தம்பி இதெல்லாம் வேண்டாத வேலை.. சிராஜின் செயலால் கவாஸ்கர் அதிருப்தி

Published : Jan 01, 2022, 05:26 PM IST
தம்பி இதெல்லாம் வேண்டாத வேலை.. சிராஜின் செயலால் கவாஸ்கர் அதிருப்தி

சுருக்கம்

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் டெம்பா பவுமாவை நோக்கி தேவையில்லாத த்ரோ அடித்த முகமது சிராஜின் செயலை விமர்சித்துள்ளார் சுனில் கவாஸ்கர்.  

இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையேயான 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் டெஸ்ட் கடந்த 26ம் தேதி தொடங்கி நடந்தது. செஞ்சூரியனில் நடந்த இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 327 ரன்கள் அடித்தது. தென்னாப்பிரிக்க அணி முதல் இன்னிங்ஸில் 197 ரன்கள் மட்டுமே அடித்தது. 

130 ரன்கள் முன்னிலையுடன் 2வது இன்னிங்ஸை ஆடிய இந்திய அணி 174 ரன்கள் அடிக்க, 305 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய தென்னாப்பிரிக்க அணி வெறும் 191 ரன்களுக்கு சுருண்டு 113 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது. இந்த போட்டியில் வெற்றி பெற்ற இந்திய அணி 1-0 என டெஸ்ட் தொடரில் முன்னிலை வகிக்கிறது.

இந்திய அணியின் ஃபாஸ்ட் பவுலிங் சிறப்பாக இருந்ததால் தான், இந்திய அணியால் தென்னாப்பிரிக்காவை அதன் சொந்த மண்ணில் வீழ்த்த முடிந்தது. அதுவும் தென்னாப்பிரிக்க அணியின்  கோட்டையான செஞ்சூரியனில் அந்த அணியை வீழ்த்திய முதல் ஆசிய அணி என்ற சாதனையை படைத்தது இந்திய அணி.

இந்த போட்டியில் இந்திய அணி சார்பில் ஷமி அபாரமாக பந்துவீசி அதிகபட்சமாக 8 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். பும்ரா 2 இன்னிங்ஸ்களிலும் தலா 2 விக்கெட்டுகள் என மொத்தமாக 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். முகமது சிராஜ் 3 விக்கெட் வீழ்த்தினார்.

முகமது சிராஜ் 2வது இன்னிங்ஸில் தேவையில்லாத ஒரு சம்பவத்தை செய்தார். ஃபாஸ்ட் பவுலர்கள் பொதுவாகவே களத்தில் மிகவும் ஆக்ரோஷமாக இருப்பார்கள். பேட்ஸ்மேன்கள் பந்தை பவுலர்களுக்கு நேராக அடித்தால், பந்தை பிடித்து த்ரோ விடுவதை மிரட்டுவதெல்லாம் வழக்கம்தான். ஆனால் சில சமயங்களில் அவர்களையும் மீறி பந்து கையிலிருந்து வெளிவந்து பேட்ஸ்மேன்களை தாக்கும். சில சமயங்களில் பவுலர்கள் வேண்டுமென்றே விட்டெறிவார்கள்.

அந்தவகையில், இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையேயான டெஸ்ட் போட்டியின் கடைசி நாள் ஆட்டத்தில் ஒருமுனையில் விக்கெட்டுகள் சரிந்தாலும் மறுமுனையில் டெம்பா பவுமா மட்டும் நங்கூரம் போட்டு நின்றார். இதனால் அவரை வீழ்த்த முடியாத விரக்தியை வெளிப்படுத்தும் விதமாக அவர் அடித்த பந்தை பிடித்து நேராக அவர் மீது வீசினார் சிராஜ். சிராஜ் விட்டெறிந்த பந்து, பவுமாவின் கணுக்காலில் அடித்தது. உடனடியாக அவரிடம் சிராஜ் மன்னிப்பு கேட்டார். ஆனாலும் அது தேவையில்லாத, விரும்பத்தகாத செயல் தான். இதையடுத்து அந்த ஓவர் முடிந்ததும், ஃபிசியோ களத்திற்கு வந்து பவுமாவை பரிசோதனை செய்துவிட்டு சென்றனர். ஆனால் பவுமாவிற்கு காயம் எதுவும் ஏற்படவில்லை.

இந்நிலையில், இந்த சம்பவம் குறித்து பேசியுள்ள சுனில் கவாஸ்கர், பவுமா ரன் ஓட முயற்சிக்கவே இல்லை.  சிராஜ் கொஞ்சம் ஆவேசமடைந்துவிட்டார். பேட்ஸ்மேன் ரன் ஓட முயன்று, அந்த த்ரோ அடித்திருந்தால் அதை புரிந்துகொள்ளலாம். ஆனால் அவர் ரன் ஓடவே முயற்சி செய்யவில்லை. எனவே அந்த த்ரோ அடிப்பதற்கான அவசியமே இல்லை என்று கவாஸ்கர் கருத்து கூறியுள்ளார்.
 

PREV
click me!

Recommended Stories

பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் ஐபிஎல் போட்டிகள் நடக்கும்..! ஆர்சிபி ரசிகர்களுக்கு குட் நியூஸ்!
ஆஷஸ் 2வது டெஸ்ட்.. இங்கிலாந்தை மீண்டும் அசால்ட்டாக ஊதித்தள்ளிய ஆஸ்திரேலியா.. பிரம்மாண்ட வெற்றி!