
இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையேயான 2வது டெஸ்ட் போட்டி ஜோஹன்னஸ்பர்க்கில் இந்திய நேரப்படி பிற்பகல் 1.30 மணிக்கு தொடங்கி நடந்துவருகிறது. இந்த போட்டியில் காயம் காரணமாக கோலி ஆடாததால் ராகுல் கேப்டன்சி செய்கிறார். டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் ஆடியது.
தொடக்க வீரர் மயன்க் அகர்வால் நன்றாக தொடங்கினார். ஆனால் 26 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அதன்பின்னர் சீனியர் வீரர்களான புஜாரா (3) மற்றும் ரஹானே (0) ஆகிய இருவருமே சொதப்பினர். அதன்பின்னர் 4வது விக்கெட்டுக்கு ராகுலுடன் ஜோடி சேர்ந்த ஹனுமா விஹாரி சிறிய பார்ட்னர்ஷிப் அமைத்தார். ஆனால் கிடைத்த தொடக்கத்தை பெரிய இன்னிங்ஸாக மாற்றத்தவறி 20 ரன்களுக்கு விஹாரி ஆட்டமிழந்தார்.
ஒருமுனையில் விக்கெட்டுகள் சரிந்தாலும் மறுமுனையில் நிலைத்து ஆடிய கேஎல் ராகுல் அரைசதம் அடித்தார். ஆனால் அதன்பின்னர் பெரிய இன்னிங்ஸ் ஆடாமல் 50 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். ரிஷப் பண்ட் நிதானமாக ஆட, அஷ்வின் அதிரடியாக ஆடினார். டீ பிரேக்கிற்கு பின்னர் ரிஷப் பண்ட் 17 ரன்களுக்கு ஆட்டமிழக்க, ஷர்துல் தாகூர் ரன்னே அடிக்காமல் டக் அவுட்டானார். முகமது ஷமி 9 ரன்னில் ஆட்டமிழந்தார். அதிரடியாக ஆடிய அஷ்வின் 46 ரன்களுக்கு ஆட்டமிழந்து அரைசதத்தை தவறவிட்டார். ஜஸ்ப்ரித் பும்ரா 11 பந்தில் 2 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸருடன் 14 ரன்கள் அடித்து ஆட்டமிழக்க, 202 ரன்களுக்கு ஆல் அவுட்டானது இந்திய அணி.
மிடில் ஆர்டரில் முக்கியமான மற்றும் சீனியர் வீரர்களான புஜாரா மற்றும் ரஹானே ஆகிய இருவரும் படுமோசமாக ஆட்டமிழந்ததால் தான் இந்திய அணி வெறும் 202 ரன்களுக்கு சுருண்டது.
புஜாரா, ரஹானே ஆகிய 2 சீனியர் வீரர்களும் கடந்த 2 ஆண்டுகளாக சரியாக விளையாடவில்லை. ஆனாலும் அவர்களின் கடந்த கால பங்களிப்பை மனதில் வைத்து, அதற்கு மதிப்பளிக்கும் விதமாக அவர்களுக்கு இந்திய டெஸ்ட் அணியில் தொடர்ந்து வாய்ப்பளிக்கப்படுகிறது. ஆனால் புஜாரா மற்றும் ரஹானே ஆகிய இருவரும், தங்களுக்கு கிடைக்கும் வாய்ப்புகள் மிக அதிகமானவை என்று தெரிந்தும் கூட தொடர்ந்து சொதப்புவதால், வாழ்வா சாவா என்ற நிலையில், கண்டிப்பாக பெரிய இன்னிங்ஸ் ஆட வேண்டிய கட்டாயத்தில் இருந்தனர். ஆனால் இந்த போட்டியிலும் ஏமாற்றமளித்தனர்.
இந்நிலையில், இந்த போட்டியின் 2வது இன்னிங்ஸ்தான் அவர்கள் இருவருக்குமான கடைசி வாய்ப்பு என்று கவாஸ்கர் கூறியுள்ளார். இதுகுறித்து பேசிய கவாஸ்கர், இந்த டெஸ்ட்டின் அடுத்த இன்னிங்ஸ் மட்டுமே புஜாரா மற்றும் ரஹானே ஆகிய இருவருக்கும் அவர்களது டெஸ்ட் கெரியரை காப்பாற்றிக்கொள்ள கடைசி வாய்ப்பு. தொடர்ச்சியாக சொதப்பிவரும் அவர்களுக்கு அவர்களது டெஸ்ட் கெரியரை காப்பாற்றிக்கொள்ள இன்னும் ஒரேயோரு இன்னிங்ஸ் மட்டுமே வாய்ப்பு. அதிலும் சொதப்பினால் அணியில் அவர்களுக்கான இடம் சந்தேகம் தான் என்று கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.