலி கூறியதாக அறிந்தேன். 

கோலி அவருடன் இணைந்து ஆடிய முன்னாள் வீரர்களை பற்றி கூறியிருப்பாரேயாயின், அவருடன் ஆடிய வீரர்களில் எத்தனை பேர் இப்போது டிவியில் வர்ணனை செய்கிறார்கள். கோலி குறிப்பிடுவது யார் என்பதை வெளிப்படையாக சொல்லலாமே..? அல்லது அந்த நபரிடமே, நீங்கள் ஏன் மெசேஜ் செய்யவில்லை என்று கேட்கலாமே..?என்று கேள்வி எழுப்பியுள்ளார் கவாஸ்கர்.

மேலும் தொடர்ந்து பேசிய கவாஸ்கர், என்ன மெசேஜை எதிர்பார்க்கிறார் கோலி..? ஊக்கப்படுத்தும் மெசேஜா..? கேப்டன்சியிலிருந்து விலகிய அவருக்கு எதற்கு ஊக்கம்..? அந்த சாப்டர் ஏற்கனவே முடிந்துவிட்டது என்று கவாஸ்கர் கூறினார்.
 

click me!