
டி20 உலக கோப்பைக்கான இந்திய அணியில் இடம்பிடிக்க வேண்டும் என்பதற்காகவே ஐபிஎல்லில் சில வீரர்கள் சிறப்பாக ஆடினர். அதன்விளைவாக தென்னாப்பிரிக்கா, அயர்லாந்து அணிகளுக்கு எதிரான டி20 அணியில் இடத்தையும் பிடித்தனர். அப்படியான வீரர்களில் ஒருவர் தினேஷ் கார்த்திக். ஐபிஎல்லில் ஆர்சிபி அணிக்காக அபாரமாக பேட்டிங் ஆடி பல போட்டிகளை வெற்றிகரமாக முடித்து கொடுத்து சிறந்த ஃபினிஷராக தன்னை நிலைநிறுத்திக்கொண்டார்.
அதன்விளைவாக தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடரில் ஆடிவருகிறார். 4வது டி20 போட்டியில் அதிரடியாக ஆடி 26 பந்தில் அரைசதம் அடித்தார். 37 வயதான தினேஷ்கார்த்திக்கிற்கு இதுதான் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் முதல் அரைசதம் ஆகும். 15 ஓவரில் 96 ரன்கள் மட்டுமே அடித்திருந்த இந்திய அணி 20 ஓவரில் 169 ரன்களை எட்ட தினேஷ் கார்த்திக் தான் காரணம்.
தினேஷ் கார்த்திக் என்னதான் நன்றாக ஆடினாலும், டி20 உலக கோப்பைக்கான இந்திய அணியின் ஆடும்லெவனில் அவருக்கு இடம் கிடைக்காது என்றும், ஆடும் லெவனில் இடம் பெற வாய்ப்பில்லாத அவரை அணியில் எடுப்பதில் அர்த்தமில்லை என்றும் கௌதம் கம்பீர் கருத்து கூறியிருந்தார்.
கௌதம் கம்பீரின் கருத்துடன் முரண்பட்டுள்ளார் சுனில் கவாஸ்கர். இதுகுறித்து பேசிய கவாஸ்கர், தினேஷ் கார்த்திக்கிற்கு எப்படியும் இந்திய அணியின் ஆடும் லெவனில் இடம் கிடைக்கப்போவதில்லை; அதனால் அவரை அணியில் எடுப்பதில் அர்த்தமில்லை என்று சிலர் பேசுவதை அறிந்தேன். ஏன் தினேஷ் கார்த்திக் ஆடும் லெவனில் இருக்கமாட்டார்..? அவர் இந்திய அணிக்கு தேவையானவர். அவரது ஃபார்மை பார்க்க வேண்டும். வெறும் புகழை மட்டும் வைத்து வீரர்களை தேர்வு செய்ய முடியாது. செம ஃபார்மில் இருக்கும் தினேஷ் கார்த்திக்கை எப்படி ஒதுக்க முடியும்?
தினேஷ் கார்த்திக்கிற்கு போதுமான வாய்ப்புகள் கிடைத்ததில்லை. 6-7ம் வரிசைகளில் அவர் பேட்டிங் ஆடுகிறார். எனவே அவர் எப்போதுமே அரைசதம் அடிக்கவேண்டும் என்று எதிர்பார்க்க முடியாது. 20 பந்தில் 40 ரன்கள் என்கிற அளவில் தொடர்ச்சியாக அடித்து கொடுக்கிறார். அதனால் டி20 உலக கோப்பைக்கான அணியில் கடும் போட்டியாளராக திகழ்கிறார். தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 3வது போட்டியில் அவர் ஆடிய விதத்தை பாருங்கள். தினேஷ் கார்த்திக்கின் வயதை பார்க்காதீர்கள். அவரது ஆட்டத்திறனை பாருங்கள் என்று கவாஸ்கர் கருத்து கூறியுள்ளார்.
-