#AUSvsIND இந்திய வீரர்களை விமர்சிக்காத கவாஸ்கரின் நேர்மையான, தெளிவான பார்வை

By karthikeyan VFirst Published Dec 19, 2020, 10:56 PM IST
Highlights

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2வது இன்னிங்ஸில் இந்திய அணியின் மோசமான பேட்டிங்கிற்கு இந்திய வீரர்களை குறை சொல்ல முடியாது என்று கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.
 

இந்தியா ஆஸ்திரேலியா இடையேயான  முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது. அடிலெய்டில் பகலிரவு டெஸ்ட் போட்டியாக நடந்த இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி, முதல் இன்னிங்ஸில் 244 ரன்கள் அடித்தது.

இதையடுத்து முதல் இன்னிங்ஸை ஆடிய ஆஸ்திரேலிய அணியை 191 ரன்களுக்கு சுருட்டி, 53 ரன்கள் முன்னிலை பெற்ற இந்திய அணி, யாருமே சற்றும் எதிர்பார்த்திராத வகையில், 2வது இன்னிங்ஸில் வெறும் 36 ரன்களுக்கு சுருண்டது. 

2வது இன்னிங்ஸில் இந்திய அணியில் ஒரு வீரர் இரட்டை இலக்கத்தைக்கூட எட்டவில்லை. புஜாரா, ரஹானே, அஷ்வின் ஆகிய மூவரும் டக் அவுட்டானார்கள். மற்ற அனைவருமே ஒற்றை இலக்கத்தில் அவுட்டாகினர். ஆஸி., அணி சார்பில் அதிகபட்சமாக ஹேசில்வுட் ஐந்து விக்கெட்டுகளையும், கம்மின்ஸ் 4 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். 2வது இன்னிங்ஸில் வெறும் 36 ரன்களுக்கு சுருண்ட இந்திய அணி நிர்ணயித்த 90 ரன்கள் என்ற இலக்கை ஆஸி., அணி எளிதாக அடித்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்த போட்டியின் 2வது இன்னிங்ஸில் இந்திய வீரர்கள் படுமோசமாக பேட்டிங் ஆடி டெஸ்ட் கிரிக்கெட்டின் ஒரு இன்னிங்ஸில் மிகக்குறைவான ஸ்கோரை பதிவு செய்தபோதிலும், அதற்கு இந்திய வீரர்களை குறை சொல்ல முடியாது என்று கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பேசியுள்ள கவாஸ்கர், மிகக்குறைவான ஸ்கோரை பதிவு செய்யும்போது, ஒரு அணிக்கு அது மிக மோசமான உணர்வாக இருக்கும். அதை பார்க்க யாரும் விரும்பமாட்டார்கள். இந்திய அணியாக இல்லாமல், வேறு எந்த அணி, இந்த மாதிரியான பவுலிங்கை எதிர்கொண்டிருந்தாலும், இதுதான் கதி. இந்திய பேட்ஸ்மேன்கள் மீது பழியை தூக்கி போடுவது சரியல்ல. ஏனெனில் ஆஸி., பவுலர்கள் மிகச்சிறப்பாக பந்துவீசினர் என்று கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.
 

click me!