
டி.ஆர்.எஸ் எடுப்பதில் வல்லவர் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி. அவர் விக்கெட் கீப்பர் என்பதால் டி.ஆர்.எஸ்-இல் மிகச்சரியாக முடிவெடுப்பார். அவர் கேப்டன்சியிலிருந்து விலகிய பின்னரும், கோலி கேப்டனாக இருந்தபோது டி.ஆர்.எஸ் விவகாரத்தில் கேப்டன் கோலியை சரியாக வழிநடத்துவார்.
தோனி ரிவியூ எடுத்தால் பெரும்பாலும் தவறாகவே இருக்காது. எனவே டி.ஆர்.எஸ் என்பதற்கு தோனி ரிவியூ சிஸ்டம் என பெயர் சூட்டப்பட்டு தோனிக்கு புகழாரம் சூட்டப்பட்டது.
டி.ஆர்.எஸ் என்றாலே தோனி தான் என்ற பெருமை இருந்துவந்த நிலையில், அதே வழித்தோன்றலில் ரோஹித்தும் டி.ஆர்.எஸ் விஷயத்தில் சிறப்பாக செயல்படுகிறார்.
வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் 3 ரிவியூ வெற்றிகரமாக எடுத்தார் ரோஹித் சர்மா. வெஸ்ட் இண்டீஸ் இன்னிங்ஸின் 12வது ஓவரில் வாஷிங்டன் சுந்தர் வீசிய பந்து டேரன் பிராவோவின் கால்காப்பை தாக்கியது. அதற்கு அம்பயர் அவுட் கொடுக்காத நிலையில், ரோஹித் சர்மா ரிவியூ எடுத்தார். பந்து பேட்டில் படாமல் கால்காப்பில் பட்டதுடன், ஸ்டம்ப்பையும் தாக்கியது உறுதியானதால் டேரன் பிராவோ ஆட்டமிழந்தார்.
அடுத்ததாக யுஸ்வேந்திர சாஹல் வீசிய இன்னிங்ஸின் 20வது ஓவரில் நிகோலஸ் பூரன் விக்கெட்டுக்கு அம்பயர் அவுட் கொடுக்காத நிலையில், அதற்கும் நம்பிக்கையுடன் ரிவியூ எடுத்து வெற்றி கண்டார் ரோஹித்.
பின்னர், சாஹலின் பவுலிங்கில் ப்ரூக்ஸ் அவுட் சைட் எட்ஜ் வாங்க, அதை விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் கேட்ச் பிடித்தார். அதற்கும் அம்பயர் அவுட் கொடுக்கவில்லை. ஆனால் விராட் கோலி ரோஹித்திடம் கண்டிப்பாக ரிவியூ எடுக்குமாறு வலியுறுத்த ரோஹித் ரிவியூ எடுத்தார். அதுவும் அவுட். எனவே 3 முறை ரிவியூ எடுத்து 3 முறையும் வெற்றி கண்டார் ரோஹித்.
எனவே DRS என்றால் Dhoni Referral System என்று பெயர் சூட்டியிருந்தேன். இப்போது அந்த பெயரை Definitely Rohit System என மாற்றுவதாக கூறி ரோஹித்தின் ரிவியூ எடுக்கும் திறனுக்கு புகழாரம் சூட்டியுள்ளார் கவாஸ்கர்.